Monday, November 25, 2013

சக்தி மிக்க மனோ பைரவர் - காலபைரவாஷ்டமி சிறப்பு பதிவு

KalaBhairavDarbarSquare

ஸ்ரீ காலபைரவர், காத்மாண்டு, நேபாளம்

இன்று காலபைரவாஷ்டமி ஆகும்.  கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் தான் காலபைரவர் அவதாரம் செய்தார்.  இத்தகைய நன்னாளில் பைரவரைப் பற்றி சிறப்பு பதிவு வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறது.

 

பைரவர் என்றாலே மனதில் ஒரு வித பரவசமும், பக்தியும் குடி கொள்ளும் என்பது எல்லோரும் உணர்ந்த ஒரு நிகழ்வு ஆகும்.  பைரவர் என்பதன் பொருள் இதோ.

 

பை  - காத்தல்

ர – அழித்தல்

வ – படைத்தல்

 

மூன்று தொழில்களும் செய்யும் நாயகர் பைரவர் ஆவார்.  அதனால் தான் பைரவ பெருமானுக்கு முத்தொழில்களின் அடையாளமான திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளது.  மும்மூர்த்திகளின் தொழிலையும் செய்யும் ஆற்றல் கொண்டவர்.  இவர் சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர்.  நிர்வாண கோலத்தில் இருப்பவர்.  மூன்று கண்களை உடையவர்.  பாம்புகளை அணிகலனாக கொண்டவர்.  குண்டலம், சடைமுடியில் மாலை, கத்தி, சூலம், கபாலம், உடுக்கை, கோரைப்பற்கள் மற்றும் நாயை வாகனமாக கொண்டவர்.

 

சிவபெருமானின் 64 வடிவங்களில் பைரவர் கோலமே உலகெங்கும் வியாபித்து இருக்கும் சிவ வடிவமாகும்.  பைரவர் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர்.  நம் வாழும் இந்த கர்ம பூமியில் பைரவருக்கு எத்தனையோ கோவில்கள் கட்டப்பட்டு இருக்கிறது.  பைரவர் முதலில் ஒரு வடிவமாகவும், பின்பு 4 வடிவமாகவும், அதன் பின்னர் 8 வடிவங்களாகவும், அதே 8 வடிவங்கள் 64 வடிவங்களாகவும் தோன்றினார்.  எந்த பைரவ வடிவத்தை வழிபாடு செய்தாலும் அது ஆதிசிவனின் அவதாரமான ஸ்ரீ சொர்ண பைரவரையே சென்று சேரும்.

 

எத்தனை கோவில்கள் இருந்தாலும் மனம் என்ற கோவிலே மிகவும் சிறப்பானது.  எத்தனை பைரவர்களும் இருந்தாலும் நம் மனதில் குடி கொண்டிருக்கும் பைரவரே மிக மிக மிக சக்தி கொண்டவர்.  உலகெங்கும் வியாபித்திருக்கும் பைரவ பெருமான் நம் உள்ளத்தில் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.  மனோ பைரவர் நம் உடலோடும், உயிரோடும் கலந்து நிற்பவர்.  இதை எப்படி உணர்வது?  அது ஒன்றும் கடினமான செயல் இல்லை.  நாம் உள்ளன்புடன் பைரவ பெருமானை வழிபாடு செய்தாலே போதுமானது.  அப்படியென்றால் கோவில்களுக்கு சென்று பைரவரை வழிபாடு செய்யக்கூடாதா?  வழிபாடு செய்யலாம்.  தவறில்லை.

 

நம்மில் பலருக்கு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய நேரம் இருக்காது.  மேலும் வீட்டில் சொர்ணபைரவர் வழிபாடும் செய்ய இயலாத நிலையில் இருப்பார்கள்.  அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.  நமது மனமே பெரிய கோவில்.  நம் மனக்கோவிலில் பைரவ பெருமானை நிறுத்தி வழிபாடு செய்வதே மிகப் பெரிய சிவ வழிபாடு ஆகும்.  அதற்கு சில மனப்பயிற்சிகள் கண்டிப்பாக தேவை.  சதா சர்வ காலமும் மனதில் பைரவர் பெருமானை நினைத்து வந்தாலே போதுமானது.  அதாவது பூரண சரணாகதி அடைய வேண்டும்.  நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பைரவ பெருமானுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.  எல்லாம் இறைவனின் செயல் என்ற மனநிலை வருகிறதோ அந்த கணத்திலிருந்தே பைரவர் பெருமான் நம் உள்ளங்களி்ல் குடியேறுவார் என்பது திண்ணம்.

 

அதன் பின்னர் பைரவ பெருமான் நம் மனதிலிருந்து இயங்கும் மாபெரும் பைரவ சக்தியாக செயல்படுவார்.  நாம் எந்த பைரவரை வழிபாடு செய்தாலும் தவறில்லை.  நாம் வணங்கும் பைரவரே நம் மனோ பைரவராக செயல்படுவார்.  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பைரவ பெருமானை நாம் வழிபாடு செய்ய நமது மனத்தை விட சிறந்த ஆலயம் இந்த உலகத்தில் இருக்க முடியாது.  எனவே இவ்வாறு நாம் வழிபாடு செய்யும் காலத்தில் நமது உடல், உள்ளம் மற்றும் வாக்கு இவற்றில் சுத்தம் இருந்தாலே போதுமானது.  பைரவர் நமது மனத்தில் வந்து நிரந்தரமாக குடியேறுவார்.  அருள் புரிவார்.  தவறுகளை சுட்டிக்காட்டுவார்.  தண்டனைகளை கொடுத்து திருத்துவார்.  தமது அருள் மழையில் நனைய வைப்பார்.

 

அது மட்டுமல்லாமல் நமது கர்மவினைகளை சுட்டெரிப்பார்.  பிறவியில்லா பெருநிலை அருளுவார்.  நவகோள்களையும் நமக்கு நன்மை செய்யுமாறு ஆணையிடுவார்.  நமது பிறவி பயனை அடைய வைப்பார்.  நாளடைவில் நாம் பிறவிப்பிணியை ஒழித்து ஒரு பைரவ கணமாக மாறி பைரவ உலகத்தில் பைரவருடன் ஆனந்தமாக இனிதுடன் வாழலாம்.  நமது உடல், உயிர் மற்றும் வாக்கு இவற்றில் பைரவர் கலந்து நிற்பார்.  நம் பார்வை பட்ட மாத்திரத்தில் அனைவரின் கர்ம வினைகளும் நாசமாகும்.  பைரவ சொரூபமாகவே நாமும் மாறிடுவோம்.  பைரவரைப் போல் வேரொரு தெய்வத்தை நாம் இந்த கர்ம பூமியில் காண இயலாது.  இந்த உலகத்தில் நம்மை நாம் அனைத்து வித பிரச்சனைகளிலிருந்தும் காத்துக் கொள்ள பைரவரை துணைக் கொள்ள வேண்டும்.

 

காலபைரவாஷ்டமி நாளில் இப்பதிவினை எழுத வைத்த இறைவன் காலபைரவ பெருமானின் பாதம் பணிந்து அவருக்கு இந்த பதிவை சிறு காணிக்கையாக ஆன்மீகச்சுடர் வலைப்பூ அர்ப்பணிக்கிறது.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் க்லீம் காலபைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

No comments:

Post a Comment