Saturday, September 21, 2013

சிவசக்தி சமத்துவம் விளக்கும் அர்த்தநாரீஸ்வரர் துதி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgd3wIp_7a7jEM4grfDR2q9dMrA8xsXJ5xTHOAaMU5zcErMgOynxYAMZS1g-GsULT_Tn_x3on1nBEhuL6ILgNs7_4yheUwINRjt9aiH2tXc8paNhZdwfP5V6nU2nO40uSOs-tx7Sl4RlX1F/s640/tamil_clip_image002.jpg 
 


அர்த்தநாரீஸ்வர துதியின் சூட்சுமத்தினை அருவமாய் எமக்கு உணர்த்திய அன்னை பகுளாதேவி உடனுறை ஆதி சித்தர் காகபுசுண்டர் பெருமான் பொற்பாதங்களுக்கு இப்பதிவினை ஆன்மீகச்சுடர் சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறது.


அர்த்தநாரீஸ்வரர் என்ற வடமொழி சொல்லுக்கு தூய தமிழ் சொல் உமையொருபாகன் என்பதாகும்.  சிவனும் சக்தியும் சரிசம பாகமாய் அமைந்த திருவுருவமே அர்த்தநாரீஸ்வர வடிவம்.  ஆண் பெண் சமத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் உயர்ந்த வடிவம்.  ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை உணர்த்தும் வடிவம்.


சக்தியில்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை.  சிவ சக்தி கலப்பே உலகம்.  அதுவே விந்து நாத தத்துவம்.  சிவசக்தி சேர்க்கையே உலக இயக்கத்திற்கு காரணமாய் அமைவது ஆகும்.  அர்த்தநாரி வடிவத்தை வழிபட்டால் கணவன் மனைவியிடையே உள்ள பிணக்குகள் தீர்ந்து ஒற்றுமை மேலோங்கும்.


அர்த்தநாரீஸ்வர துதியில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன.  அவற்றில் முதல் 8 பாடல்கள் சிவசக்தி கலப்பையும், சிவசக்தியின் பெருமைகளையும் விளக்குகின்றன. கடைசி பாடல் துதியினை பாராயணம் செய்வதால் ஏற்படும் பலனையும் கூறுகிறது.


எடுத்துக்காட்டாக, முதல் பாடலை எடுத்துக் கொள்வோம்.  அந்த பாடல் இதோ.

சாம்பேய கௌரார்த சரீரகாயை
கர்பூர கௌரார்த சரீரகாய
தம்மில்லகாயை ச ஜ்டாதராய
நம:சிவாயை ச நம:சிவாய 

முதல் வரியில் சக்தியின் சொரூபத்தையும், இரண்டாம் வரி சிவனின் சொரூபத்தையும், மூன்றாம் வரியின் முதல் பாதி சக்தியைப் பற்றியும், மறுபாதி சிவனை பற்றியும், கடைசி வரியின் முதல் பாதி சக்தியை வணங்குவதற்காகவும், மறுபாதியில் சிவனை வணங்குவதாகவும் உள்ளது.


என்ன வியப்பு...!  இரண்டு வரிகளில் இருவருக்கும் ஒவ்வொரு வரியும், மீதமுள்ள இரண்டு வரிகளில் ஒவ்வொன்றிலும் பாதி பாதி வரி இருவருக்கும் சமமாக பங்கிடப்பட்டுள்ளது.


முதல் வரி “யை” என்னும் எழுத்தில் முடிகிறது.  இது சக்திக்கு உரியது.  இரண்டாம் வரி “ய” என்னும் எழுத்தில் முடிகிறது.  இது சிவனுக்கு உரியது.  அதே போல் மூன்றாம் வரியின் முதல் பாதி “யை” என்னும் எழுத்திலும், மறுபாதி “ய” என்னும் எழுத்திலும் முடிகிறது.  நான்காம் வரியின் முதல் பாதி “யை” என்னும் எழுத்திலும், மறுபாதி “ய” என்னும் எழுத்திலும் முடிகிறது.


நான்காம் வரியின் முதல் பாதி “நம: சிவாயை” என முடிகிறது.  இது சிவை என்னும் சக்திக்கு வணக்கத்தை கூறுவதாக உள்ளது.  மறுபாதி “நம: சிவாய” என முடிகிறது.  இது சிவன் என்றும் இறைவனுக்கு வணக்கத்தை கூறுவதாக உள்ளது.


நம : என்பதன் பொருள் வணக்கம்.
சிவாயை என்பதன் பொருள் சக்தி.
சிவாய என்பதன் பொருள் சிவன்.


இத்துதியில் எங்கு காணினும் சிவசக்தி சமத்துவமே மேலோங்கி நிற்பதை காண முடிகிறது.  முதல் இரண்டு வரிகளில் சக்தியும் சிவனும் கலந்து நிற்கின்றனர்.  மூன்றாம் வரியில் சக்தியும் சிவனும் பாதி பாதியாக கலந்து நிற்கின்றனர்.  இதே போல் நான்காம் வரியில் சக்தியும் சிவனும் பாதி பாதியாக கலந்து நிற்கின்றனர்.


“யை” என்று முடியும் சொல் பெண்ணையும், “ய” என்று முடியும் சொல் ஆணையும் குறிக்கின்றது.  இது துதியின் 8 பாடல்களுக்கும் பொருந்தி வருகிறது.  9ம் பாடல் துதியின் பலனை கூறுகிறது.


அனைத்து பாடல்களிலுமே சிவசக்தி கலப்பே மேலோங்கி நிற்கிறது.  பாடல்கள் அனைத்திலுமே அர்த்தநாரீஸ்வர தத்துவம் வெளிப்படுகிறது.  பாடலும், பாடலின் வரிகளும் சிவசக்தி சமத்துவமாகவே அமைந்திருக்கின்றன.  பாடலே அர்த்தநாரீஸ்வர வடிவமாகவே அமைந்துள்ளது.


இத்தகைய சிறப்புடைய துதியை நாம் தினமும் படித்து இனிய நிம்மதியான வாழ்க்கையை பெறுவோம்.


தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!


ஓம் அண்ணாமலையே போற்றி...!
ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி...!!
ஓம் அரப்பளீஸ்வரா போற்றி...!!!


ஓம் அன்னை பகுளாதேவி உடனுறை காகபுசுண்ட நாதா போற்றி...!


ஓம் சிவ சிவ ஓம்


No comments:

Post a Comment