Tuesday, August 27, 2013

ஆனைமுகன் துணை

 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. 

                                                                                   ---- திருமூலர்

     
ஐந்து கரங்களை உடையவரும், யானை முகத்தை கொண்டவரும், பிறை நிலவின் வடிவத்தை உடையதும் ஒளி பொருந்தியதுமான தந்தத்தை உடையவரும், எல்லாம் வல்ல சிவபெருமானின் புதல்வரும், ஞான ஒளியாகவும் விளங்கும் விநாயகப்பெருமானை உள்ளத்தில் வைத்து அவரின் பாதங்களை வணங்குகிறேன்.

விநாயகப்பெருமானின் உருவ விளக்கம்:-
  1. யானை முகம் ---- விலங்கு
  2. நான்கு கைகள் ---- தேவர்
  3. வயிறு           ---- ராட்சதர்
  4. கால்கள்        ---- மனிதர் 
விநாயகரின் நான்கு கைகளும் தேவர்களின் கைகளை உணர்த்துகின்றன.  தேவர்களுக்கு மட்டும் தான் நான்கு கரங்கள் உண்டு.  இது தேவர்களின் அம்சம் என்பதை உணர்த்துகிறது.

விநாயகரின் வயிறு பானை போன்ற தோற்றமுடையது.  ராட்சதர்களுக்கு மட்டுமே பெரிய வயிறு உண்டு.  இது செரிமான சக்தியை உணர்த்துகிறது.  விநாயகருக்கு மாலையாக கட்டப்படும் அருகம்புல் செரிமான குறைவை நீக்கும் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

விநாயகரின் கால்கள் மனிதர்கட்கு உள்ளதை போன்ற கால்களின் அமைப்பினை உடையது.  இது மனித அம்சம் என்பதை உணர்த்துகிறது. 

விநாயகரின் உருவம் விலங்கு, தேவர், ராட்சதர் மற்றும் மனிதர் அனைவரும் அவர் முன்பு சமம் என்பதை உணர்த்துகிறது. 

முப்புரமெரிசெய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா” என திருப்புகழில் அருணகிரி நாதர் விநாயகரின் வீரத்தினை குறிப்பிடுகின்றார்.

விநாயகருக்கு ”கணபதி” (கணங்கள் - தேவ, மனித, அசுர, சித்த, யட்ச, சிவ கணங்கள் முதலிய அனைத்து கணங்கள், பதி - தலைவன்)  பட்டம் அவரது தந்தை சிவபெருமானால் வழங்கப்பட்டது.  அதாவது விநாயகரை முதலில் வழிபட்டே அனைத்து செயல்களும் செய்யப்பட வேண்டும்.  அதை மீறுபவர்களுக்கு இடையூறுகளை உண்டாக்க கணபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

ஆனால் அதை மறந்து சிவபெருமான் திரிபுரம் எரிக்க தேரில் செல்லும் போது தேரின் அச்சினை முறித்து விட்டார் விநாயகப்பெருமான்.  பின்னர் தான் கொடுத்த பட்டத்தை தானே மதியாமல் போனதை நினைத்து பின்பு விநாயகரை வழிபட்டு தம் மோகன புன்னகையால் திரிபுரம் எரித்தார் சிவ பெருமான்.  சிவனுக்கே விக்கினம் தந்த விக்கினேஸ்வரன் விநாயகர் ஆவார்.

4 வேதங்களும், 18 புராணங்களும், 2 இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரையே போற்றுகின்றன.  நமது விருப்பங்கள் ஈடேறத் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமை மிக்கவர் விநாயகர். 

விக்கினங்களை தருவதும் அவற்றை அகற்றுவதும் இவரது வடிவமே...! 

அகார, உகார, மகார கலப்பே “ஓம்”. ”ஓம்” என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியிலும் அகாரம், உகாரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன.  நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும். 

சூரிய பகவானின் இயக்கத்தை வைத்தே நாம் காலத்தைக் (சௌரமான கணிதம்) கணிக்கிறோம். சூரியனின் சொந்த வீடு சிம்மம். அங்கிருந்து சூரியன் 12 வீடுகளுக்கும் சென்று வருகிறார். எனவே சூரியன் சிம்மராசியிலிருக்கும் ஆவணியே வருடப் பிறப்பாகவும், முதல் மாதமான ஆவணியை, விநாயகரை வணங்கித் தொடங்கும் வழக்கமும் சுமார் 5,000 ஆண்டுகளுக்குமுன் வழக்கில் இருந்துவந்தது. விநாயக சதுர்த்தியும் ஆவணி மாதத்தில் தான் என்பது இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கது.  காலமாற்றத்தால் சித்திரையே வருடப் பிறப்பாகிவிட்டது. இன்றைக்கும் கேரள மாநிலத்தில் கொல்லம் ஆண்டு ஆவணியில் தொடங்குவதைக் காணலாம்.  இதுவே சரியான கணக்கு. 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திலதர்ப்பணப்புரி. இங்கு தான் ராமன் தன் தந்தை தசரதருக்கும், தந்தை போன்ற சடாயு என்ற பறவை அரசனுக்கும் பிதுர்க்கடன் நிறைவேற்றினார்.  தசதரரே நேரில் வந்து பிண்டம் பெற்றுக்கொண்ட சிறப்பு வாய்ந்தது இத்தலம்.  இங்குள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனித முகத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். 

யானை முகமாகத் தோன்றுவதற்கு முன் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட உருவம் இது. 

முதன்முதலில் உருவான விநாயகர் என்பதால் ஆதிவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

விநாயகப்பெருமானுக்கு உகந்த எண்ணிக்கை -- 21.  எனவே அவரை வழிபடும் போது அவருக்கு பிடித்த பொருட்கள் அனைத்தும் 21 என்ற எண்ணிக்கையாக இருந்தால் மிகவும் நல்லது.

ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி நாளில் (தேய்பிறை சதுர்த்தி) (பௌர்ணமியிலிருந்து நான்காம் நாள்) விரதமிருந்து ஆனைமுகனை வழிபடின் எல்லா சங்கடங்களும் விலகி நிம்மதியான வாழ்வு கிட்டும்.  ஆலயம் செல்ல இயலவில்லை எனில் வெற்றிலையில் மஞ்சளில் விநாயகரை பிடித்து, அறுகம்புல் சாற்றி வழிபடலாம்.  எந்த பொருளிலும் விநாயகரை பிடித்து வழிபடலாம்.  தவறில்லை.  பக்தியே முக்கியம்.
  

ஓம் கம் கணபதயே நமஹ

No comments:

Post a Comment