Saturday, November 30, 2013

விஜய வருட (2013 – 2014) தேய்பிறை சஷ்டி வரும் நாட்கள்

bairavar

Theipirai Shashti

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

Friday, November 29, 2013

தங்க மழை பொழியும் தங்க ஆனந்தக் களிப்பு

lord muruga

 image

thanga aanandha kallippu_Page_1thanga aanandha kallippu_Page_2

நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு ஆகும்.  இது அவர் இயற்றிய பாடல் தொகுப்பில் 6ம் மண்டலத்தில் அமைந்துள்ளது.  பாம்பன் சுவாமிகள் உலக மக்களின் வறுமையை போக்கி செல்வத்தினை பெற குமரக்கடவுளின் பால் இயற்றப்பட்ட தங்கமயமான துதி ஆகும்.  இது 10 பாடல்களை உடையது.  ஒவ்வொரு பாடலிலும் குமரக்கடவுளை தங்கம் என்றே துதிக்கிறார் பாம்பன் சுவாமிகள்.

 

இப்பாடலானது ஒருவரது ஜாதக தோஷத்தினை அடியோடு அழித்து பெரும் செல்வத்தினை தரக்கூடியது.  இதனை பாராயணம் செய்து வந்தால் வீட்டில் பொன் ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.  பெரும் செல்வ யோகம் உண்டாகும்.  இதனை பாராயணம் செய்து பொன்னும், பொருளும் பெற்றவர்கள் பலர்.  இப்பாடல் முருகனின் அருளை வாரி வழங்கும் ஆற்றல் கொண்டதாகும்.  அருளுடன் பொன்னும், பொருளும் அள்ளி தரக்கூடியதாகும்.

 

நியாயமான முறையில் செல்வ செழிப்பினை அளிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட பாடல் மேற்கண்ட தங்க ஆனந்த களிப்பு ஆகும்.  மேலும் செய்யும் தொழிலில் லாபத்தினை அளிக்கக்கூடியதாகும்.  மனதிற்கு அமைதியையும் தர வல்லது.  கர்மவினைகளை நாசம் செய்ய வல்லது.  திருமகளின் அருளை நிரந்தரமாக வழங்க தர வல்ல வலிமை கொண்டதாகும்.  இதை பாராயணம் செய்பவர்களின் இல்லங்களில் திருமகளின் வாசம் நிரந்தரமாக இருக்கும்.

 

இத்தகைய சிறப்புகள் கொண்ட தங்க ஆனந்த களிப்பு பாடலை பயன்படுத்தும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

முதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பின்பு இந்த பாடலை அச்சிட்டோ அல்லது தாளில் எழுதிக்கொள்ள வேண்டும்.  இதனை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.  பின்பு முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது வளர்பிறை சஷ்டி அல்லது  செவ்வாய்க்கிழமை வரும் நாளில் குரு ஓரையில் அருகிலுள்ள முருகன் ஆலயத்தில் தரையின் மீது விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து 27 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக குரு ஓரையில் தான் ஆரம்பிக்க வேண்டும்.

 

இவ்வாறு பாராயணம் செய்யும் போது ஐந்து எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்றி தாமரைத்தண்டு திரியிட்டு நான்கு அகல் விளக்குகள் ஏற்றிட வேண்டும்.  அதில் இரண்டு தீபங்கள் வடக்கு நோக்கியும், மற்ற இரண்டில் ஒன்று கிழக்கு முகமாகவும் மற்றொன்று மேற்கு முகமாகவும் எரிய வேண்டும்.  பின்பு வீடு திரும்பி முருகனின் படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

 

பின்பு தினமும் மேற்கண்ட முறையில் தீபங்கள் ஏற்றி 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  108 நாட்கள் பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும்.  எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது.  முருகன் படத்திற்கு பதிலாக வேல் வாங்கி வந்து அதனை முருகனாக பாவித்து பூசை செய்யலாம்.  நீங்கள் வாங்கும் வேல் 6 அங்குலமாக இருப்பது மிக்க சிறப்பு.  எக்காரணம் கொண்டும் உங்களின் கட்டைவிரலின் நீளத்தின் 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

 

தினமும் 9 முறை பாராயணம் செய்யவும். 108 நாட்களுக்குப் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது.  தங்க ஆனந்த களிப்பு துதியை பாராயணம் செய்து பொன்னும், பொருளும், அருளும் பெற்றிட முருகப்பெருமானின் அருளும், ஞானபானு பாம்பன் சுவாமிகளின் அருளும் துணையிருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

மிகச் சிறப்பு வாய்ந்த தங்க ஆனந்த களிப்பு துதி பற்றிய பதிவினை ஆன்மீகச்சுடர் வலைப்பூ எல்லாம் வல்ல பாம்பன் சுவாமிகளின் பொற்பாதங்கள் வணங்கி வெளியிடுகிறது.

 

தங்க ஆனந்தக் களிப்பு பாடலின் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.

 

ஓம் சரவணபவ

ஓம் குமரகுருதாசாய போற்றி…!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, November 28, 2013

கலைமகளின் அருளினைத் தரும் சகலகலாவல்லி மாலை

wallpapersarasvati

சகலகலாவல்லி என்னும் கலைமகள்

kumara gurubarar

குமரகுருபரர் சுவாமிகள்

 

சகலகலாவல்லி மாலை

 

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!                               ( 1 )


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!                                          ( 2 )

 
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!                                           ( 3 )


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!                                      ( 4 )


பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே!                              ( 5 )

 
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!                              ( 6 )


பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!                                    ( 7 )


சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே!                                 ( 8 )


சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே!                                         ( 9 )

 
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!                                 ( 10 )

ஆக்கம்: குமரகுருபரர் சுவாமிகள்

 

கலைமகள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வெள்ளை ஆடை உடுத்திய கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தான்.  வெண்ணிற ஆடையை அமங்கலம் என்று பலரும் நினைப்பார்கள்.  ஆனால் சரஸ்வதி வெண்ணிற புடவையை அணிந்திருந்தாலும் அது முழுமையான வெண்ணிற ஆடையாக அல்லாமல் அதன் கரை வேறு நிறம் கொண்டதாக இருக்கும்.  மேலாடையும் வேறு நிறம் கொண்டதாகவே இருக்கும்.  இங்கே வெண்மை நிறம் தூய உள்ளத்தினை குறிக்கிறது.  வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள்.

 

ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.  இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும்.  சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம்.  பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன.  அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள்.  அதன் பின்னரே பிரம்மனின் படைப்புள் பேசும் திறமையை பெற்றன.

 

கலியுகத்தில் சரஸ்வதியை வணங்கி அருள் பெற்றவர்கள் ஏராளம்.  அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஒட்டக்கூத்தர் மற்றும் குமரகுருபரர் சுவாமிகள் ஆவர்.  குமரகுருபரர் வடநாடு சென்று சைவ நெறியை பரப்ப எண்ணினார்.  கங்கை பாயும் புனித பூமியான காசி மாநகர் சென்று மடம் அமைக்க முனைந்தார்.  அப்போது காசி மாநகர் முகலாய அரசன் கட்டுப்பாட்டில் இருந்தது.  குமரகுருபரர் சரஸ்வதியை குறித்து சகலகலாவல்லி மாலை என்றும் 10 பாடல்கள் கொண்ட தொகுதியை இயற்றி அன்னையின் அருளினால் பன்மொழிப் புலமைப் பெற்றார்.

 

தன் தவவலிமையால் ஒரு சிங்கத்தினை வசப்படுத்தி அதன் மேல் அமர்ந்து முகலாய பாதுஷாவின் அரசவைக்கு சென்றார்.  இவரது திறமையை கண்ட பாதுஷா வணங்கி வரவேற்றான்.  குமரகுருபரர் இந்துஸ்தானி (உருது) மொழியில் பாதுஷாவிடம் உரையாடி தனது நோக்கத்தினை தெரிவித்தார்.  பாதுஷா இவரது புலமையைக் கண்டு வியந்து அவர் தாம் விரும்பும் நிலத்தினை மடம் கட்டுவதற்காக அளித்தான்.  குமரகுருபரர் மடம் கட்ட ஏற்ற இடத்தினை சுட்டுமாறு இறைவனை நோக்கி வேண்டினார்.  கருடன் பறக்காத காசி மாநகரில் கருடன் அந்த இடத்தினை வட்டம் அடித்தது.  பூக்கள் வாசம் வீசாத காசி மாநகரில் பூக்கள் அந்த இடத்தில் வாசம் வீசின.  பல்லி சொல்லாத காசி மாநகரில் பல்லி அந்த இடத்தில் நல்வாக்கு கூறியது.  குமரகுருபரர் அந்த இடத்தினையே பாதுஷாவிடம் இருந்து பெற்றார்.

 

இத்தகைய சிறப்புடைய சகலகலாவல்லி மாலையை நாம் அனைவரும் தினமும் பாராயணம் செய்து கலைமகளின் அருளினைப் பெறலாம்.  இதனை பயன்படுத்தும் முறை பின்வருமாறு:-

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்.  பின்பு புதன் கிழமை அல்லது அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் அல்லது நவமி திதி வரும் நாளில் அருகில் உள்ள அம்பிகையின் தலத்தில் சரஸ்வதி சிலையின் முன்பாக மஞ்சள் துணி திரி மற்றும் விளக்கெண்ணெய் கொண்டு இரண்டு தீபங்கள் வடக்கு முகமாக ஏற்றி மேற்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட சகலகலாவல்லி மாலையை 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  பின்பு வீடு திரும்பி சரஸ்வதி படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் இரண்டு விளக்குகள் ஏற்றி மேற்கு முகமாக அமர்ந்து 9 முறை பாராயணம் செய்ய வேண்டும். 

 

அதன் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது.  இரண்டு விளக்குகள் பாராயணம் செய்யும் நேரத்தில் கண்டிப்பாக எரிய வேண்டும்.  48 நாட்கள் பாராயணம் செய்ய வேண்டும்.  அதற்கு மேலும் பாராயணம் செய்வது மிகவும் நன்று.  முதல் நாளன்றும் கடைசி நாளன்றும் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் இவற்றினை அன்னைக்கு நிவேதிக்கலாம்.

 

மேற்கண்ட பாராயண முறையால் கல்விச்செல்வம் பெருகும்.  சொல்வன்மை மற்றும் எழுத்துவன்மை உண்டாகும்.  கல்வித்தடை அகலும்.  பன்மொழிப்புலமை ஏற்படும்.  தேர்வுகளின் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும்.  போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி கிட்டும்.  இசையில் வல்லமை உண்டாகும்.  கவிபாடும் திறனும் உண்டாகும்.  வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.  மிகுந்த அறிவு உண்டாகும்.  சபைகளில் மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.  மங்களம் உண்டாகும்.  மனதிலும், வீட்டிலும் நிம்மதி உண்டாகும்.  கவலைகள் பறந்தோடும்.

 

இத்தகைய சிறப்பு மிக்க சகலகலாவல்லி மாலையை தினமும் பாராயணம் செய்து சரஸ்வதியின் அருளைப் பெற இறையருளும், குருவருளும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

விளக்குகள் பற்றி விளக்கம் தேவைப்பட்டால் இங்கே சொடுக்கவும்.

 

காசி மாநகரில் கருடன் பறக்காது.  பூக்கள் வாசம் வீசாது.  பல்லி சொல்லாது.  இது பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

 

ஓம் ஐம் வாக்வாதினியை நமஹ

ஓம் குமரகுருபர நாதா போற்றி…!

ஓம் சிவ சிவ ஓம்

 

Wednesday, November 27, 2013

நடனசபாபதி - 7

nataraj

சப்த விடங்க தலங்கள்:-

வ.எண் தலத்தின் பெயர் இறைவனின் பெயர் நடனத்தின் பெயர்
1. திருவாரூர் வீதிவிடங்கர் அசபா நடனம்
2. திருநள்ளாறு நகர விடங்கர் அ) உரை விடங்கர் உன்மத்த நடனம்
3. திருநாகைக்காரோகணம் சுந்தர விடங்கர் வீசி நடனம்
4. திருக்காறாயில் ஆதி விடங்கர் குக்குட நடனம்
5. திருக்கோளிலி அவனி விடங்கர் பிருங்க நடனம்
6. திருவாய்மூர் நீல விடங்கர் கமல நடனம்
7. திருமறைக்காடு புவனி விடங்கர் அம்சபாத நடனம்

 

சப்த ஸ்தான தலங்கள்:-

வ.எண் தலத்தின் பெயர்
1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிக்குடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Tuesday, November 26, 2013

விஜய வருட (2013 - 2014) வளர்பிறை சஷ்டி வரும் நாட்கள்

shanmugar, valli, deivanai, palani HILL SHANMUGAN GOOD QUALITY

Valarpirai Shashti

வேலை வணங்குவதே என் வேலை

ஓம் சரவணபவ

ஓம் சிவ சிவ ஓம்

Monday, November 25, 2013

சக்தி மிக்க மனோ பைரவர் - காலபைரவாஷ்டமி சிறப்பு பதிவு

KalaBhairavDarbarSquare

ஸ்ரீ காலபைரவர், காத்மாண்டு, நேபாளம்

இன்று காலபைரவாஷ்டமி ஆகும்.  கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் தான் காலபைரவர் அவதாரம் செய்தார்.  இத்தகைய நன்னாளில் பைரவரைப் பற்றி சிறப்பு பதிவு வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறது.

 

பைரவர் என்றாலே மனதில் ஒரு வித பரவசமும், பக்தியும் குடி கொள்ளும் என்பது எல்லோரும் உணர்ந்த ஒரு நிகழ்வு ஆகும்.  பைரவர் என்பதன் பொருள் இதோ.

 

பை  - காத்தல்

ர – அழித்தல்

வ – படைத்தல்

 

மூன்று தொழில்களும் செய்யும் நாயகர் பைரவர் ஆவார்.  அதனால் தான் பைரவ பெருமானுக்கு முத்தொழில்களின் அடையாளமான திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளது.  மும்மூர்த்திகளின் தொழிலையும் செய்யும் ஆற்றல் கொண்டவர்.  இவர் சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர்.  நிர்வாண கோலத்தில் இருப்பவர்.  மூன்று கண்களை உடையவர்.  பாம்புகளை அணிகலனாக கொண்டவர்.  குண்டலம், சடைமுடியில் மாலை, கத்தி, சூலம், கபாலம், உடுக்கை, கோரைப்பற்கள் மற்றும் நாயை வாகனமாக கொண்டவர்.

 

சிவபெருமானின் 64 வடிவங்களில் பைரவர் கோலமே உலகெங்கும் வியாபித்து இருக்கும் சிவ வடிவமாகும்.  பைரவர் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர்.  நம் வாழும் இந்த கர்ம பூமியில் பைரவருக்கு எத்தனையோ கோவில்கள் கட்டப்பட்டு இருக்கிறது.  பைரவர் முதலில் ஒரு வடிவமாகவும், பின்பு 4 வடிவமாகவும், அதன் பின்னர் 8 வடிவங்களாகவும், அதே 8 வடிவங்கள் 64 வடிவங்களாகவும் தோன்றினார்.  எந்த பைரவ வடிவத்தை வழிபாடு செய்தாலும் அது ஆதிசிவனின் அவதாரமான ஸ்ரீ சொர்ண பைரவரையே சென்று சேரும்.

 

எத்தனை கோவில்கள் இருந்தாலும் மனம் என்ற கோவிலே மிகவும் சிறப்பானது.  எத்தனை பைரவர்களும் இருந்தாலும் நம் மனதில் குடி கொண்டிருக்கும் பைரவரே மிக மிக மிக சக்தி கொண்டவர்.  உலகெங்கும் வியாபித்திருக்கும் பைரவ பெருமான் நம் உள்ளத்தில் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.  மனோ பைரவர் நம் உடலோடும், உயிரோடும் கலந்து நிற்பவர்.  இதை எப்படி உணர்வது?  அது ஒன்றும் கடினமான செயல் இல்லை.  நாம் உள்ளன்புடன் பைரவ பெருமானை வழிபாடு செய்தாலே போதுமானது.  அப்படியென்றால் கோவில்களுக்கு சென்று பைரவரை வழிபாடு செய்யக்கூடாதா?  வழிபாடு செய்யலாம்.  தவறில்லை.

 

நம்மில் பலருக்கு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய நேரம் இருக்காது.  மேலும் வீட்டில் சொர்ணபைரவர் வழிபாடும் செய்ய இயலாத நிலையில் இருப்பார்கள்.  அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.  நமது மனமே பெரிய கோவில்.  நம் மனக்கோவிலில் பைரவ பெருமானை நிறுத்தி வழிபாடு செய்வதே மிகப் பெரிய சிவ வழிபாடு ஆகும்.  அதற்கு சில மனப்பயிற்சிகள் கண்டிப்பாக தேவை.  சதா சர்வ காலமும் மனதில் பைரவர் பெருமானை நினைத்து வந்தாலே போதுமானது.  அதாவது பூரண சரணாகதி அடைய வேண்டும்.  நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பைரவ பெருமானுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.  எல்லாம் இறைவனின் செயல் என்ற மனநிலை வருகிறதோ அந்த கணத்திலிருந்தே பைரவர் பெருமான் நம் உள்ளங்களி்ல் குடியேறுவார் என்பது திண்ணம்.

 

அதன் பின்னர் பைரவ பெருமான் நம் மனதிலிருந்து இயங்கும் மாபெரும் பைரவ சக்தியாக செயல்படுவார்.  நாம் எந்த பைரவரை வழிபாடு செய்தாலும் தவறில்லை.  நாம் வணங்கும் பைரவரே நம் மனோ பைரவராக செயல்படுவார்.  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பைரவ பெருமானை நாம் வழிபாடு செய்ய நமது மனத்தை விட சிறந்த ஆலயம் இந்த உலகத்தில் இருக்க முடியாது.  எனவே இவ்வாறு நாம் வழிபாடு செய்யும் காலத்தில் நமது உடல், உள்ளம் மற்றும் வாக்கு இவற்றில் சுத்தம் இருந்தாலே போதுமானது.  பைரவர் நமது மனத்தில் வந்து நிரந்தரமாக குடியேறுவார்.  அருள் புரிவார்.  தவறுகளை சுட்டிக்காட்டுவார்.  தண்டனைகளை கொடுத்து திருத்துவார்.  தமது அருள் மழையில் நனைய வைப்பார்.

 

அது மட்டுமல்லாமல் நமது கர்மவினைகளை சுட்டெரிப்பார்.  பிறவியில்லா பெருநிலை அருளுவார்.  நவகோள்களையும் நமக்கு நன்மை செய்யுமாறு ஆணையிடுவார்.  நமது பிறவி பயனை அடைய வைப்பார்.  நாளடைவில் நாம் பிறவிப்பிணியை ஒழித்து ஒரு பைரவ கணமாக மாறி பைரவ உலகத்தில் பைரவருடன் ஆனந்தமாக இனிதுடன் வாழலாம்.  நமது உடல், உயிர் மற்றும் வாக்கு இவற்றில் பைரவர் கலந்து நிற்பார்.  நம் பார்வை பட்ட மாத்திரத்தில் அனைவரின் கர்ம வினைகளும் நாசமாகும்.  பைரவ சொரூபமாகவே நாமும் மாறிடுவோம்.  பைரவரைப் போல் வேரொரு தெய்வத்தை நாம் இந்த கர்ம பூமியில் காண இயலாது.  இந்த உலகத்தில் நம்மை நாம் அனைத்து வித பிரச்சனைகளிலிருந்தும் காத்துக் கொள்ள பைரவரை துணைக் கொள்ள வேண்டும்.

 

காலபைரவாஷ்டமி நாளில் இப்பதிவினை எழுத வைத்த இறைவன் காலபைரவ பெருமானின் பாதம் பணிந்து அவருக்கு இந்த பதிவை சிறு காணிக்கையாக ஆன்மீகச்சுடர் வலைப்பூ அர்ப்பணிக்கிறது.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் க்லீம் காலபைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

சிவமயம் – 5

Umamaheshwara-Lord-Shiva-Parvati

பஞ்சகுண மூர்த்திகள்:-

வ.எண் மூர்த்தி குணம்
1. தட்சணாமூர்த்தி சாந்த மூர்த்தி
2. நடராசர் ஆனந்த மூர்த்தி
3. பைரவர் உக்கிர மூர்த்தி
4. பிட்சாடனர் வசீகர மூர்த்தி
5. ஸோமாஸ்கந்தர் கருணா மூர்த்தி
 
 
 
பஞ்சதாண்டவ தலங்கள்:-
 
வ.எண் தாண்டவம் தலம்
1. ஆனந்த தாண்டவம் தில்லை, பேரூர்
2. அசபா தாண்டவம் திருவாரூர்
3. சுந்தரத் தாண்டவம் திருவாலவாய் (மதுரை)
4. ஊர்த்துவ தாண்டவம் திருப்புக்கொளியூர் (அவிநாசி)
5. பிரம்ம தாண்டவம் திருமுருகன் பூண்டி

 

பஞ்ச புலியூர்கள்:-

வ.எண் புலியூர் அருகில் உள்ள இடம்
1. பெரும்பற்றப் புலியூர் சிதம்பரம்
2. திருப்பாதிரிப்புலியூர் கடலூர்
3. ஓமாம்புலியூர் காட்டுமன்னார்குடி
4. எருக்கத்தம்புலியூர் விருத்தாச்சலம்
5. பெரும்புலியூர் திருவையாறு

 

பஞ்சபூதத் தலங்கள்:-

வ.எண் பூதம் தலம்
1. நிலம் திருவாரூர், காஞ்சிபுரம்
2. நீர் திருவானைக்காவல்
3. நெருப்பு திருவண்ணாமலை
4. காற்று திருக்காளத்தி
5. ஆகாயம் சிதம்பரம்

 

பஞ்ச சபைகள்:-

வ.எண் சபை தலம்
1. பொற்சபை சிதம்பரம்
2. வெள்ளி சபை மதுரை
3. இரத்தின சபை திருவாலங்காடு
4. தாமிர சபை திருநெல்வேலி
5. சித்திர சபை திருக்குற்றாலம்

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Sunday, November 24, 2013

சிவனடியார்களின் இலக்கணங்கள்

Nalvar

63 Nayanmar

அகத்திலக்கணங்கள்:-

 1. திருநீறு அணிதல்
 2. ருத்ராட்சம் அணிதல்
 3. தாய், தந்தை, குரு மற்றும் பெரியோர்களை வணங்குதல்
 4. தேவார திருமுறைகளை அன்புடன் ஓதுதல்
 5. மூன்று வேளையும் (காலை, மாலை மற்றும் இரவு) ஐந்தெழுத்தை செபித்தல்
 6. சிவ பூசை செய்தல்
 7. சிவ பூசை செய்வதற்கு உதவுதல்
 8. சிவ புண்ணியங்களை செய்தல்
 9. சிவ புண்ணியங்களை செய்வித்தல்
 10. சிவபெருமானின் புகழை கூறும் நூல்களை ஓதுதல் மற்றும் கேட்டல்
 11. சிவாலய வழிபாடு செய்தல்
 12. சிவாலய திருப்பணி செய்தல்
 13. சிவனடியார்க்கு உதவி செய்தல்
 14. சிவனடியார்களிடத்தில் மட்டுமே உண்ணுதல்

புறத்திலக்கணங்கள்:-

சிவபெருமானின் புகழைக் கேட்கும் சமயத்திலோ அல்லது சிவபெருமானை நினைக்கும் சமயத்தில்

 1. நாதழுதழுத்தல்
 2. மிடறு விம்முதல்
 3. உதடுகள் துடித்தல்
 4. உடல் குலுங்குதல்
 5. மெய் சிலிர்த்தல்
 6. வியர்த்தல்
 7. சொல் எழாதிருத்தல்
 8. கண்ணீர் அரும்புதல்
 9. வாய்விட்டழுதல்
 10. மெய் மறத்தல்

சிவனடியார்கள் மேற்கண்ட அக மற்றும் புற இலக்கணங்கள் மட்டுமல்லாமல் அன்பு, அமைதி, கருணை, இன்சொல், நற்செய்கை, பொதுநலம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

சுயநலம், பேராசை, பொய், களவு, வஞ்சம் இவற்றை ஒழிக்க வேண்டும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Saturday, November 23, 2013

புத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்

imageஓம் குமர குருதாச குருப்யோ நம:image
image

நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும்.  இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆகும்.  இது மொத்தம் 30 பாடல்களை உடையது.   உயிரெழுத்து வரிசை (12) மற்றும்  உயிர்மெய் வரிசை (18) ஆக மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது.
 
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, பித்தளையில் இரண்டு வேல்கள் வாங்கி பூசையறையில் வைத்துக் கொள்ளவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் கணவன் – மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து 3 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 3 முறை பாராயணம் செய்யவும்.
 
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ அமர்ந்து ஒரு பித்தளை தட்டில் பச்சரிசி பரப்பி வாங்கி வைத்துள்ள இரண்டு வேல்களையும் வைத்து அதன் முன்னர் கணவன் – மனைவி இருவரும் 3 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 3 முறை பாராயணம் செய்து வரவும். 108 நாட்கள் தினமும் 3 முறை கணவன் – மனைவி இருவரும் அமர்ந்து பாராயணம் செய்து வரவும்.
 
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். வேலின் உயரம் 6 அங்குலம் இருப்பது மிக சிறப்பு.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
 
இரண்டு குத்து விளக்குகளில் மூன்று முகங்கள் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும்.  பருத்தி பஞ்சுத்திரி கிழக்கு முகமாகவும், சிவப்புத்துணி திரி மேற்கு முகமாகவும், வாழைத்தண்டு திரி வடக்கு முகமாகவும் வைத்து குத்து விளக்குகளை ஏற்ற வேண்டும்.  ஐந்து எண்ணெய் ஊற்றி இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  108 நாட்கள் கழித்து ஒரு வேலை அருகிலுள்ள முருகன் தலத்தில் காணிக்கையாக செலுத்தி விடவும்.  இரண்டாவது வேலை குழந்தை பிறந்த பிறகு 40 நாட்கள் தீட்டு கழிந்து பழநி அல்லது திருச்செந்தூர் முருகன் தலத்தில் காணிக்கையாக செலுத்தி விடவும்.
 
மேற்கண்ட முறை மிகவும் சக்தி வாய்ந்தது.  நிச்சயம் பலனளிக்கும்.  ஆண் – பெண் ஜாதகத்தில் உள்ள எவ்வித கடுமையான புத்திரதோஷத்தையும் நீக்க வல்லது.  வேறு எந்த பரிகாரமும் தேவையில்லை.  தினமும் 3 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து புத்திரதோஷத்தை நீக்கி நன்மக்கட்டிபேறினை அளித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
 

ஓம் சரவணபவ
 
ஓம் சிவ சிவ ஓம்
 
ஓம் குமர குருதாச குருப்யோ நம:


Friday, November 22, 2013

விஜய வருட (2013 – 2014) சங்கடஹர சதுர்த்தி நாட்கள்

image

ஓம் கம் கணபதயே நமஹ

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, November 21, 2013

சிவபெருமானின் திருப்பெயர்கள் – திருவாதிரை சிறப்பு பதிவு

image SIVA 1000_Page_01SIVA 1000_Page_02SIVA 1000_Page_03SIVA 1000_Page_04SIVA 1000_Page_05SIVA 1000_Page_06SIVA 1000_Page_07SIVA 1000_Page_08SIVA 1000_Page_09SIVA 1000_Page_10SIVA 1000_Page_11SIVA 1000_Page_12SIVA 1000_Page_13SIVA 1000_Page_14SIVA 1000_Page_15SIVA 1000_Page_16SIVA 1000_Page_17SIVA 1000_Page_18

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

பாம்பன் சுவாமிகளின் அருள் மழை – உண்மை சம்பவம்

image

image

image

நாம் மேலே காணுவது ஞானபானு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ஆவார்.  நம்மில் பலர் இவரைப் பற்றி அறிந்திருப்பார்கள்.  இவர் ஒரு மூர்த்தி கொள்கையை உடையவர்.  முருக வழிபாட்டில் சிறந்து விளங்கியவர்.  இவருக்கு அகத்தியர் மற்றும் முருகர் ஆகியோர் நேரில் காட்சி தந்துள்ளனர்.  நம் வாழ்வின் துயர் தீர இவர் பல பாடல்களை உலக மக்களின் நலன் வேண்டி இயற்றியுள்ளார்.  இவர் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு வயதான பெண்மணியின் வாழ்க்கையில் ஏற்பட்ட உண்மை சம்பவத்தை  இங்கே பதிவாக வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறது.

நாம் குறிப்பிட்ட அந்த வயதான பெண்மணி சுமார் 63 வயது கொண்டவர்.  முருகனின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர்.  பாம்பன் சுவாமிகளின் மேல் மாறா பக்தி கொண்டவர்.  அவர் எந்த கோவிலுக்கு சென்றாலும் அவரின் முன்னே முருகன் இருப்பதாக எண்ணியே வழிபடுவாராம்.  குறிப்பாக திருச்செந்தூர் முருகன் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்.  அவர் 10 வகுப்பு வரை படித்தவர்.  அந்த கால 10 வகுப்பு.  பாம்பன் சுவாமிகளின் கருணையினால் அவரால் இயற்றப்பட்ட குமாரஸ்தவம், சண்முக கவசம், பகை கடிதல், மயூர பந்தம், சஸ்திர பந்தம், துவிதநாக பந்தம், கமல பந்தம், ரத பந்தம், சதுரங்க பந்தம் மற்றும் சண்முக நாமாவளி இவற்றை தன்னுடைய 63 ம் வயதில் மனப்பாடம் செய்து பாடும் திறமை பெற்றார்.  அசைவ உணவினை விட்டு விட்டார்.

அவருக்கு கனவில் முருகனும் அவரது வாகனமும் வந்து அருள் பாலித்தனர்.  இதுவே பாம்பன் சுவாமிகளின் அருளுக்கு மிகச்சிறந்த உதாரணம்.  தன்னுடைய உடல் பிணிகளை இறைவன் அருளால் போக்கிக் கொண்டார்.    அவருக்கு உடல் வலிமையைக் காட்டிலும் மன வலிமையே அதிகம்.  பாம்பன் சுவாமிகள் இயற்றிய அனைத்துப் பாடல்களையும் மனப்பாடம் செய்யும் நோக்கம் கொண்டவர்.  தூங்க செல்லும் போதும் கூட பாம்பன் சுவாமிகள் இயற்றிய பாடல்களின் புத்தகம் அவரது கையில் இருக்கும்.  கனவிலும், நனவிலும் அறுமுகக் கடவுளை துதிக்கும் இயல்பினை உடையவர்.  படிப்படியாக அவரது வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டன.  என்ன தான் மாற்றங்கள் இருந்தாலும் கர்ம வினைகளின் தாக்கம் அவரை விட வில்லை.

முருகனின் அருள் பெற்ற அவர் கடந்த தீபாவளியன்று அசைவ உணவை சாப்பிட்டு இருக்கிறார்.  சாப்பிட்ட நேரத்திலிருந்து சுமார் 2 நாட்கள் மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார்.  அவரால் எதுவும் சாப்பிட முடிய வில்லை.  படுக்கையை விட்டு அவரால் எழ முடியவில்லை.  அவ்வாறு இருக்கும் சமயம் எம்மை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.  உடல்நிலை பாதிப்பினை மட்டும் என்னிடம் கூறினார்.  அவர் அசைவம் சாப்பிட்டதை நான் உணர்ந்து கொண்டேன்.  அவரிடம் அசைவம் சாப்பிட்டீர்களா?  என கேட்டேன்.  அவர் தயங்கிய படியே உண்மையை ஒப்புக் கொண்டார்.  பிறகு அவர் தன் வாழ்நாளில் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று முருகனிடமும், பாம்பன் சுவாமிகளிடமும் வேண்டி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.  பிறகு சுமார் அரை மணி நேரத்தில் அவரது உடல் நிலை குணமாகியது.  இதை அவரை நேரில் சந்திக்கும் போது என்னிடம் தெரிவித்தார்.

தற்போது நல்ல உடல் நிலையுடன் காணப்படுகிறார்.  அவருக்கு உடலில் வலிமை தான் இல்லை.  நோய்கள் அவரை அணுக வில்லை.  முருகனின் அருளையும், பாம்பன் சுவாமிகளின் அருளையும் நினைத்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.  இப்போது பாம்பன் சுவாமிகளின் அனைத்துப் பாடல்களையும் அச்சிட்டு தருமாறு அவர் என்னிடம் கேட்டிருக்கிறார்.  இப்பதிவினை எழுதும் போது கூட அவர் ஏதாவது பாம்பன் சுவாமிகளின் பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டிருப்பார் என்றே எண்ணுகிறேன்.  பாம்பன் சுவாமிகளின் அருள் மழைக்கு பாத்திரமான அடியார்களுள் இவரும் ஒருவர்.  இது போல் ஆனால் வெளியே தெரியாமல் இருக்கும் முருகனின் அடியார்கள் எண்ணிக்கை எண்ணிலடங்காது.

அவரின் அனுமதி பெற்று பாம்பன் சுவாமிகளின் அருளினை உலகலறிய செய்ய இப்பதிவு ஆன்மீகச்சுடர் வலைப்பூவில் வெளியிடப்படுகிறது.

 

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்; நெஞ்சில்

ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்

முருகா வேன்றோது வார்முன்.

ஓம் சரவணபவ

ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!

 

 

Wednesday, November 20, 2013

விஜய வருட (2013 – 2014) பிரதோஷம் வரும் நாட்கள்


image
image

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்


Tuesday, November 19, 2013

காலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம்

image
image

நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும்.  இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.  துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும்.  இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.  நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.  அதற்கு பொருள் செலவு அதிகம்.  செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.  நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது.
 
 
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.  வசதி படைத்தவரகள் வெள்ளியில் நாகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.  அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும்.  திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
 
 
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று.  அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.  நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை. 
 
 
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும்.  மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
 
 
முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று கண்டிப்பாக உடலுறவு கூடாது.
 
 
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 
 
ஓம் சரவணபவ
 
ஓம் சிவ சிவ ஓம்
 
ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!
 
 
 
 

Monday, November 18, 2013

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்

lord-dakshinamurthyimage

சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும்.  அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே.  இதற்கு காரணம் நமது கர்மவினைகளே.  கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு.  கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும்.  நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி.  இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே.  இந்த கர்மவினைகள் இரண்டாகும்.  அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும்.  நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.  இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் விதியை மதியால் வெல்லலாம்.  ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது.  ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம்.  சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது.  ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது.  அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.

மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது.  பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும்.  அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே.  நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை.  இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.

முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி).  இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர்.  பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம்.  இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது.  இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64 சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும்.  தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள்.  இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம். 

dakshinamurthy_by_xyzofart

தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம்.  ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர்.  சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர்.  தென் திசையை நோக்குபவர்.  இவரை வழிபடுவது மிகவும் எளிது.  இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது.  இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும்.  நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே.  இவரை வழிபட மனம் அமைதி பெறும்.  இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும்.  மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே.  மனநிம்மதியை தருபவரும் இவரே.

“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”

மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும்.  இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.  அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது.  மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும்.  பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும்.  பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும்.    இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது.  தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும் நில்லாது ஓடும்.  இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.

image

கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார்.  இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார்.  பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர்.  மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன.  பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும்.  பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும்.  பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார்.  சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார்.  இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர்.  காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார்.  தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். 

பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம்.  பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார்.  கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார்.  இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும்.  சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.  எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர்.  முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள்.  பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள்.  இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள்.  இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும்.  தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள்.  கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள்.  பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது. 

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”

மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும்.  இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.  அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது.  மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும்.  (ஆம் தட்சணாமூர்த்தி சந்நிதியில் தான் செபிக்க வேண்டும்).  பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும்.  பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும்.    இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது.  சொர்ணபைரவரின் அருள் கிட்டினால் சகல தோஷங்களும், பாவங்களும் நில்லாது ஓடும்.  இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.

 

தென்திசை நோக்கும் கடவுள்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

சந்திரனை சூடிய மற்ற கடவுள்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

மந்திர செபம் செய்ய ஏற்ற இடங்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்