எச்சரிக்கை...! எச்சரிக்கை...!! எச்சரிக்கை...!!!
முனீஸ்வரர் பொருட்களை களவாடியதால் ஏற்பட்ட விபரீதம்
எம் காவல் தெய்வம் - மகா முனீஸ்வரர்
இப்பதிவில்
நீங்கள் காணும் முனீஸ்வரரின் பெயர் மகா முனீஸ்வரர் ஆவார். முனிகளுக்கெல்லாம்
மூத்தவர் இவரே. இவரை பெரியண்ணன், பெரியாண்டவர், பெரியசாமி
என்றும் அழைப்பதும் உண்டு. இவரைப்பற்றி ஆன்மீகச்சுடரில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இவரது ஆலயம்
வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், ஊசூரை அடுத்த சிவநாதபுரம் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவரின்
ஆலயங்களுக்கு கூரை கிடையாது. தற்போது
சிமெண்டினாலான சுதை வடிவம்
கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும்
பகல் 12 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். யார் வேண்டுமானாலும்
அவருக்கு தங்கள் கையால் அபிஷேகம் செய்யலாம் என்பது முக்கிய செய்தியாகும்.
இவரின் ஆலயத்தில் இவருக்கு சொந்தமான வீச்சரிவாள், கோவில் மணி, பித்தளை சொம்பு ஆகியன சுமார் 9 மாதங்களுக்கு முன்பு களவு போயின.
அதில் வீச்சரிவாளை களவாடியவர்கள் அதை எடுத்து செல்லும் வழியில் காட்டுப்பன்றி வழிமறிக்க அவர்கள் பயத்தில் வீச்சரிவாளை அருகிலுள்ள புதரில் வீசிவிட்டு மூலைக்கொருவராக சிதறி ஓடிவிட்டனர். பின்பு அந்த வீச்சரிவாளை அருகிலுள்ள நிலத்திற்கு சொந்தக்காரர் கண்டெடுத்து ஆலயத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார்.
இக்கோவிலுக்கு வரும் வழியில் உள்ள கிராமத்தில் ஒரு இளைஞன் பித்தளை பொருட்களை களவாடி அதை விற்ற பணத்தில் குடித்துவிட்டு மகிழ்ச்சியாக பொழுது போக்குவது வழக்கம். கோவில்களின் மணியை திருடுவது இவனது வாடிக்கை. இவ்வாறு முனீஸ்வரர் கோவிலின் மணியை களவாடி அதை விற்ற பணத்தில் குடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறான்.
அன்றைய தினத்திலிருந்து 10வது நாள் அவனுக்கு புத்தி பேதலித்து விட்டது. அவன் கோவில் மணியை திருடியிருப்பது அவன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். அவனுடைய வீட்டிலிருப்பவர்கள் அவனை மருத்துவர்களிடமும், மந்திரவாதிகளிடமும் அழைத்து சென்றும் குணப்படுத்த முடியவில்லை. அவன் தானாக வீட்டை விட்டு வெளியேறி எங்காவது சென்று விடுவானாம். அவன் மீண்டும் இதே முனீஸ்வரர் கோவிலுக்கு மீண்டும் 3 முறை வந்திருக்கிறான். கோவிலிலேயே தங்கியிருக்கிறான். அவனது வீட்டிலிருப்பவர்கள் அவனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.
இக்கோவிலில் பூசைகள் செய்பவர் இதனை கேள்விப்பட்டு அவனது வீட்டிலிருப்பவர்களுக்கு சொல்லி முனீஸ்வருக்கு பூசை செய்தால் சரியாகி விடும் என கூறியுள்ளார். ஆனால் அதை அவர்கள் காதில் வாங்க வில்லை. அலட்சியமாக இருந்துள்ளனர். அன்று மறுநாள் இரவு அவனது வீட்டில் அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவனது வீட்டிலிருப்பவர்கள் விடிந்தவுடன் அவனைப் பார்த்து பயந்து போய் இருக்கிறார்கள். அவனது உடல் கோவில் மணியின் நாக்கு காற்றில் ஆடுவது போல் கயிற்றில் ஆடிக்கொண்டிருந்ததாம்.
அவன் இறந்து சுமார் 2 மாதங்கள் ஆகின்றன. இந்த செய்தியைக் கேட்ட எங்கள் அனைவருக்கும் மிகவும் வருத்தம். அந்த இளைஞனின் வீட்டிலிருப்பவர்களின் அலட்சியத்தினால் வந்த விபரீதத்தை பாருங்கள். முனீஸ்வரருக்கு பூசை செய்திருந்தால் அவனது குற்றத்தை மன்னித்து அவனை குணப்படுத்தியிருப்பார். அதற்காக தான் அவனை 3 முறை அவரது கோவிலுக்கு தானாக வரவழைத்துள்ளார் முனீஸ்வரர். கோவிலின் பொருட்களை திருடிவிட்டு அதற்காக மன்னிப்பு கேட்காமலும், முனீஸ்வரரின் தண்டனையை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவு திருடியவனின் உயிர் போனது.
மேலும் வன அலுவலர் ஒருவர் வெண்மையான உருவம் ஒன்று விறகு கட்டை சுமந்து கொண்டு மலையை விட்டு இறங்கி முனீஸ்வரர் கோவிலுக்குள் சென்றதை கண்ணால் கண்டிருக்கிறார். அவர் வந்து கோவிலுக்குள் தேடிப்பார்த்திருக்கிறார். அங்கு யாரையும் காணவில்லை. அவரும் பயந்து போய் முனீஸ்வரரை வணங்கி சென்றிருக்கிறார்.
இதற்கு முன்னர் சிறுவர்கள் சிலர் இக்கோவிலின் அருகே உள்ள விளா மரத்தில் கல்லெறிந்து விளாங்காய்களை தின்றிருக்கிறார்கள். அவர்கள் எறிந்த கல் அந்த மரத்தின் கீழே இருந்த முனீஸ்வரர் கற்களின் (மூன்று செங்கற்களை வைத்து முனீஸ்வரரை வழிபடுவது வழக்கம்) மீது விழுந்துள்ளது. அன்றிரவே அந்த சிறுவர்களுக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. எங்கு சென்றும் அந்த காய்ச்சல் குணமாகவில்லை. மீண்டும் முனீஸ்வரரின் கோவிலுக்கு வந்து பூசை செய்த பின்பே அவர்களின் காய்ச்சல் குணமாகியது.
எத்தனையோ கோவில்களில் எத்தனையோ பொருட்கள் திருடு போய் இருக்கின்றன. ஆனால் எந்த தெய்வமும் அதை களவாடியவர்களை தண்டித்தது கிடையாது. ஆனால் காவல் தெய்மான முனீஸ்வரர் பைரவரின் அம்சம். தவறிழைத்தால் தண்டிப்பதில் வல்லவர். அவரை அண்டி சரணடைந்தால், தம்மை
அண்டியவர்களை காப்பாற்றி அருள்பாலிக்கும் மகா முனீஸ்வரின் பாதம் பணிந்து நாமும் எல்லா வளங்களையும், மன
நிம்மதியையும் பெறுவோம்.
ஓம் ஹ்ரீம் மகா முனீஸ்வராய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment