Showing posts with label கலைமகள். Show all posts
Showing posts with label கலைமகள். Show all posts

Friday, January 16, 2015

2015 ம் ஆண்டு தேய்பிறை நவமி வரும் நாட்கள்

goddess durga

Theipirai Navami - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் தும் துர்க்காயை நமஹ

 

Sunday, March 2, 2014

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

Nataraja-Sivagamasundari-nalvar-Screen

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது.  உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும்.  இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.  அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும்.  எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் /  தேவதைகள்:-

  • அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இது மிகவும் நன்மை பயக்கும்.  குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும்.  குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.  குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
  • அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இதுவும் நன்மை பயக்கும்.  நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே.  குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே. 
  • எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம்.  முழு முதற் கடவுள் இவரே.  இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.  காரியசித்தி உண்டாக்குபவர் இவரே.  விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே.  நல்வழி காட்டுபவரும் இவரே.
  • குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம்.  இது குழந்தை வரம் தரும்.  குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.  நல்ல குழந்தைகள் பிறக்கும்.  பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
  • ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும்,  அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
  • மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும்.  திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும்.  இல்லறம் நல்லறமாக நடக்கும்.
  • அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  நாம்  அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர்.  தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
  • சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.   சிவசக்தி கலப்பே உலகம்.  சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை.  சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.  எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
  • ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.  இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
  • குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.  இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும்.  குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
  • தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.  பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
  • ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே.  பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர்.  அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
  • லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் திருமகளின் அருள் கிட்டும்.  நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
  • சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இது சிவசக்தி அருளைத் தரும்.  16 பேறுகளும் கிட்டும்.  நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும்.  கர்மவினைகள் தொலையும்.  மாயை விலகும்.  முக்தி கிட்டும்.
  • ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.  இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும்.  கல்வி ஞானம் கிட்டும்.  ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே.  கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.
  • கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே.  இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.  நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
  • லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.  குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை.  இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
  • அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.  இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.  மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
  • துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.  இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.  கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.  செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.  வியாபாரம் பெருகும்.
  • அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது.  இதன் மூலம் வறுமை அகலும்.  பசி, பட்டினி, பஞ்சம் தீரும்.  வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
  • சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் குருவருள் வந்து சேரும்.  தோஷங்கள் விலகும்.  கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும்.  வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.

எமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன்.  இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு வேறு தகவல்கள் தெரிந்திருப்பின் தவறாது கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும்.  நன்றி…!

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, January 23, 2014

Tuesday, January 21, 2014

Thursday, November 28, 2013

கலைமகளின் அருளினைத் தரும் சகலகலாவல்லி மாலை

wallpapersarasvati

சகலகலாவல்லி என்னும் கலைமகள்

kumara gurubarar

குமரகுருபரர் சுவாமிகள்

 

சகலகலாவல்லி மாலை

 

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!                               ( 1 )


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!                                          ( 2 )

 
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!                                           ( 3 )


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!                                      ( 4 )


பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே!                              ( 5 )

 
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!                              ( 6 )


பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!                                    ( 7 )


சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே!                                 ( 8 )


சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே!                                         ( 9 )

 
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!                                 ( 10 )

ஆக்கம்: குமரகுருபரர் சுவாமிகள்

 

கலைமகள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வெள்ளை ஆடை உடுத்திய கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தான்.  வெண்ணிற ஆடையை அமங்கலம் என்று பலரும் நினைப்பார்கள்.  ஆனால் சரஸ்வதி வெண்ணிற புடவையை அணிந்திருந்தாலும் அது முழுமையான வெண்ணிற ஆடையாக அல்லாமல் அதன் கரை வேறு நிறம் கொண்டதாக இருக்கும்.  மேலாடையும் வேறு நிறம் கொண்டதாகவே இருக்கும்.  இங்கே வெண்மை நிறம் தூய உள்ளத்தினை குறிக்கிறது.  வெண்மையான நிறமுடைய அல்லி எனப்படும் வெண்தாமரையில் அமர்ந்திருப்பவள் அன்னை சரஸ்வதி ஆவாள்.

 

ஒரு கையில் புத்தக சுவடியும், மறு கையில் செப மாலையும், மற்ற இரு கரங்களிலும் வீணையையும் தாங்கி அருள்பாலிக்கும் அன்னை சகலகலாவல்லி என்னும் சரஸ்வதி ஆவாள்.  இதன் விளக்கம் சரஸ்வதியை வணங்கினால் புத்தகப்படிப்பும், செபத்தில் வெற்றியும், இசையில் அறிவும் பெறலாம் என்பதாகும்.  சரஸ்வதியை வழிபட்டு பலன் பெற்றவர்கள் ஏராளம்.  பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன.  அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள்.  அதன் பின்னரே பிரம்மனின் படைப்புள் பேசும் திறமையை பெற்றன.

 

கலியுகத்தில் சரஸ்வதியை வணங்கி அருள் பெற்றவர்கள் ஏராளம்.  அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஒட்டக்கூத்தர் மற்றும் குமரகுருபரர் சுவாமிகள் ஆவர்.  குமரகுருபரர் வடநாடு சென்று சைவ நெறியை பரப்ப எண்ணினார்.  கங்கை பாயும் புனித பூமியான காசி மாநகர் சென்று மடம் அமைக்க முனைந்தார்.  அப்போது காசி மாநகர் முகலாய அரசன் கட்டுப்பாட்டில் இருந்தது.  குமரகுருபரர் சரஸ்வதியை குறித்து சகலகலாவல்லி மாலை என்றும் 10 பாடல்கள் கொண்ட தொகுதியை இயற்றி அன்னையின் அருளினால் பன்மொழிப் புலமைப் பெற்றார்.

 

தன் தவவலிமையால் ஒரு சிங்கத்தினை வசப்படுத்தி அதன் மேல் அமர்ந்து முகலாய பாதுஷாவின் அரசவைக்கு சென்றார்.  இவரது திறமையை கண்ட பாதுஷா வணங்கி வரவேற்றான்.  குமரகுருபரர் இந்துஸ்தானி (உருது) மொழியில் பாதுஷாவிடம் உரையாடி தனது நோக்கத்தினை தெரிவித்தார்.  பாதுஷா இவரது புலமையைக் கண்டு வியந்து அவர் தாம் விரும்பும் நிலத்தினை மடம் கட்டுவதற்காக அளித்தான்.  குமரகுருபரர் மடம் கட்ட ஏற்ற இடத்தினை சுட்டுமாறு இறைவனை நோக்கி வேண்டினார்.  கருடன் பறக்காத காசி மாநகரில் கருடன் அந்த இடத்தினை வட்டம் அடித்தது.  பூக்கள் வாசம் வீசாத காசி மாநகரில் பூக்கள் அந்த இடத்தில் வாசம் வீசின.  பல்லி சொல்லாத காசி மாநகரில் பல்லி அந்த இடத்தில் நல்வாக்கு கூறியது.  குமரகுருபரர் அந்த இடத்தினையே பாதுஷாவிடம் இருந்து பெற்றார்.

 

இத்தகைய சிறப்புடைய சகலகலாவல்லி மாலையை நாம் அனைவரும் தினமும் பாராயணம் செய்து கலைமகளின் அருளினைப் பெறலாம்.  இதனை பயன்படுத்தும் முறை பின்வருமாறு:-

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்.  பின்பு புதன் கிழமை அல்லது அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் அல்லது நவமி திதி வரும் நாளில் அருகில் உள்ள அம்பிகையின் தலத்தில் சரஸ்வதி சிலையின் முன்பாக மஞ்சள் துணி திரி மற்றும் விளக்கெண்ணெய் கொண்டு இரண்டு தீபங்கள் வடக்கு முகமாக ஏற்றி மேற்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட சகலகலாவல்லி மாலையை 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.  பின்பு வீடு திரும்பி சரஸ்வதி படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் இரண்டு விளக்குகள் ஏற்றி மேற்கு முகமாக அமர்ந்து 9 முறை பாராயணம் செய்ய வேண்டும். 

 

அதன் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது.  இரண்டு விளக்குகள் பாராயணம் செய்யும் நேரத்தில் கண்டிப்பாக எரிய வேண்டும்.  48 நாட்கள் பாராயணம் செய்ய வேண்டும்.  அதற்கு மேலும் பாராயணம் செய்வது மிகவும் நன்று.  முதல் நாளன்றும் கடைசி நாளன்றும் சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் இவற்றினை அன்னைக்கு நிவேதிக்கலாம்.

 

மேற்கண்ட பாராயண முறையால் கல்விச்செல்வம் பெருகும்.  சொல்வன்மை மற்றும் எழுத்துவன்மை உண்டாகும்.  கல்வித்தடை அகலும்.  பன்மொழிப்புலமை ஏற்படும்.  தேர்வுகளின் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும்.  போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி கிட்டும்.  இசையில் வல்லமை உண்டாகும்.  கவிபாடும் திறனும் உண்டாகும்.  வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.  மிகுந்த அறிவு உண்டாகும்.  சபைகளில் மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.  மங்களம் உண்டாகும்.  மனதிலும், வீட்டிலும் நிம்மதி உண்டாகும்.  கவலைகள் பறந்தோடும்.

 

இத்தகைய சிறப்பு மிக்க சகலகலாவல்லி மாலையை தினமும் பாராயணம் செய்து சரஸ்வதியின் அருளைப் பெற இறையருளும், குருவருளும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

விளக்குகள் பற்றி விளக்கம் தேவைப்பட்டால் இங்கே சொடுக்கவும்.

 

காசி மாநகரில் கருடன் பறக்காது.  பூக்கள் வாசம் வீசாது.  பல்லி சொல்லாது.  இது பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

 

ஓம் ஐம் வாக்வாதினியை நமஹ

ஓம் குமரகுருபர நாதா போற்றி…!

ஓம் சிவ சிவ ஓம்