Showing posts with label சக்தி. Show all posts
Showing posts with label சக்தி. Show all posts

Friday, January 16, 2015

2015 ம் ஆண்டு தேய்பிறை நவமி வரும் நாட்கள்

goddess durga

Theipirai Navami - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் தும் துர்க்காயை நமஹ

 

Thursday, March 13, 2014

நவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்

shri-lalitha-devi1

சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும்.  சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரனங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே.  பராசக்தியின் வடிவங்கள் பலப்பல.  ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாக பராசக்தி விளங்குகிறாள்.  அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.

நவசக்தியரின் பெயர்கள் பின்வருமாறு:-

  1. மனோன்மணி
  2. சர்வபூதமணி
  3. பலப்பிரதமணி
  4. கலவிகரணி
  5. பலவிகரணி
  6. காளி
  7. ரவுத்திரி
  8. சேட்டை
  9. வாமை

நவசக்தியரின் இயல்புகளும், தொழில்களும்:-

வ.எண்

நவசக்தியின் பெயர்

இயல்பு மற்றும் தொழில்

1. மனோன்மணி

பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு பக்குமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன் சேர்க்கும் வல்லமை கொண்டவள்.

2. சர்வபூதமணி

உலக உயிர்களில் கலந்து நின்று உயிர்களின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள்.

3. பலப்பிரதமணி

சூரியனிடம் கலந்து நின்று தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து ஆக்கம் தரும் வல்லமை கொண்டவள்.

4. கலவிகரணி

வானத்தில் கலந்து நின்று எல்லா பொருட்களையும் தன்பால் ஏற்று தன்னுடன் கலந்து இணைந்து நிற்க அருளும் வல்லமை கொண்டவள்.

5. பலவிகரணி

சந்திரனில் கலந்து நின்று அமுதத்தை பொழிந்து தாவரக்கூட்டங்கள் உயிர் பெற்று தழைத்தோங்கத் துணை நிற்கும் ஆற்றல் கொண்டவள்.

6. காளி

காற்றில் கலந்து நின்று உயிர்களுக்கு பிராண வாயுவை அளித்து உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.

7. ரவுத்திரி

நெருப்பில் கலந்து நின்று நெருப்பிற்கு வெம்மையை வழங்கி யாவற்றையும் அழிக்கும் வல்லமை கொண்டவள்.

8. சேட்டை

நீரினில் கலந்து அதற்கு திரவ நிலையையும், சுவையையும் வழங்கி உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.

9. வாமை

மண்ணில் கலந்து நின்று ஐம்பூதங்களின் செயல்களையும் ஒருங்கே செய்து அருள் பாலிக்கும் வல்லமை கொண்டவள்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் நவசக்தியே போற்றி…! போற்றி…!! போற்றி…!!!

Thursday, January 23, 2014

Tuesday, January 21, 2014

Tuesday, December 17, 2013

நவதுர்க்கையின் வடிவங்கள்

Happy-Dussehra-Greeting-Card-Maa-Durga-Facemaa-durga-wallppaer

வ.எண் துர்க்கையின் பெயர் வடிவத்தின் விளக்கம்
1. வன துர்க்கை வனங்களில் உறைந்திருப்பவள்
2. ஜல துர்க்கை நீரில் உறைந்திருப்பவள்
3. வன்னி துர்க்கை மரத்தினில் உறைந்திருப்பவள்
4. தூல துர்க்கை மண்ணில் உறைந்திருப்பவள்
5. விஷ்ணு துர்க்கை ஆகாயத்தில் உறைந்திருப்பவள்
6. பிரம்ம துர்க்கை படைப்பு தொழிலுக்கு துணை செய்பவள்
7. சிவ துர்க்கை அழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள்
8. மகா துர்க்கை சகல பாக்கியங்களைத் தருபவள்
9. சூலினி துர்க்கை சூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள்

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் தும் துர்க்காயை நமஹ

 

Monday, December 16, 2013

குழந்தைகளைக் காக்கும் தெய்வம் - பெரியாச்சியம்மன்

Periachi

பெரியாச்சியம்மன் நம் தமிழ்நாட்டின் காவல் தெய்வங்களில் முக்கிய தெய்வம் ஆகும்.  நம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் நாடுகளிலும் வணங்கி போற்றப்படும் தெய்வம் பெரியாச்சி ஆவாள்.  இவள் சக்தியின் வடிவம்.  தீமையை அழிக்க வந்த காளியின் மறு உருவம் ஆவாள்.  தம்மை அண்டியவர்களின் துயரினை களைந்து அருள் பாலிக்கும் உன்னத தெய்வம் பெரியாச்சியம்மன் ஆவாள்.

பெரியாச்சியம்மனின் தோற்றம் பற்றிய ஒரு கிராமிய கதை ஒன்று உண்டு.  அந்த கதையின் படி பாண்டிய நாட்டினை வல்லாளன் என்ற ஒரு அரசன் ஆண்டு வந்தான்.  அவன் கொடுங்கோல் அரசன்.  அவன் தன் மக்களை துன்புறுத்தி வந்தான்.  தன் நாட்டு மக்களை மட்டுமல்லாமல் முனிவர்களையும், சாதுக்களையும், ரிஷிகளையும் கூட துன்புறுத்தி வந்தான்.  தீமையின் மொத்த உருவமான அந்த அரசன் அரக்கர்களையும் தன் வசம் வைத்திருந்தான்.  அதனால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.

அவனது கொடுமைகளிலிருந்து விடுபட மக்களும், முனிவர்களும் எல்லாம் வல்ல காளி அன்னையை துதித்து வந்தார்கள்.  அரசனின் மனைவியோ அவனின் குணத்திற்கேற்றவாறே தீமையின் உருவமாகவே விளங்கினாள்.  இந்நிலையில் அரசி கருவுற்றாள்.  அவளது கருவில் வளரும் குழந்தையோ உலகத்தினையே அழிக்க வல்ல ஒரு அசுர குழந்தையாகவே கருவில் வளர்ந்து வந்தது.  கொடுங்கோல் அரசன் வல்லாளன் ஒரு முனிவரை துன்புறுத்தும் போது அந்த முனிவர் அரசனுக்கு ஒரு சாபத்தினை அளித்தார்.

அந்த சாபத்தின் படி அவனது குழந்தையின் உடல் இந்த மண்ணில் பட்டால் அரசனும் அவனது நாடும் அழிந்து போகும்.  அரசனின் சாவிற்கு அவனது குழந்தையே வழிகோலும்.  எனவே இதனை தடுக்க அந்த அரசன் வழி தெரியாமல் திண்டாடினான்.  நாளும் ஆயிற்று.  குழந்தை பிறக்கும் காலம் வந்தது.  அரசனின் மனைவிக்கு பிரசவம் பார்க்க மருத்துவச்சியை (ஆச்சி) தேடினான்.  ஆனால் அரசிக்கு பிரசவம் பார்க்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் காளிதேவி பெரியாச்சியாக வந்தாள்.  ஆச்சி என்பது பிரசவம் பார்க்கும் வயது முதிர்ந்த மூதாட்டியைக் குறிக்கும் சொல் ஆகும்.  பிரசவம் பார்க்கும் நல்ல திறமையுள்ள பாட்டிகளுக்கு ஆச்சி மார்கள் என்றே பெயர்.  அரசன் பெரியாச்சியாக வந்த காளியின் உதவியை நாடினான்.  அவள் தெய்வம் என்பதை அறியாமல் தன்னுடைய குழந்தை மண்ணில் படாமல் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.  அனைத்தும் அறிந்த பெரியாச்சியோ தமக்கு பெருமளவில் பொன்னும் பொருளும் தர வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்தாள்.

நிபந்தனையை ஏற்ற அரசன் பெரியாச்சியை அரண்மனைக்கு அழைத்து வந்து அரசிக்கு பிரசவம் பார்க்க செய்தான்.  குறிப்பிட்ட நேரம் வரை பிறந்த குழந்தையை கைகளில் ஏந்தியவாறு அரசனை நோக்கி தமக்கு நிபந்தனைப்படி பொன்னும் பொருளும் தர வேண்டினாள் பெரியாச்சி.  ஆணவம் கொண்ட அரசன் பெரியாச்சியை தனது நாட்டின் குடிமக்களில் ஒருத்தி எனவும் தனது அடிமை எனவும் கூறி அவமதித்தான்.  பெரியாச்சியை கொல்ல துணிந்தான்.  கோபம் கொண்ட பெரியாச்சியம்மை தனது சுய உருவத்தினைக் காட்டினாள்.

அரசனை தன் கால்களில் போட்டு மிதித்து கொன்றாள்.  அவனது கொடுமைகளுக்கு துணையிருந்த அரசியை மடியில் கிடத்தி வயிற்றினை கிழித்து கொன்றாள்.  தீமையின் உருவான குழந்தையை கீழே விடாமல் தன் கைகளில் பிடித்திருந்தாள்.  அரசனுக்கு துணையாக இருந்த அரக்கர்களையும் கொன்று நாட்டு மக்களை காப்பாற்றினாள் பெரியாச்சியம்மன்.  வணங்கி துதித்த மக்களைக் கண்ட பெரியாச்சி கோபம் தணிந்து மக்களுக்கு பல வரங்கள் அளித்தாள்.

அதன் படி தான் காளியில் அவதாரம் எனவும், தான் குடி கொள்ளும் ஊரை காப்பாற்றுவதாகவும் வரமளித்தாள்.  அந்த ஊரில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், பிறந்த குழந்தைகளைக் காப்பாற்றுவதாகவும் உறுதியளித்தாள்.

தற்காலத்தில் கருவுற்ற 3ம் மாதத்தில் பெரியாச்சியின் கோவிலில் கர்ப்பிணிகள் வந்து வேண்டிக்கொள்கின்றனர்.  பிரசவம் நடந்து 30 நாட்கள் கழித்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும், ஆடி மாதமும் பெரியாச்சியம்மனை வழிபட உகந்தவை.

கிராமங்களுக்கும், நகரத்திற்கும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உன்னத காவல் தெய்வம் பெரியாச்சி என்பதில் சந்தேகம் இல்லை.  இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியாச்சியன்னையின் அருளினைப் பெற குருவரளும், திருவருளும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சக்தி ஓம்

 

 

Thursday, November 28, 2013

கலைமகளின் அருளினைத் தரும் சகலகலாவல்லி மாலை

wallpapersarasvati

சகலகலாவல்லி என்னும் கலைமகள்

kumara gurubarar

குமரகுருபரர் சுவாமிகள்

 

சகலகலாவல்லி மாலை

 

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!                               ( 1 )


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!                                          ( 2 )

 
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!                                           ( 3 )


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!                                      ( 4 )


பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே!                              ( 5 )

 
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!                              ( 6 )


பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!                                    ( 7 )


சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே!                                 ( 8 )


சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே!                                         ( 9 )

 
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!                                 ( 10 )

ஆக்கம்: குமரகுருபரர் சுவாமிகள்

 

கலைமகள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வெள்ளை ஆடை உடுத்திய கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தான்.  வெண்ணிற ஆடையை அமங்கலம் என்று பலரும் நினைப்பார்கள்.  ஆனால் சரஸ்வதி வெண்ணிற புடவையை அணிந்திருந்தாலும் அது முழுமையான வெண்ணிற ஆடையாக அல்லாமல் அதன் கரை வேறு நிறம் கொண்டதாக இருக்கும்.  மேலாடையும் வேறு நிறம் கொண்டதாகவே இருக்கும்.  இங்கே வெண்மை நிறம் தூய உள்ளத்தினை குறிக்கிறது.  வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள்.

 

ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.  இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும்.  சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம்.  பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன.  அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள்.  அதன் பின்னரே பிரம்மனின் படைப்புள் பேசும் திறமையை பெற்றன.

 

கலியுகத்தில் சரஸ்வதியை வணங்கி அருள் பெற்றவர்கள் ஏராளம்.  அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஒட்டக்கூத்தர் மற்றும் குமரகுருபரர் சுவாமிகள் ஆவர்.  குமரகுருபரர் வடநாடு சென்று சைவ நெறியை பரப்ப எண்ணினார்.  கங்கை பாயும் புனித பூமியான காசி மாநகர் சென்று மடம் அமைக்க முனைந்தார்.  அப்போது காசி மாநகர் முகலாய அரசன் கட்டுப்பாட்டில் இருந்தது.  குமரகுருபரர் சரஸ்வதியை குறித்து சகலகலாவல்லி மாலை என்றும் 10 பாடல்கள் கொண்ட தொகுதியை இயற்றி அன்னையின் அருளினால் பன்மொழிப் புலமைப் பெற்றார்.

 

தன் தவவலிமையால் ஒரு சிங்கத்தினை வசப்படுத்தி அதன் மேல் அமர்ந்து முகலாய பாதுஷாவின் அரசவைக்கு சென்றார்.  இவரது திறமையை கண்ட பாதுஷா வணங்கி வரவேற்றான்.  குமரகுருபரர் இந்துஸ்தானி (உருது) மொழியில் பாதுஷாவிடம் உரையாடி தனது நோக்கத்தினை தெரிவித்தார்.  பாதுஷா இவரது புலமையைக் கண்டு வியந்து அவர் தாம் விரும்பும் நிலத்தினை மடம் கட்டுவதற்காக அளித்தான்.  குமரகுருபரர் மடம் கட்ட ஏற்ற இடத்தினை சுட்டுமாறு இறைவனை நோக்கி வேண்டினார்.  கருடன் பறக்காத காசி மாநகரில் கருடன் அந்த இடத்தினை வட்டம் அடித்தது.  பூக்கள் வாசம் வீசாத காசி மாநகரில் பூக்கள் அந்த இடத்தில் வாசம் வீசின.  பல்லி சொல்லாத காசி மாநகரில் பல்லி அந்த இடத்தில் நல்வாக்கு கூறியது.  குமரகுருபரர் அந்த இடத்தினையே பாதுஷாவிடம் இருந்து பெற்றார்.

 

இத்தகைய சிறப்புடைய சகலகலாவல்லி மாலையை நாம் அனைவரும் தினமும் பாராயணம் செய்து கலைமகளின் அருளினைப் பெறலாம்.  இதனை பயன்படுத்தும் முறை பின்வருமாறு:-

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்.  பின்பு புதன் கிழமை அல்லது அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் அல்லது நவமி திதி வரும் நாளில் அருகில் உள்ள அம்பிகையின் தலத்தில் சரஸ்வதி சிலையின் முன்பாக மஞ்சள் துணி திரி மற்றும் விளக்கெண்ணெய் கொண்டு இரண்டு தீபங்கள் வடக்கு முகமாக ஏற்றி மேற்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட சகலகலாவல்லி மாலையை 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  பின்பு வீடு திரும்பி சரஸ்வதி படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் இரண்டு விளக்குகள் ஏற்றி மேற்கு முகமாக அமர்ந்து 9 முறை பாராயணம் செய்ய வேண்டும். 

 

அதன் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது.  இரண்டு விளக்குகள் பாராயணம் செய்யும் நேரத்தில் கண்டிப்பாக எரிய வேண்டும்.  48 நாட்கள் பாராயணம் செய்ய வேண்டும்.  அதற்கு மேலும் பாராயணம் செய்வது மிகவும் நன்று.  முதல் நாளன்றும் கடைசி நாளன்றும் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் இவற்றினை அன்னைக்கு நிவேதிக்கலாம்.

 

மேற்கண்ட பாராயண முறையால் கல்விச்செல்வம் பெருகும்.  சொல்வன்மை மற்றும் எழுத்துவன்மை உண்டாகும்.  கல்வித்தடை அகலும்.  பன்மொழிப்புலமை ஏற்படும்.  தேர்வுகளின் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும்.  போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி கிட்டும்.  இசையில் வல்லமை உண்டாகும்.  கவிபாடும் திறனும் உண்டாகும்.  வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.  மிகுந்த அறிவு உண்டாகும்.  சபைகளில் மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.  மங்களம் உண்டாகும்.  மனதிலும், வீட்டிலும் நிம்மதி உண்டாகும்.  கவலைகள் பறந்தோடும்.

 

இத்தகைய சிறப்பு மிக்க சகலகலாவல்லி மாலையை தினமும் பாராயணம் செய்து சரஸ்வதியின் அருளைப் பெற இறையருளும், குருவருளும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

விளக்குகள் பற்றி விளக்கம் தேவைப்பட்டால் இங்கே சொடுக்கவும்.

 

காசி மாநகரில் கருடன் பறக்காது.  பூக்கள் வாசம் வீசாது.  பல்லி சொல்லாது.  இது பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

 

ஓம் ஐம் வாக்வாதினியை நமஹ

ஓம் குமரகுருபர நாதா போற்றி…!

ஓம் சிவ சிவ ஓம்

 

Saturday, November 16, 2013

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை

siva family

white mustard bairavar

smoke

 

மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…!  நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும்.  ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே.  அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.

 

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர்.  இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது.  இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை.  வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள்.  ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.  கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

 

மாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள்.  அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது.  இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர்.  ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர்.  அவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு.

 

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர்.  ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி.  மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு.  பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான்.  சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை.  தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன.  அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார்.  அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.

 

இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.  இதோ அதன் செய்முறை…!

 

 வ.எண் பொருட்கள் அளவு
1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்
 
 
 
மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.  இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை.  எங்கும் தேடி அலைய வேண்டாம்.  சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.
 
 
 
இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.  தி்னமும் செய்தால் தவறில்லை.  48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.  குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
 
 
 
மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.  ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை.  யார் காலிலும் படக்கூடாது.  மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
 
 
 
இப்பதிவினை எழுதத்தூண்டிய எல்லாம் வல்ல போகர் பெருமானின் பாதம் பணிந்து இப்பதிவினை அவர்தம் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
 
 
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
 
ஓம் சிவ சிவ ஓம்
 
 
 

Saturday, November 9, 2013

அம்பிகைக்கு உகந்த மலர்கள்

image

வ.எண் மலர்கள் பலன்கள்
1. பாதிரி மலர் நல்ல மனைவி கிடைப்பாள்
2. பலாச மலர் அணிகலன்கள் கிட்டும்
3. தாழை மலர் சுகமான வாகன வசதி கிட்டும்
4. முல்லை மலர் சிறந்த பதவி கிட்டும்
5. மாதுளை மலர் எல்லோரின் அன்பையும் பெறுவர்
6. தாமரை மலர் பகை நீங்க பெறுவர்

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சக்தி ஓம்

ஓம் சிவ சிவ ஓம்

ஓம்