Showing posts with label காளி. Show all posts
Showing posts with label காளி. Show all posts

Friday, January 16, 2015

2015 ம் ஆண்டு தேய்பிறை நவமி வரும் நாட்கள்

goddess durga

Theipirai Navami - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் தும் துர்க்காயை நமஹ

 

Thursday, January 23, 2014

Tuesday, January 21, 2014

Monday, December 16, 2013

குழந்தைகளைக் காக்கும் தெய்வம் - பெரியாச்சியம்மன்

Periachi

பெரியாச்சியம்மன் நம் தமிழ்நாட்டின் காவல் தெய்வங்களில் முக்கிய தெய்வம் ஆகும்.  நம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் நாடுகளிலும் வணங்கி போற்றப்படும் தெய்வம் பெரியாச்சி ஆவாள்.  இவள் சக்தியின் வடிவம்.  தீமையை அழிக்க வந்த காளியின் மறு உருவம் ஆவாள்.  தம்மை அண்டியவர்களின் துயரினை களைந்து அருள் பாலிக்கும் உன்னத தெய்வம் பெரியாச்சியம்மன் ஆவாள்.

பெரியாச்சியம்மனின் தோற்றம் பற்றிய ஒரு கிராமிய கதை ஒன்று உண்டு.  அந்த கதையின் படி பாண்டிய நாட்டினை வல்லாளன் என்ற ஒரு அரசன் ஆண்டு வந்தான்.  அவன் கொடுங்கோல் அரசன்.  அவன் தன் மக்களை துன்புறுத்தி வந்தான்.  தன் நாட்டு மக்களை மட்டுமல்லாமல் முனிவர்களையும், சாதுக்களையும், ரிஷிகளையும் கூட துன்புறுத்தி வந்தான்.  தீமையின் மொத்த உருவமான அந்த அரசன் அரக்கர்களையும் தன் வசம் வைத்திருந்தான்.  அதனால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.

அவனது கொடுமைகளிலிருந்து விடுபட மக்களும், முனிவர்களும் எல்லாம் வல்ல காளி அன்னையை துதித்து வந்தார்கள்.  அரசனின் மனைவியோ அவனின் குணத்திற்கேற்றவாறே தீமையின் உருவமாகவே விளங்கினாள்.  இந்நிலையில் அரசி கருவுற்றாள்.  அவளது கருவில் வளரும் குழந்தையோ உலகத்தினையே அழிக்க வல்ல ஒரு அசுர குழந்தையாகவே கருவில் வளர்ந்து வந்தது.  கொடுங்கோல் அரசன் வல்லாளன் ஒரு முனிவரை துன்புறுத்தும் போது அந்த முனிவர் அரசனுக்கு ஒரு சாபத்தினை அளித்தார்.

அந்த சாபத்தின் படி அவனது குழந்தையின் உடல் இந்த மண்ணில் பட்டால் அரசனும் அவனது நாடும் அழிந்து போகும்.  அரசனின் சாவிற்கு அவனது குழந்தையே வழிகோலும்.  எனவே இதனை தடுக்க அந்த அரசன் வழி தெரியாமல் திண்டாடினான்.  நாளும் ஆயிற்று.  குழந்தை பிறக்கும் காலம் வந்தது.  அரசனின் மனைவிக்கு பிரசவம் பார்க்க மருத்துவச்சியை (ஆச்சி) தேடினான்.  ஆனால் அரசிக்கு பிரசவம் பார்க்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் காளிதேவி பெரியாச்சியாக வந்தாள்.  ஆச்சி என்பது பிரசவம் பார்க்கும் வயது முதிர்ந்த மூதாட்டியைக் குறிக்கும் சொல் ஆகும்.  பிரசவம் பார்க்கும் நல்ல திறமையுள்ள பாட்டிகளுக்கு ஆச்சி மார்கள் என்றே பெயர்.  அரசன் பெரியாச்சியாக வந்த காளியின் உதவியை நாடினான்.  அவள் தெய்வம் என்பதை அறியாமல் தன்னுடைய குழந்தை மண்ணில் படாமல் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.  அனைத்தும் அறிந்த பெரியாச்சியோ தமக்கு பெருமளவில் பொன்னும் பொருளும் தர வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்தாள்.

நிபந்தனையை ஏற்ற அரசன் பெரியாச்சியை அரண்மனைக்கு அழைத்து வந்து அரசிக்கு பிரசவம் பார்க்க செய்தான்.  குறிப்பிட்ட நேரம் வரை பிறந்த குழந்தையை கைகளில் ஏந்தியவாறு அரசனை நோக்கி தமக்கு நிபந்தனைப்படி பொன்னும் பொருளும் தர வேண்டினாள் பெரியாச்சி.  ஆணவம் கொண்ட அரசன் பெரியாச்சியை தனது நாட்டின் குடிமக்களில் ஒருத்தி எனவும் தனது அடிமை எனவும் கூறி அவமதித்தான்.  பெரியாச்சியை கொல்ல துணிந்தான்.  கோபம் கொண்ட பெரியாச்சியம்மை தனது சுய உருவத்தினைக் காட்டினாள்.

அரசனை தன் கால்களில் போட்டு மிதித்து கொன்றாள்.  அவனது கொடுமைகளுக்கு துணையிருந்த அரசியை மடியில் கிடத்தி வயிற்றினை கிழித்து கொன்றாள்.  தீமையின் உருவான குழந்தையை கீழே விடாமல் தன் கைகளில் பிடித்திருந்தாள்.  அரசனுக்கு துணையாக இருந்த அரக்கர்களையும் கொன்று நாட்டு மக்களை காப்பாற்றினாள் பெரியாச்சியம்மன்.  வணங்கி துதித்த மக்களைக் கண்ட பெரியாச்சி கோபம் தணிந்து மக்களுக்கு பல வரங்கள் அளித்தாள்.

அதன் படி தான் காளியில் அவதாரம் எனவும், தான் குடி கொள்ளும் ஊரை காப்பாற்றுவதாகவும் வரமளித்தாள்.  அந்த ஊரில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், பிறந்த குழந்தைகளைக் காப்பாற்றுவதாகவும் உறுதியளித்தாள்.

தற்காலத்தில் கருவுற்ற 3ம் மாதத்தில் பெரியாச்சியின் கோவிலில் கர்ப்பிணிகள் வந்து வேண்டிக்கொள்கின்றனர்.  பிரசவம் நடந்து 30 நாட்கள் கழித்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும், ஆடி மாதமும் பெரியாச்சியம்மனை வழிபட உகந்தவை.

கிராமங்களுக்கும், நகரத்திற்கும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உன்னத காவல் தெய்வம் பெரியாச்சி என்பதில் சந்தேகம் இல்லை.  இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியாச்சியன்னையின் அருளினைப் பெற குருவரளும், திருவருளும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சக்தி ஓம்

 

 

Thursday, November 7, 2013

தெய்வங்களுக்கு ஆகாத மலர்கள்

cow

வ.எண் தெய்வங்கள் ஆகாத மலர்கள்
1. சிவபெருமான் தாழம்பூ
2. பிரம்மா தும்பை
3. துர்க்கை அறுகம்புல்
4. சூரியன் வில்வம்
5. விநாயகர் துளசி
6. திருமால் நந்தியாவட்டை
7. சக்தி நெல்லி

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்

Wednesday, September 25, 2013

காலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்



காளி:

இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும்.  காளன் என்னும் சிவபெருமானின் துணைவி என்பதால் காளீ என்றழைக்கப்பட்டாள்.  காளி என்ற பெயர் வடமொழியின் காலா என்ற சொல்லிலிருந்து உருவானது.  உண்மையில் காலீ என்பதே சரியான உச்சரிப்பு ஆகும்.  காலீ என்பதன் பொருள் காலத்தை வென்றவள் என்பதாகும்.  மற்றொரு பொருள் கரிய நிறம் கொண்டவள் என்பதாகும்.  நாமும் காலீ என்றே அழைப்போம்.


காலீ காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள்.  ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம் இவளே.  இவற்றை போக்குவதும் இவளே.  காலீ நேர்மையின் வடிவம்.  நாம் நேர்மையாக இருந்தால் காலீயை வைத்து யாரும் எவ்வித துன்பங்களையும் நமக்கு செய்ய இயலாது.  மாறாக யார் துன்பம் செய்ய நினைத்தார்களோ அவர்களே அழிவது நிச்சயம்.


காலீ ஞானத்தின் வடிவம்.  அறியாமை இருளை போக்குபவள்.  தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்குபவள்.  எவ்வித துன்பங்களிலிருந்தும் தம் பக்தர்களை காப்பவள்.  கருணையின் வடிவம்.  ஆனால் நமது பாரத நாட்டில் காலீயைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன.  அதாவது காலீ என்ற தெய்வம் மந்திரவாதிகளுக்கு மட்டுமே உரித்தான தெய்வம் போலவும், காலீயை வழிபடுபவர்கள் எல்லாம் மந்திரவாதிகள் போலவும் கருத்துகள் உலவுகின்றன.


ஆனால் இது உண்மையல்ல.  காலீ அன்னையின் வடிவம்.  தீமைகளை அழிப்பவள்.  வெற்றிகளை அளிப்பவள்.  காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் ஆவாள்.  இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும்.  காலீ ஞானத்தின் வடிவம்.  ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள்.  கல்வியையும் அளிப்பவள்.  துணிவை தருபவள்.  பயத்தை போக்குபவள்.  நோயிலிருந்து விடுவிப்பவள்.  நோய்களை போக்குபவள்.  மரணமிலா பெருவாழ்வு தருபவள்.


மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும், அசூரர்களுக்கும் அருள்பாலித்தவள் இவளே.  சிவபெருமானின் உயரிய வடிவமான சரபேஸ்வரருக்கும் சக்தி அளித்தள் இவளே.


இவளை வழிபடுவதில் பல முறைகள் உண்டு.  மனதில் நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காப்பவள் இந்த காலீ.  காலீயின் அருள் பெற்றவர்களே இதற்கு சாட்சி.  கொல்கத்தா தட்சினேஸ்வரத்தில் காலீயை வழிபட்டு அவளின் அருள் பெற்ற பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே மிகச் சிறந்த உதாரணம்.  மகாகவி காளிதாஸ், தெனாலிராமன் போன்றோரும் இதில் அடக்கம்.


காலீயின் பலவடிவங்கள் உண்டு.  அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரவல்லன.  இதைப் பற்றி தனியான பதிவு வெளிவரும்.

இலங்கை வேந்தன் இராவணனின் மகன் மேகநாதன் என்றழைக்கப்பட்ட இந்திரஜித் காலீயை நோக்கி தவமும், வேள்வியும் நடத்தி இந்திரனையும் வெல்லும் ஆற்றல் பெற்றான்.  அவன் ராம லட்சுமணர்களை அழிக்க செய்த நிகும்பலை யாகம் அனுமனால் பாதியிலேயே அழிக்கப்பட்டது.  அதனால் தான் அவன் அழிய நேரிட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.  நிகும்பலை என்பவள் இலங்கையில் உள்ள காலீயின் பெயர் ஆகும்.


வீட்டில் தினமும் விளக்கேற்றி 27 முறை கீழ்க்கண்ட மந்திரத்தினை நமது பூசையறையில் செபித்து இத்தகைய காலீயை வழிபட்டு வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவோம்.


ஓம் ஹ்ரீம் மஹா காள்யை நமஹ






காலபைரவர்:

பைரவர் என்ற பெயருக்கு தன்னை அண்டியவர்களின் எதிரிக்ளுக்கு பயத்தை உண்டாக்கி அண்டியவர்களை கண்ணின் இமை போல காப்பவர் என்பது பொருளாகும்.  முத்தொழில்களையும் செய்வதால் அவருக்கு பைரவர் என்று பெயர் வந்தது.  பாவத்தினை நீக்குபவர் மற்றும் அடியார்களின் பயத்தினை போக்குபவர் என்றும் பொருள் உண்டு.  பைரவர் சிவனின் 64 வடிவங்களில் ஒருவர்.  அந்தகாசூரனை வதம் செய்ய இறைவன் எடுத்த வடிவமே பைரவர் ஆவார்.  இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்பவர்.


பைரவரின் வடிவங்கள் மொத்தம் 64 ஆகும்.  அதில் ஒருவர் தான் காலபைரவர்.  காலபைரவர் காலத்தை வென்றவர்.  காலச்சக்கரத்தினை இயக்குபவர்.  இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருக்கின்றன.  இவரது மூச்சுக்காற்றிலிருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டாகின.  இவற்றிலிருந்து தான் மற்ற காலக்கணித முறைகள் தோன்றின.


காலபைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் பயங்கரமானவர்.  உக்கிரமானவர்.  ஆனால் தன்னை அண்டியவர்களை கண்ணின் இமை போல் காப்பவர்.  இவரே கோவில்களின் காவல் தெய்வம்.  இதனால் இவருக்கு சேத்திரபாலன் என்ற பெயரும் உண்டு.  இவரது அதிகார ஆயுதம் திரிசூலம் ஆகும்.  இது முத்தொழில்களைக் குறிக்கிறது.  சிவ வடிவங்களில் பாவத்தை பொடிப்பொடியாக்கும் வடிவம் பைரவரே.  இவரது அருளின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது.  சிவ வழிபாட்டில் முன்னேற்றம் காண இவரது அருள் மிகவும் முக்கியம்.


காலபைரவர் காலத்தையே மாற்றக் கூடியவர்.  அதாவது தன்னை அண்டியவர்களுக்காக அவர்களின் பாவ புண்ணிய கணக்கினை அழிக்கும் வல்லமை உடையவர்.  பாவம் மற்றும் புண்ணிய கணக்கை அழிப்பதன் மூலம் உயிர்களை பிறவி என்னும் கடலிலிருந்து மீட்பவர்.  பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு என்பது நிச்சயம்.  எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகிறதோ அப்போது தான் பிறவியிலா பெருநிலை கிட்டும்.


காலபைரவர் காலத்தின் தெய்வம்.  காலத்தினை இயக்குபவர்.  ஞானத்தினை அளிப்பவர்.  பயம் நீக்குபவர்.  இவரை வழிபட பல முறைகள் இருக்கின்றன.  இருப்பினும் மனதார இவரை ஒரு முறை நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காத்து அருள் புரிவார்.  பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே இவரின் வழிபாட்டு முறைகள் உங்களை வந்தடையும்.  சித்தர்கள் அனைவரும் இவரின் அருள் பெற்றவர்களே.  சித்தர்கள் செய்த செயற்கரிய செயல்கள் எல்லாம் பைரவரின் திருவிளையாட்டே ஆகும்.


காலபைரவரின் வாகனம் நாய் ஆகும்.  இதற்கு ஞான ஞமலி என்றும் பெயர் உண்டு.  நாய்களுக்கு உணவளிப்பதும், அவற்றை பேணி பாதுகாப்பதும் ஒரு வகை பைரவ வழிபாடே ஆகும்.  காலத்தின் காவல் தெய்வம் என்பதாலேயே இவருக்கு காலபைரவர் என்று பெயர் வந்தது.  காலத்தை இயக்கும் பைரவர் காலபைரவர் ஆவார்.


இவ்வுலகில் பாவபுண்ணியங்களை அழித்து பிறவியிலா பெருநிலை அடைய நினைப்பவர்கள் காலபைரவரை தினமும் வழிபடவேண்டும்.  காலபைரவரை ஒவ்வொரு சிவத்தலத்திலும் காணமுடியும்.  அவரை வழிபட்டு நமது கர்ம வினைகளை அழித்து பிறவியிலா பெருநிலை பெறுவோம்.


வீட்டில் தினமும் விளக்கேற்றி 27 முறை கீழ்க்கண்ட மந்திரத்தினை நமது பூசையறையில் செபித்து இத்தகைய காலபைரவரை வழிபட்டு வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவோம்.


 ஓம் ஹ்ரீம் காலபைரவாய நமஹ
 


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!

ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சக்தி ஓம்