Tuesday, September 24, 2013

பொன்னும், பொருளும் நல்கும் பதிகம்


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTgc_STpUJcSUWAmafEMMwtQGMBplgQ17i9Nhxnnd6sqzJx12a7TKgaGViXwcgp3t06pf3TBt4P_hji_1-mqvU61Pbu4HC6X0GvZs5RCWBMPRb9WXs5c0TyS8F2nwodhSjwyPRBihhsMw/s1600/Pic+-+Swarna+Bhairava+-+574954_610515832296235_1245723330_n.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOUljE9ZY_tdnXdejQIz7w2fC68-56NZblrNr5sOc_IbzU6x5G77y2POFMP71D4Q3gvuexUrxu5zL91-HhaPuCF_WbeBi5ADZpKJkaVH5t4MZOhoS3bt8MPf6JBJ_dosv9ziEwDxhpBd0/s1600/100_5638.JPG

 


திருச்சிற்றம்பலம்

தலம்: திருவாவடுதுறை                               பண்: காந்தார பஞ்சமம்


இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே



வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே



நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மற்வேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே



தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே



கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே



வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாது என்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே



வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே



பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே



உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே



பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே



அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை யெம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமசை நிலையிலரே.

திருச்சிற்றம்பலம்


ஆக்கம்: திருஞானசம்பந்தர்


பொருளிலாதவர்க்கு இவ்வுலகம் இல்லை; அருளிலாதவர்க்கு அவ்வுலகம் இல்லை என்ற கூற்றின் படி பொன்னும் பொருளும் இல்லையெனில் இவ்வுலக வாழ்க்கை என்பது சிரமமான ஒன்றாகும்.  தெய்வ அருள் இல்லையெனில் விண்ணுலகம் கிட்டாது என்பது திண்ணம்.


நீங்கள் மேலே காண்பது பொன்னும் பொருளும் நல்கும் பதிகமாகும்.  இதனை தினமும் படித்துவர பொன்னுக்கும் பொருளுக்கும் ஒரு போதும் குறைவிருக்காது.


மேற்கண்ட பதிகத்தை தினமும் சொர்ண பைரவர் அல்லது உமாமகேஸ்வரர் பெருமான் படத்தின் முன்பு 1 முறை பாராயணம் செய்து வர பொன் மற்றும் பொருள் இவற்றின் சேர்க்கை உண்டாகும்.  வறுமை என்பதே இல்லாமல் ஓடிவிடும்.


முதன்முதலில் ஆரம்பிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமியாக இருத்தல் மிகவும் நன்று.  முதன் முதலில் சிவதலத்தில் கொடிமரத்தின் அருகே ஒரு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து 9 முறை பாராயணம் செய்யவும்.  பின்பு வீடு திரும்பி சொர்ணபைரவர் அல்லது உமாமகேஸ்வரர் படத்தின் முன்பு 1 முறை பாராயணம் செய்து வரவும்.


மறுநாளிலிருந்து தினமும் வீட்டில் 1 முறை பாராயணம் செய்து வந்தால் போதுமானது.  இல்லறத்தில் வறுமை நீங்கி இல்லறம் நல்லறமாக நடக்க நியாமான வழியில் பொன்னும் பொருளும் வந்து சேரும்.


முதலில் குலதெய்வத்தை வணங்கவும்.  பின்பு விநாயகரை வணங்கவும்.  அதன் பின்பு உங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கவும்.  பிறகு சிவபெருமானை வணங்கவும்.  திருச்சிற்றம்பலம் என்று கூறி பின்பு பதிகத்தை பாடவும்.  பாடி முடித்தவுடன் திருச்சிற்றம்பலம் என்று கூறி முடிக்கவும். 


மேற்கண்ட பதிகத்தை பாடும் போது இறைவனுக்கு எவ்வித படையல்களும் தேவையில்லை.  இலுப்பை எண்ணெய் தீபம் இரண்டு மட்டும் போதுமானது.  ஏனெனில் பதிகங்கள் படையல் பொருட்கள் மற்றும் வேள்விகள் செய்யாமலே நமது விருப்பங்களை இறைவனிடம் எடுத்துரைக்கக்கூடியவவை.  


படையல் பொருட்கள் மற்றும் வேள்விகள் இவற்றிற்கு தான் மந்திரம் தேவை.  மந்திரங்கள் தான் படையல்கள் மற்றும் வேள்விகள் மூலம் நமது விருப்பங்களை இறைவனுக்கு எடுத்துரைக்கக்கூடியவை.


திருஞானசம்பந்தரும் அவரது தந்தை சிவபாத இருதயரும் திருவாவடுதுறை தலத்தில் தங்கியிருக்கும் போது, சிவபாத இருதயர் தன் வேள்விக்காக தனது மகன் திருஞானசம்பந்தரிடம் பொன்னும், பொருளும் கேட்டார்.  சம்பந்தர் திருவாவடுதுறை இறைவன் மாசிலாமணீஸ்வரர் பால் மேற்கண்ட பதிகத்தைப் பாடினார்.


இப்பதிகத்தை கேட்ட இறைவன் அகமகிழ்ந்து தனது பூதகணங்களுக்கு கட்டளையிட, பூதகணங்கள் அள்ள அள்ள என்றும் குறையாத 1000 பொற்காசுகள் கொண்ட உலவாக்கிழியை பலிபீடத்தில் வைத்தன.  அதனை எடுத்து சம்பந்தர் தம் தந்தைக்கு தந்தார்.  அப்பொற்காசுகளைக் கொண்டு சிவபாத இருதயர் சீர்காழி தலத்தில் இறைவனை நோக்கி வேள்வி நடத்தி முடித்தார்.


உலவாக்கிழி வைக்கப்பட்ட பலிபீடம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.  நந்திக்கு பின்புறமாக உள்ள பீடமே பலிபீடம் ஆகும்.  அப்பீடத்தினைச் சுற்றி பூதகணங்களின் உருவங்கள் உள்ளன.  இங்கு நின்று இறைவனை வேண்டினால் வாழ்வில் பொன்னும், பொருளும் குறைவின்றி வந்து சேரும்.  இத்தலத்து உற்சவரின் பெயர் அனைத்திருந்த நாயகர்.  இறைவன் இறைவியை தழுவிக் கொண்ட வடிவம்.


இத்தலம் ஆண், பெண் ஒற்றுமையை தரக்கூடியது.  பிரிந்த தம்பதிகள் இத்தலத்து இறைவனையும், இறைவியையும் வழிபடில் பிரிந்தவர் ஒன்று கூடுவர் என்பது திண்ணம்.  இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கிறது.  இத்தலத்து இறைவன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு பிள்ளைப்பேறு அளித்தவர் ஆவார்.  இத்தலத்து இறைவனை முறையாக வழிபடில் பிள்ளைப்பேறு நிச்சயம்.  இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமும் ஆகும்.


இத்தலத்தில் சித்தர் திருமூலர் பெருமான் சமாதி அடைந்துள்ளார்.  இத்தலத்தின் தொன்மைப் பெயர் நவகோடி சித்தர்புரம் என்பது கவனிக்கத்தக்கது.  சித்தர்கள் வழிபட்ட இறைவன் நம் வாழ்வில் ஒளியேற்றுவார் என்பது திண்ணம்.


நாமும் தினமும் இப்பதிகத்தை பாடி எல்லா வளங்களையும் பெறுவோம்.

இப்பதிகத்தின் ஒலி வடிவம் பெற இங்கே சொடுக்கவும்.



தென்னாடுடைய சிவனே போற்றி...!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!


 ஓம் சிவ சிவ ஓம்



 

No comments:

Post a Comment