பொதுவாக கடவுளரை அக்கடவுளருக்குரிய திதி மற்றும் நட்சத்திரங்களில் வழிபாடு செய்ய வேண்டும். இது கடவுள் வழிபாட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஆகும். அவ்வாறு வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானதாகும். அவ்வாறு நாம் வழிபட்டால் கடவுளின் அருளும் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் நமது கர்ம வினைகள் நீங்கி நமது நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.
அவ்வாறு வழிபாடு செய்வதில் நட்சத்திரங்களில் பொதுவாக சந்தேகங்கள் வருவதில்லை. ஆனால் திதிகளில் சந்தேகங்கள் வருவது உண்டு. ஏனெனில் திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம். நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது.
உதாரணமாக பைரவர் வழிபாட்டினை எடுத்துக் கொள்வோம். பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும். இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன. இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை. அவற்றினை பயன்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே உண்டு.
முதலில் தேய்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தீர்க்க வேண்டிய துன்பங்களை தீர்க்குமாறு வேண்ட வேண்டும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமது துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து அழிந்து போகும். எக்காரணம் கொண்டும் நம்முடைய தேவைகளை வேண்டுதல் கூடாது.
இப்போது வளர்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானவற்றை தருமாறு வேண்ட வேண்டும். வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். எக்காரணம் கொண்டும் நம்முடைய துன்பங்களை தீர்க்குமாறு வேண்டுதல் கூடாது.
நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள். இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும். தேய்பிறை திதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத் தொடங்கும். பின்னர் வளர்பிறை திதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும். இதனை எந்த கடவுள் வழிபாட்டிற்கும் பின்பற்றலாம். தவறில்லை.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்