Friday, December 15, 2017

பாவங்கள் போக்கும் பாவநாசத் திருப்பதிகம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

Thiruvannamalai


தலம் : பொது                                                                                                                                         பண் : பழம் பஞ்சுரம்

திருமுறை : நான்காம் திருமுறை                                                                                         அருளியவர் : திருநாவுக்கரசர்


    1. பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
      சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
      வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
      ஒற்றி யூரெம் உத்தமனை உள்ளத் துள்ளே வைத்தேனே.
    2. ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்
      கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
      வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
      மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
    3. மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை
      அதிகை மூதூர் அரசினை ஐயா றமர்ந்த ஐயனை
      விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
      நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.
    4. புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
      உறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்
      கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
      அறஞ்சூழ் அதிகை வீரட்டத் தரிமான் ஏற்றை அடைந்தேனே.
    5. கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை
      ஆலங் காட்டி லந்தேனை அமரர் சென்னி யாய்மலரைப்
      பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
      சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
    6. மருக லுறையுமா ணிக்கத்தை வலஞ் சுழியின் மாலையை
      கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப்
      பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய
      திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.
    7. எழிலார் இராச சிங்கத்தை இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
      குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை
      நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
      அழலார் வண்ணத் தம்மானை அன்பி லணைத்து வைத்தேனே.
    8. மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையும் மணாளனை
      ஆலைக் கரும்பி னின்சாற்றை அண்ணா மலையெம் அண்ணலைச்
      சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை
      மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.
    9. சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை
      ஆற்றிற் பழனத் தம்மானை ஆல வாயெம் மருமணியை
      நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
      தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
    10. புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
      வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
      பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியில் மேய புராணனை
      வைத்தேன் என்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.
    11. முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
      அந்திச் செவ்வான் படியானை அரக்க னாற்றல் அழித்தானைச்
      சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
      எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவ நாசமே.

நாம் மேலே காணும் பதிகம் பாவநாசத் திருப்பதிகம் ஆகும்.  இது நான்காம் திருமுறையில் 15ம் பதிகமாக அமைந்துள்ளது.  இதனை அருளியவர் திருநாவுக்கரசர் ஆவார்.  இது எந்த ஒரு தலத்தையும் குறித்து பாடப்படவில்லை.  எனவே இது பொது என்ற பிரிவில் அடக்கப்பட்டுள்ளது.  இதன் பண் பழம் பஞ்சுரம் ஆகும்.  இப்பதிகத்தில் திருநாவுக்கரசர் பல்வேறு தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானினின் பெயர்களை குறிப்பிடுகிறார்.

இப்பதிகத்தின் கடைசி வரியில் பாவங்கள் நாசமாகும் என்ற குறிப்பு காணப்படுகிறது.  சிவபெருமானின் பல்வேறு பெயர்களை உள்ளன்புடன் கூறி வழிபாடு செய்ய நாம் செய்த பழம் வினைகள் அனைத்தும் நாசமாகும் என்பது திண்ணம்.   இப்பதிகத்தை தினமும் காலை -  மாலை இரு வேளையும் பாராயணம் செய்ய நாம் எத்தனை பிறவிகளில் செய்த பாவங்களும் அழிந்து போகும் என்பது உறுதி.

இப்பதிகத்தை முதன் முதலில் பிரதோஷ வேளையில் பாராயணம் செய்வது நல்லது.  காலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும், மாலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும் ஆக இருமுறைகள் தினமும் பாராயணம் செய்து வர வேண்டும்.  இதனை பாராயணம் செய்பவர்கள் அசைவத்தை நிரந்தரமாக கைவிட்டவர்களாக இருத்தல் நலம் பயக்கும்.  பாராயணம் விரைவில் பலன் தரும்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், நோய்கள் ஆகியன நமது முற்பிறவிகளில் செய்த பாவங்களால் தான் ஏற்படுகிறது.  முற்பிறவி மட்டுமல்லாது இப்பிறவி பாவங்களும் அழிந்தால் மட்டுமே நம் வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  பாவங்களை அழித்து வாழ விழைவோர் அவர் தம் முன்வினைகளை – கர்மவினைகளை அழித்து நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல அண்ணாமலையானின் பாதம் பணிந்து இப்பதிவினை பதிவிடுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல… அனைத்தும் உன்னுடையதே…! அருளாளா…!! அருணாச்சலா…!!!

திருச்சிற்றம்பலம்…!  பொன்னம்பலம்…!!  அருணாச்சலம்…!!!


கடன் தீர்க்கும் உன்னத பதிகம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

saraparapeswararthirucherai s

runavimochana lingam

தலம் : திருச்சேறை                                                                                                                     அருளியவர் : திருநாவுக்கரசர்

    1. பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
      கூரி தாய அறிவுகை கூடிடும்
      சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
      நாரி பாகன்றன் நாம நவிலவே.
    2. என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
      மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
      செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
      மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.
    3. பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
      இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும்
      சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
      மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.
    4. மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
      ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
      சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
      ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே.
    5. எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
      துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
      திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
      அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
    6. தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
      ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
      செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
      அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
    7. வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
      ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
      சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
      அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே.
    8. குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
      துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
      இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
      அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே.
    9. பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
      விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
      திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
      அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே.
    10. பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
      வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
      திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
      கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.

நாம் மேலே காணும் பதிகம் கடன் தீர்க்கும் பதிகம் ஆகும்.  இதனை அருளியவர் திருநாவுக்கரசர் ஆவார்.  இப்பதிகம் திருச்சேறை என்னும் தலத்தில் அருளப்பட்டதாகும்.  இத்தலத்து இறைவன் பெயர் செந்நெறியப்பர் – சாரபரமேசுவரர்.  இத்தலத்து இறைவி பெயர் ஞானவல்லி – ஞானாம்பிகை.  இத்தலத்தில் மார்கண்டேய முனிவர் ருணவிமோசன லிங்கத்தினை நிறுவி பூசித்து தனது பிறவிகடன் நீங்க பெற்றார்.

இதனை முதன் முதலில் தொடங்கும் போது திங்கட்கிழமையில் தொடங்க வேண்டும்.  தினமும் 1 முறை இப்பதிகத்தை கடன் தீர்த்த இறைவனை நினைத்து உள்ளன்புடன் பாராயணம் செய்ய இப்பிறவியின் கடன்கள் அனைத்தும் நீங்கி பிறவியில்லா பெருநிலை சித்திக்கும்.  இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வர எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது உறுதி.

இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்கள் நிரந்தரமாக அசைவத்தை நிறுத்தியிருக்க வேண்டும்.  இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்களின் அனைத்து விதமான இடர்களையும், கடன்களையும் இறைவன் நீக்கியருள்வார் என்பது திண்ணம்.  மீண்டும் இடர்களும், கடன்களும் ஏற்படாது என்பது உறுதி.  இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்பவர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் மற்றும் கடன்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியமே வாழ்வில் வராது.

இப்பிறவியின் கடன்கள் மட்டுமல்லாது அனைத்து இடர்களையும் போக்கி துன்பமில்லா இனிய வாழ்வை தரும் – கடன் தீர்க்கும் உன்னமான பதிகத்தை கடன் உள்ளவர்கள் மட்டுமல்லாது பிறவி கடன்களை போக்கி பிறவியில்லா பெருவாழ்வினை வாழ நினைப்பவர்களும் நிம்மதியான வாழ்வு பெற ஆதி சித்தன் - கருணையின் வடிவம் – அருணையின் நாயகன் எல்லாம் வல்ல அண்ணாமலையானின் பொற்பாதம் பணிந்து பதிவிடுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல…!  அனைத்தும் உன்னுடையதே…!  அருளாளா…!! அருணாச்சலா…!!!

திருச்சிற்றம்பலம் – பொன்னம்பலம் – அருணாச்சலம்

Saturday, December 2, 2017

பயணத்தில் காக்கும் முருகனின் மந்திரம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

manivelu-saivite-sym-vel_ful


வேகமான இவ்வுலகில் குறுந்தொலைவு பயணமாகிலும், நெடுந்தொலைவு பயணமாகிலும் அதில் வேகமே தென்படுகிறது.  வேகமான பயணத்தில் விபத்துகள் ஏற்பட்டு அதன் மூலம் விலைமதிப்பில்லாத உயிரிழப்புகள் நேருவது வாடிக்கையாகி விட்டது.  இத்தகைய பயணங்களில் பாதுகாப்பை அளிக்கும் முருகனின் வேல் மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


”வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்பிரமண்ய வேல்”


இந்த மந்திரம் அகத்தியர் பெருமானால் நாடி மூலம் தரப்பட்ட உன்னதமான ஒரு மந்திரம் ஆகும்.  இந்த மந்திரத்தை அகத்தியர் விஜயம் மாத இதழில் கண்டேன்.  இதனை பல முறை பயன்படுத்தி இதன் சக்தியை உணர்ந்திருக்கிறேன்.  இந்த மந்திரத்தின் பெருமையை உணர்த்தவே இதனை நம் வலைப்பூவில் பதிவிட்டுள்ளேன்.


இதனை பயணம் செய்வதற்கு முன்பாக 18 முறைகள் செபித்து விட்டு பயணம் மேற்கொள்ள அந்த பயணத்தில் எவ்வித தடங்கல்களும் இராது.  பாதுகாப்பான பயணமாக அமையும் என்பது உறுதி.  இதை பயன்படுத்துபவர்கள் இதன் சக்தியை உணர்வார்கள்.  மேலும் தடங்கல்கள் என்பது விபத்துக்கள் மட்டுமல்ல, காரிய தடையும் தடங்கல் தான் என்பதை உணர வேண்டும்.


இந்த மந்திரம் தெரிந்திருந்தும் பயணம் செய்வதற்கு முன்பாக இதனை செபிக்க மறந்தால் அது அவரவர் வினைப்பயன் என்று கருத வேண்டும்.  அவ்வாறு செபிக்க மறந்து விபத்தில் சிக்கிய அனுபவமும் எனக்குண்டு.  இதை செபித்த பின்பு செய்த பயணங்கள் அனைத்தும் பாதுகாப்பான பயணங்களாகவே அமைந்திருக்கின்றன.  மயிரிழையில் உயிர் தப்பிய அனுபவமும் எமக்குண்டு.


இதனை பயன்படுத்தி அனைவரும் விபத்தில்லாத – தடங்கல்கள் இல்லாத பயணங்களை மேற்கொண்டு நலமுடன் - காரிய சித்தியுடன் வாழ எல்லாம் வல்ல தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வேண்டுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல.  அனைத்தும் உன்னுடையதே.  அருளாளா…! அருணாச்சலா…!!

திருச்சிற்றம்பலம்…!  பொன்னம்பலம்…!!  அருணாச்சலம்…!!!