Thursday, November 21, 2013

பாம்பன் சுவாமிகளின் அருள் மழை – உண்மை சம்பவம்

image

image

image

நாம் மேலே காணுவது ஞானபானு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ஆவார்.  நம்மில் பலர் இவரைப் பற்றி அறிந்திருப்பார்கள்.  இவர் ஒரு மூர்த்தி கொள்கையை உடையவர்.  முருக வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்.  இவருக்கு அகத்தியர் மற்றும் முருகர் ஆகியோர் நேரில் காட்சி தந்துள்ளனர்.  நம் வாழ்வின் துயர் தீர இவர் பல பாடல்களை உலக மக்களின் நலன் வேண்டி இயற்றியுள்ளார்.  இவர் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு வயதான பெண்மணியின் வாழ்க்கையில் ஏற்பட்ட உண்மை சம்பவத்தை  இங்கே பதிவாக வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறது.

நாம் குறிப்பிட்ட அந்த வயதான பெண்மணி சுமார் 63 வயது கொண்டவர்.  முருகனின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர்.  பாம்பன் சுவாமிகளின் மேல் மாறா பக்தி கொண்டவர்.  அவர் எந்த கோவிலுக்கு சென்றாலும் அவரின் முன்னே முருகன் இருப்பதாக எண்ணியே வழிபடுவாராம்.  குறிப்பாக திருச்செந்தூர் முருகன் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்.  அவர் 10 வகுப்பு வரை படித்தவர்.  அந்த கால 10 வகுப்பு.  பாம்பன் சுவாமிகளின் கருணையினால் அவரால் இயற்றப்பட்ட குமாரஸ்தவம், சண்முக கவசம், பகை கடிதல், மயூர பந்தம், சஸ்திர பந்தம், துவிதநாக பந்தம், கமல பந்தம், ரத பந்தம், சதுரங்க பந்தம் மற்றும் சண்முக நாமாவளி இவற்றை தன்னுடைய 63 ம் வயதில் மனப்பாடம் செய்து பாடும் திறமை பெற்றார்.  அசைவ உணவினை விட்டு விட்டார்.

அவருக்கு கனவில் முருகனும் அவரது வாகனமும் வந்து அருள் பாலித்தனர்.  இதுவே பாம்பன் சுவாமிகளின் அருளுக்கு மிகச்சிறந்த உதாரணம்.  தன்னுடைய உடல் பிணிகளை இறைவன் அருளால் போக்கிக் கொண்டார்.    அவருக்கு உடல் வலிமையைக் காட்டிலும் மன வலிமையே அதிகம்.  பாம்பன் சுவாமிகள் இயற்றிய அனைத்துப் பாடல்களையும் மனப்பாடம் செய்யும் நோக்கம் கொண்டவர்.  தூங்க செல்லும் போதும் கூட பாம்பன் சுவாமிகள் இயற்றிய பாடல்களின் புத்தகம் அவரது கையில் இருக்கும்.  கனவிலும், நனவிலும் அறுமுகக் கடவுளை துதிக்கும் இயல்பினை உடையவர்.  படிப்படியாக அவரது வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டன.  என்ன தான் மாற்றங்கள் இருந்தாலும் கர்ம வினைகளின் தாக்கம் அவரை விட வில்லை.

முருகனின் அருள் பெற்ற அவர் கடந்த தீபாவளியன்று அசைவ உணவை சாப்பிட்டு இருக்கிறார்.  சாப்பிட்ட நேரத்திலிருந்து சுமார் 2 நாட்கள் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார்.  அவரால் எதுவும் சாப்பிட முடிய வில்லை.  படுக்கையை விட்டு அவரால் எழ முடியவில்லை.  அவ்வாறு இருக்கும் சமயம் எம்மை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.  உடல்நிலை பாதிப்பினை மட்டும் என்னிடம் கூறினார்.  அவர் அசைவம் சாப்பிட்டதை நான் உணர்ந்து கொண்டேன்.  அவரிடம் அசைவம் சாப்பிட்டீர்களா?  என கேட்டேன்.  அவர் தயங்கிய படியே உண்மையை ஒப்புக் கொண்டார்.  பிறகு அவர் தன் வாழ்நாளில் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று முருகனிடமும், பாம்பன் சுவாமிகளிடமும் வேண்டி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.  பிறகு சுமார் அரை மணி நேரத்தில் அவரது உடல் நிலை குணமாகியது.  இதை அவரை நேரில் சந்திக்கும் போது என்னிடம் தெரிவித்தார்.

தற்போது நல்ல உடல் நிலையுடன் காணப்படுகிறார்.  அவருக்கு உடலில் வலிமை தான் இல்லை.  நோய்கள் அவரை அணுக வில்லை.  முருகனின் அருளையும், பாம்பன் சுவாமிகளின் அருளையும் நினைத்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.  இப்போது பாம்பன் சுவாமிகளின் அனைத்துப் பாடல்களையும் அச்சிட்டு தருமாறு அவர் என்னிடம் கேட்டிருக்கிறார்.  இப்பதிவினை எழுதும் போது கூட அவர் ஏதாவது பாம்பன் சுவாமிகளின் பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டிருப்பார் என்றே எண்ணுகிறேன்.  பாம்பன் சுவாமிகளின் அருள் மழைக்கு பாத்திரமான அடியார்களுள் இவரும் ஒருவர்.  இது போல் ஆனால் வெளியே தெரியாமல் இருக்கும் முருகனின் அடியார்கள் எண்ணிக்கை எண்ணிலடங்காது.

அவரின் அனுமதி பெற்று பாம்பன் சுவாமிகளின் அருளினை உலகலறிய செய்ய இப்பதிவு ஆன்மீகச்சுடர் வலைப்பூவில் வெளியிடப்படுகிறது.

 

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்; நெஞ்சில்

ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்

முருகா வேன்றோது வார்முன்.

ஓம் சரவணபவ

ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!

 

 

No comments:

Post a Comment