Showing posts with label பித்ரு தோஷம். Show all posts
Showing posts with label பித்ரு தோஷம். Show all posts

Sunday, January 25, 2015

பித்ரு வழிபாடு கேள்வி - பதில்

lor18d

1. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு எது?

பித்ரு வழிபாடு

2. பித்ரு வழிபாடு என்றால் என்ன?

இறந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்வதே பித்ரு வழிபாடு ஆகும்.

3. பித்ரு வழிபாடு செய்வதன் முக்கியத்துவம் என்ன?

எல்லா வழிபாடுகளுக்கும் முதன்மையானது பித்ரு வழிபாடு ஆகும்.  பித்ரு வழிபாடு முடிந்த பின்னரே மற்ற வழிபாடுகள் நடைபெற வேண்டும்.

4. பித்ரு வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும்?

நம் நலனில் அக்கறை கொண்ட பித்ருக்கள் பசியில்லாமல் ஒளியுலகில் இன்புற்றிருக்க பித்ரு வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.

5. பித்ரு வழிபாட்டை யாரெல்லாம் செய்யலாம்?

இனம், மதம், மொழி, சாதி வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் பித்ரு வழிபாடு செய்யலாம்.

6. பித்ரு வழிபாட்டை தந்தை உயிரோடு இருக்கும் போது செய்யலாமா?

தாராளமாக செய்யலாம். இறந்த முன்னோர்கள் தன் பசியாற நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக நம் தாத்தா அவரது மகன் உணவளித்தால் தான் சாப்பிடுவாரா? இல்லையே. அவரது பேரப்பிள்ளைகள் நாம் உணவளித்தாலும் சாப்பிடுவார்.

7. பித்ரு வழிபாட்டை பெண்கள் செய்யலாமா?

தாராளமாக செய்யலாம். அமாவாசை முடிவதற்குள் ராமன் பித்ரு வழிபாடு செய்ய இயலவில்லை. அதற்குள் சீதாதேவி பித்ரு வழிபாட்டை செய்து முடித்தார். ராமன் மீண்டும் பித்ரு வழிபாடு செய்ய தொடங்க தசரதர் அசரீரீயாக தாம் சீதாதேவி கொடுத்த எள் நீரால் பசியாறி விட்டதாக கூறினாராம்.  இதனை ராமாயணம் உறுதி கூறுகிறது.

8. பித்ரு வழிபாட்டை எங்கே செய்வது சிறப்பு?

கோவில்கள், நதிக்கரைகள், குளக்கரைகள், கடற்கரைகள், புண்ணிய தீர்த்தங்கள், ஜீவ சமாதிகள் ஆகிய இடங்களில் செய்யலாம்.

9. பித்ரு வழிபாட்டை செய்ய சிறப்பான இடம் எது?

இவ்வுலகில் பித்ரு வழிபாடு செய்ய எத்தனையோ இடங்கள் இருப்பினும் திருவண்ணாமலையில் செய்யும் பித்ரு வழிபாடு 1000 மடங்கு பலன் தரக்கூடியது. பித்ரு வழிபாடு செய்ய திருவண்ணாமலையை விட சிறந்த இடம் உலகில் இல்லை.  அண்ணாமலையாரே வல்லாள மகாராசருக்கு பித்ரு கடன் தீர்த்த இடமான பள்ளிகொண்டாப்பட்டு (திருவண்ணாமலையிலிருந்து 5 கிமீ தொலைவில்) என்னும் ஊர் மிகவும் சிறப்பானது. அண்ணாமலையாரே பித்ரு கடன் தீர்த்த இடத்தை விட சிறப்பான இடம் உலகில் இருக்க முடியாது. இது அகத்தியர் வாக்கு.

10. பித்ரு வழிபாட்டை எப்போது செய்யலாம்?

மாதப்பிறப்பு, அயன பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண காலங்கள், அமாவாசை திதி ஆகிய காலங்களில் பித்ரு வழிபாட்டை செய்யலாம். கோவில் தலங்களில் செய்யும் பொது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கோவில் தலங்களுக்கு காலவரையறை இல்லை.

11. பித்ரு வழிபாட்டில் இடம் பெற வேண்டிய பொருட்கள் யாவை?

தர்ப்பை, சுத்தமான நீர், கருப்பு எள் (ஆண்களுக்கு), வெள்ளை எள் (பெண்களுக்கு), ருத்திராட்சம், சங்கு ஆகியன.

12. பித்ரு வழிபாட்டில் எந்த மந்திரங்களை பயன்படுத்த வேண்டும்?

வடமொழி அல்லது தமிழ் மந்திரங்களை பயன்படுத்தலாம். தமிழ் மந்திரங்கள் மிகவும் சிறப்பானவை. ஏனெனில் தமிழே மந்திரமொழி ஆகும்.

13. பித்ரு வழிபாடு முடிந்தவுடன் செய்ய வேண்டிய முக்கிய செயல் என்ன?

அன்னதானம் செய்ய வேண்டும்.

14. பித்ரு வழிபாட்டின் பயன்கள் யாவை?

திருமணம், வேலை கிடைத்தல், குழந்தை பாக்கியம், செல்வ செழிப்பு, குடும்ப முன்னேற்றம் இன்னும் பல.

15. பித்ரு வழிபாடு செய்யாவிடில் ஏற்படும் துன்பங்கள் யாவை?

பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் உண்டாகும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!

ஓம் றீங் அண்ணாமலையே போற்றி…!!!

Thursday, March 6, 2014

பித்ரு தோஷம் - ஒரு விளக்கம்

ammavasai-21

பித்ரு தோஷம் என்றால் என்ன?

ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும்.  நிழல் கிரகங்களான் ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை.  மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும்.  அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகம் ஆகும்.  இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டுபவை ஆகும்.

ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்கள் ஆகும்.  ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு பாம்பு கிரகங்களே கிரகங்களில் மிகவும் வலிமையானவை.  ஆனால் தற்கால சோதிடமோ ராகு மற்றும் கேது ஆகியவற்றிற்கு பலமில்லை என்று கூறுகின்றன்.  ராகுவை ஞான-போக காரகன் என்றும் கேதுவை மோட்ச காரகன் என்றும் அழைப்பர்.

முன்பு குறிப்பிட்டவாறு ஜாதகத்தில் ராகு, கேது அமைந்திருந்தால் ஜாதகரின் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை, குழந்தைப்பேறு இவற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன.  இந்த பிரச்சனைகளுக்கான காரணம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களே.  ஒருவர் தனது முற்பிறவிகளில் அவர் செய்த பாவங்களே அவருடைய இப்பிறவியில் ஜாதகத்தில் தோஷங்களாகவும், முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களே அவரது ஜாதகத்தில் யோகங்களாகவும் அமைகின்றன.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்களிடமிருந்து இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை பெறுவதால் நம் முன்னோர்களின் பாவ-புண்ணியங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி ஆகும். நாம் நமது  முன்னோர்களின் பாவத்தினை அனுபவித்தால் நம் முன்னோர்களின் புண்ணியத்தினையும் அனுபவித்தே ஆக வேண்டும்.  நம் முன்னோர்களின் பாவமும் நம்முடைய பாவமும் சேர்ந்து தலைமுறை தலைமுறைகளாக நம்மை பின்தொடர்கின்றன என்பதே உண்மை ஆகும்.

அவ்வாறு நாம் பாவங்களை அனுபவிக்கும் காலத்தில் ஒரு சில நன்மைகளும் நமக்கு விளையும்.  அவை நம்முடைய புண்ணியம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தினால் விளையும் நன்மைகள் ஆகும்.  நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களின் பாவத்தினையும், நம்முடைய பாவத்தினையும் அழித்து நம் முன்னோர்கள் மற்றும் நம்முடைய ஆன்மாக்கள் நற்கதி அடையுமாறு செய்தல் வேண்டும்.  நமது பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடைய தக்க பரிகாரங்களை மேற்கொள்ளல் வேண்டும்.

 

பித்ரு தோஷம் எதனால் வருகிறது?

  1. பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.
  2. ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
  3. ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
  4. ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.
  5. ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
  6. ஒருவர் தன் முற்பிறவியில் கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, March 4, 2014

பித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்

govu

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும்.  தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர்.  தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே.  நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம்.  அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.  நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும்.  அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும்.  இதுவே பிதுர்கடன் எனப்படும்.  இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.  நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும்.  இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும்.  இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.

ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம்.  பயம் கொள்ள தேவையில்லை.  நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும்.  இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது.  நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள்.  நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும்.  அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர்.  அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர்.  அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.

வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர்.  அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர்.  இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது.  கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள்.  எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.  மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது.  இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.  பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை.  எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை.  இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான்.  எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.

பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும்.  இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது.  மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும்.  பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும்.  அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, January 2, 2014

2014 ம் வருட அமாவாசை வரும் நாட்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4IRnAN4mnpz6C0nRfwC8YgVewX_2QyQfLPkesvD0RTdVcK9hPhAyItSJqVaEGxdIXpQNpeHQ37K5kXsAltV9skdE2hWYG_S0MgjP62BM9f-GS1JTG5oAWKWWQfogobGqy6hFaIaRFDJaq/s1600/0a.Lord-Rama-and-Lord-Shiva.jpg

Amavasai - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, November 17, 2013

பித்ரு தோஷம் நீக்கும் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்

image

image

image

image

image

image

 

நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய திருவிராமேச்சுரம் பாடல் ஆகும்.  இது நமக்கு வெளியே உள்ள பகை, நமக்கு உள்ளே உள்ள பகை (கர்மவினை) இவற்றை அழித்து பித்ருக்களின் சாபத்தையும், தோஷத்தையும் போக்க வல்லது.

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது உங்களின் பிறந்த நட்சத்திரம் அல்லது பிறந்த திதி வரும் நாளில் ஆரம்பிக்கவும்.  அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அல்லது அமாவாசை திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.  அமாவாசை திதியே மிக மிக சிறப்பானது.

 

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.  நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

 

ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.  மேலும் பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம்.  ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம்.  அன்னதானம் செய்யலாம்.  அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம்.  பழங்களை அளிக்கலாம்.  பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது.  ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை விட சிறந்த ஒரு பொருள் ஒன்று உண்டு.  அது தான் அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.  இதை அதிகமாக தரக்கூடாது.  பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

 

முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்றும், ஒவ்வொரு அமாவாசை திதியன்றும் கண்டிப்பாக உடலுறவு கூடாது.

 

அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை (சாதம், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, வடை, பாயசம் முதலியன) கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வாருங்கள்.  தங்களின் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும்.  அனைத்து கர்ம வினைகளும் தீரும்.  அனைத்துவித தோஷங்களும் நீங்கும்.

 

தினமும் 1 முறை பாராயணம் செய்யவும்.  பாராயணம் செய்த பின்பு எள் கலந்த சாதத்தை காக்கைக்கு உணவாக அளிக்கவும்.  வெகு விரைவில் பித்ரு தோஷம் நீங்கும்.  வாழ்வில் உள்ள அனைத்து வித பிரச்சனைகளும் நீங்கும்.  நிம்மதியும், பித்ருக்களின் அருளும் கிட்டும்.  நமக்கு வெளியே உள்ள பகையும், நமக்கு உள்ளே உள்ள பகையும் அழிந்து பித்ரு தோஷம் நீங்கி என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

ஓம் சரவணபவ

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!