தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!
தலம் : பொது பண் : பழம் பஞ்சுரம்
திருமுறை : நான்காம் திருமுறை அருளியவர் : திருநாவுக்கரசர்
- பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றி யூரெம் உத்தமனை உள்ளத் துள்ளே வைத்தேனே. - ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே. - மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயா றமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே. - புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்
கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்டத் தரிமான் ஏற்றை அடைந்தேனே. - கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை அமரர் சென்னி யாய்மலரைப்
பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே. - மருக லுறையுமா ணிக்கத்தை வலஞ் சுழியின் மாலையை
கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப்
பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே. - எழிலார் இராச சிங்கத்தை இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத் தம்மானை அன்பி லணைத்து வைத்தேனே. - மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையும் மணாளனை
ஆலைக் கரும்பி னின்சாற்றை அண்ணா மலையெம் அண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே. - சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழனத் தம்மானை ஆல வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே. - புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே. - முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை அரக்க னாற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவ நாசமே.
நாம் மேலே காணும் பதிகம் பாவநாசத் திருப்பதிகம் ஆகும். இது நான்காம் திருமுறையில் 15ம் பதிகமாக அமைந்துள்ளது. இதனை அருளியவர் திருநாவுக்கரசர் ஆவார். இது எந்த ஒரு தலத்தையும் குறித்து பாடப்படவில்லை. எனவே இது பொது என்ற பிரிவில் அடக்கப்பட்டுள்ளது. இதன் பண் பழம் பஞ்சுரம் ஆகும். இப்பதிகத்தில் திருநாவுக்கரசர் பல்வேறு தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானினின் பெயர்களை குறிப்பிடுகிறார்.
இப்பதிகத்தின் கடைசி வரியில் பாவங்கள் நாசமாகும் என்ற குறிப்பு காணப்படுகிறது. சிவபெருமானின் பல்வேறு பெயர்களை உள்ளன்புடன் கூறி வழிபாடு செய்ய நாம் செய்த பழம் வினைகள் அனைத்தும் நாசமாகும் என்பது திண்ணம். இப்பதிகத்தை தினமும் காலை - மாலை இரு வேளையும் பாராயணம் செய்ய நாம் எத்தனை பிறவிகளில் செய்த பாவங்களும் அழிந்து போகும் என்பது உறுதி.
இப்பதிகத்தை முதன் முதலில் பிரதோஷ வேளையில் பாராயணம் செய்வது நல்லது. காலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும், மாலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும் ஆக இருமுறைகள் தினமும் பாராயணம் செய்து வர வேண்டும். இதனை பாராயணம் செய்பவர்கள் அசைவத்தை நிரந்தரமாக கைவிட்டவர்களாக இருத்தல் நலம் பயக்கும். பாராயணம் விரைவில் பலன் தரும்.
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், நோய்கள் ஆகியன நமது முற்பிறவிகளில் செய்த பாவங்களால் தான் ஏற்படுகிறது. முற்பிறவி மட்டுமல்லாது இப்பிறவி பாவங்களும் அழிந்தால் மட்டுமே நம் வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். பாவங்களை அழித்து வாழ விழைவோர் அவர் தம் முன்வினைகளை – கர்மவினைகளை அழித்து நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல அண்ணாமலையானின் பாதம் பணிந்து இப்பதிவினை பதிவிடுகிறேன்.
எதுவும் என்னுடையதல்ல… அனைத்தும் உன்னுடையதே…! அருளாளா…!! அருணாச்சலா…!!!
திருச்சிற்றம்பலம்…! பொன்னம்பலம்…!! அருணாச்சலம்…!!!