Sunday, March 9, 2014

பிரம்மஹத்தி தோஷமும் – அதனை போக்கும் முறையும்

mahalingam

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

நம்மில் பலர் இந்த பிரம்மஹத்தி தோஷம் என்ற வார்த்தை கேட்டிருக்கலாம்.  பிராமணரை (பிரம்மத்தினை உணர்ந்தவரை) கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ உண்டாகும் தோஷம் பிரம்மஹத்தி தோஷம் ஆகும்.  கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று.

பிராமணர் என்பவர் பிறப்பால் ஏற்படும் உயர்வு நிலை ஆகாது.  பிரம்மம் ஆகிய கடவுளை உணர்ந்தவர் எவரோ அவரே பிராமணர் ஆவார்.  பிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும், பண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும்.

பிரம்மத்தினை உணர்ந்த ஒருவரை கொல்வது மிகப் பெரிய பாவம் ஆகும்.  எந்த ஒரு உயிரைக் கொன்றாலும் அது பெரிய பாவமே.  ஏனெனில் உயிர்கள் அனைத்தும் பிரம்மனின் படைப்பே.  அவற்றினை அழிக்க நமக்கு உரிமையில்லை.  அந்தந்த உயிர்களின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவற்றின் உயிர்களை கவரும் வேலையை எமதர்மராசாவுக்கு இறைவன் அளித்துள்ளார். 

கொலைக்கு புனிதமான காரணங்கள் இருந்தாலும் அது தோஷத்தினையே தரும்.  ராவணனை ராமபிரான் கொன்றதால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.  அதே போல் எந்த ஒரு உயிருக்கும் தொல்லைகள் தரவும் நமக்கு உரிமை கிடையாது.  அவ்வாறு நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் தோஷமாக மாறும் என்பது திண்ணம்.

பிரம்மஹத்தி தோஷத்தினை எவ்வாறு அறியலாம்?

ஒருவருடைய பாவ புண்ணிய கணக்கினை அறிந்து கொள்ள உதவும் காலக்கண்ணாடி அவரவர் ஜாதகம் ஆகும்.  முறையாக – துல்லியமாக கணிக்கப்பட்ட ஜாதகத்தில் ஒருவரின் பாவம் மற்றும் புண்ணிய கணக்கினை எளிதாக கண்டறியலாம். மேலும் யோகங்களையும், தோஷங்களையும் கண்டறியலாம்.  எது எப்படி இருந்தாலும் தோஷங்கள் நீங்காமல் யோகங்கள் பலன் தராது என்பதே எமது அனுபவம்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் – சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்.  உண்மையில் தோஷமில்லாத ஜாதகம் என்பது உலகில் இல்லை.

பிரம்மஹத்தி தோஷத்தினால் வரும் துன்பங்கள் என்ன?

பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது.  ஒருவர் கொலை செய்து விட்டால் அவரது மனம் எப்படி அவரை உறுத்துமோ அதே போன்ற உறுத்தல் கண்டிப்பாக இருக்கும்.  இந்த தோஷத்தினால் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப்பேறு இவற்றில் தீராத பிரச்சனைகள் உண்டாகும்.  தீராத கடனும் பகையும் உண்டாகும்.  குடும்பத்தில் நிம்மதியே இருக்காது.  தீராத வறுமை உண்டாகும். 

இந்த தோஷம் ஆண் – பெண் இருபாலருக்கும் வருவது உண்டு. தோஷங்களுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது.  இதே போன்ற பிரச்சனைகள் மற்ற தோஷங்களினாலும் வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  பொதுவாக எந்த வகையான தோஷம் என்பதை தெளிவாக அறிந்த பின்னரே அதற்கான பரிகாரத்தினை முறையாக செய்திடல் வேண்டும்.

பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கும் பரிகாரங்கள்:

பொதுவாக தோஷங்களை போக்கும் கடவுள் சிவ பெருமான் ஆவார்.  அவரை முறைப்படி வணங்கிடில் எந்த ஒரு தோஷமும் விலகி ஓடும்.  சிவ பெருமானை வணங்கினால் அவர் நமது கர்மவினைகளை அழிப்பார்.  நமது பாவங்கள் நீங்கினால் தானாகவே நமது தோஷங்களும் நீங்கி விடும்.  ராமபிரானும் சிவ பெருமானை வணங்கியே பிரம்மஹத்தி தோஷத்தினை போக்கிக் கொண்டார் என்பதை ராமாயணம் கூறும்.

இந்திரன் மற்றும் வரகுண பாண்டியன் போன்றோரும் சிவ பெருமானை வணங்கியே தங்களின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிக் கொண்டனர் என்பதை புராணங்கள் தெளிவாக உரைக்கின்றன.  இந்த தோஷத்தினை போக்க உகந்த நாள் அமாவாசை தினம் ஆகும்.  அமாவாசை தினத்தில் முன்னோர் கடனை தீர்த்த பின்பு பசுமாட்டிற்கு உணவளித்தல் வேண்டும்.

அதன் பின்னர் மாலையில் அருகில் உள்ள சிவத்தலம் சென்று எல்லா சந்திதிகளிலும் ஐந்து எண்ணெய் (நல்லெண்ணெய் + விளக்கெண்ணெய் + இலுப்பெண்ணெய் + வேப்பெண்ணெய் + நெய் ஆகியன சம அளவில் கலந்தது) கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.  பின்பு அம்பிகை மற்றும் இறைவன் சந்நிதிகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். 

அதன் பின்னர் 9 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.  பின்னர் 9 பேருக்கு ஆடைகள் தானம் செய்ய வேண்டும்.  அதன் பின்பு எந்த கோவிலுக்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும்.  இவ்வாறு 9 அமாவாசைகள் செய்ய வேண்டும்.  இதன் மூலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும்.  இதனை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செய்தால் பலன் விரைவில் கிட்டும்.

சிவபுராணத்தின் கூற்றுப்படி ஒரு முக ருத்ராட்சத்தினை கண்டாலே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.  ஆனால் நாம் காணும் ஒரு முக ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  தற்போது ஒரு முக ருத்ராட்சம் என்ற பெயரில் போலிகள் தான் விற்கப்படுகின்றன என்பதே உண்மை.

சிவபுராணத்தின் கூற்றுப்படி ஆறுமுக ருத்ராட்சத்தினை அணிந்து கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.  ஆனால் நாம் வாங்கி அணியும் ருத்ராட்சம் உண்மையானதாகவும், முறைப்படி மந்திர உரு ஏற்றப்பட்டு பூசையில் வைக்கப்பட்டு பூசிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  கடையில் கிடைக்கும் ஆறுமுக ருத்ராட்சத்தினை வாங்கி அப்படியே அணிதல் கூடாது.

சாளக்கிராமங்களை முறைப்படி பூசித்து வந்தால் இறைவன் அருளால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.  ஆனால் சாளக்கிராம வழிபாட்டு முறைகளை தகுந்த குருவினை நாடி தெரிந்து கொண்ட பின்னரே பூசித்து வர வேண்டும்.  சாளக்கிராமங்களில் பல வகைகள் உண்டு.  அவரவருக்கு பிடித்தமான சாளக்கிராம வழிபாடு மிகவும் சிறந்தது.

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலங்கள்:

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலங்கள் பல உண்டு.

காசி
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
இராமேஸ்வரம்
மதுரை
திருவாஞ்சியம்
பிரம்மதேசம்
மேல்மலையனூர்

ஆகியன முக்கியமானவை ஆகும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

1 comment:

  1. பிரம்மஹத்தி தோஷம். We can also go to Devipattinam where Lord Rama established navagraha temple and performed pujas for Brahmahathi dosam after defeating Ravanan in Lanka.

    ReplyDelete