Monday, December 16, 2013

குழந்தைகளைக் காக்கும் தெய்வம் - பெரியாச்சியம்மன்

Periachi

பெரியாச்சியம்மன் நம் தமிழ்நாட்டின் காவல் தெய்வங்களில் முக்கிய தெய்வம் ஆகும்.  நம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் நாடுகளிலும் வணங்கி போற்றப்படும் தெய்வம் பெரியாச்சி ஆவாள்.  இவள் சக்தியின் வடிவம்.  தீமையை அழிக்க வந்த காளியின் மறு உருவம் ஆவாள்.  தம்மை அண்டியவர்களின் துயரினை களைந்து அருள் பாலிக்கும் உன்னத தெய்வம் பெரியாச்சியம்மன் ஆவாள்.

பெரியாச்சியம்மனின் தோற்றம் பற்றிய ஒரு கிராமிய கதை ஒன்று உண்டு.  அந்த கதையின் படி பாண்டிய நாட்டினை வல்லாளன் என்ற ஒரு அரசன் ஆண்டு வந்தான்.  அவன் கொடுங்கோல் அரசன்.  அவன் தன் மக்களை துன்புறுத்தி வந்தான்.  தன் நாட்டு மக்களை மட்டுமல்லாமல் முனிவர்களையும், சாதுக்களையும், ரிஷிகளையும் கூட துன்புறுத்தி வந்தான்.  தீமையின் மொத்த உருவமான அந்த அரசன் அரக்கர்களையும் தன் வசம் வைத்திருந்தான்.  அதனால் அவனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.

அவனது கொடுமைகளிலிருந்து விடுபட மக்களும், முனிவர்களும் எல்லாம் வல்ல காளி அன்னையை துதித்து வந்தார்கள்.  அரசனின் மனைவியோ அவனின் குணத்திற்கேற்றவாறே தீமையின் உருவமாகவே விளங்கினாள்.  இந்நிலையில் அரசி கருவுற்றாள்.  அவளது கருவில் வளரும் குழந்தையோ உலகத்தினையே அழிக்க வல்ல ஒரு அசுர குழந்தையாகவே கருவில் வளர்ந்து வந்தது.  கொடுங்கோல் அரசன் வல்லாளன் ஒரு முனிவரை துன்புறுத்தும் போது அந்த முனிவர் அரசனுக்கு ஒரு சாபத்தினை அளித்தார்.

அந்த சாபத்தின் படி அவனது குழந்தையின் உடல் இந்த மண்ணில் பட்டால் அரசனும் அவனது நாடும் அழிந்து போகும்.  அரசனின் சாவிற்கு அவனது குழந்தையே வழிகோலும்.  எனவே இதனை தடுக்க அந்த அரசன் வழி தெரியாமல் திண்டாடினான்.  நாளும் ஆயிற்று.  குழந்தை பிறக்கும் காலம் வந்தது.  அரசனின் மனைவிக்கு பிரசவம் பார்க்க மருத்துவச்சியை (ஆச்சி) தேடினான்.  ஆனால் அரசிக்கு பிரசவம் பார்க்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் காளிதேவி பெரியாச்சியாக வந்தாள்.  ஆச்சி என்பது பிரசவம் பார்க்கும் வயது முதிர்ந்த மூதாட்டியைக் குறிக்கும் சொல் ஆகும்.  பிரசவம் பார்க்கும் நல்ல திறமையுள்ள பாட்டிகளுக்கு ஆச்சி மார்கள் என்றே பெயர்.  அரசன் பெரியாச்சியாக வந்த காளியின் உதவியை நாடினான்.  அவள் தெய்வம் என்பதை அறியாமல் தன்னுடைய குழந்தை மண்ணில் படாமல் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.  அனைத்தும் அறிந்த பெரியாச்சியோ தமக்கு பெருமளவில் பொன்னும் பொருளும் தர வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்தாள்.

நிபந்தனையை ஏற்ற அரசன் பெரியாச்சியை அரண்மனைக்கு அழைத்து வந்து அரசிக்கு பிரசவம் பார்க்க செய்தான்.  குறிப்பிட்ட நேரம் வரை பிறந்த குழந்தையை கைகளில் ஏந்தியவாறு அரசனை நோக்கி தமக்கு நிபந்தனைப்படி பொன்னும் பொருளும் தர வேண்டினாள் பெரியாச்சி.  ஆணவம் கொண்ட அரசன் பெரியாச்சியை தனது நாட்டின் குடிமக்களில் ஒருத்தி எனவும் தனது அடிமை எனவும் கூறி அவமதித்தான்.  பெரியாச்சியை கொல்ல துணிந்தான்.  கோபம் கொண்ட பெரியாச்சியம்மை தனது சுய உருவத்தினைக் காட்டினாள்.

அரசனை தன் கால்களில் போட்டு மிதித்து கொன்றாள்.  அவனது கொடுமைகளுக்கு துணையிருந்த அரசியை மடியில் கிடத்தி வயிற்றினை கிழித்து கொன்றாள்.  தீமையின் உருவான குழந்தையை கீழே விடாமல் தன் கைகளில் பிடித்திருந்தாள்.  அரசனுக்கு துணையாக இருந்த அரக்கர்களையும் கொன்று நாட்டு மக்களை காப்பாற்றினாள் பெரியாச்சியம்மன்.  வணங்கி துதித்த மக்களைக் கண்ட பெரியாச்சி கோபம் தணிந்து மக்களுக்கு பல வரங்கள் அளித்தாள்.

அதன் படி தான் காளியில் அவதாரம் எனவும், தான் குடி கொள்ளும் ஊரை காப்பாற்றுவதாகவும் வரமளித்தாள்.  அந்த ஊரில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், பிறந்த குழந்தைகளைக் காப்பாற்றுவதாகவும் உறுதியளித்தாள்.

தற்காலத்தில் கருவுற்ற 3ம் மாதத்தில் பெரியாச்சியின் கோவிலில் கர்ப்பிணிகள் வந்து வேண்டிக்கொள்கின்றனர்.  பிரசவம் நடந்து 30 நாட்கள் கழித்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும், ஆடி மாதமும் பெரியாச்சியம்மனை வழிபட உகந்தவை.

கிராமங்களுக்கும், நகரத்திற்கும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் உன்னத காவல் தெய்வம் பெரியாச்சி என்பதில் சந்தேகம் இல்லை.  இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியாச்சியன்னையின் அருளினைப் பெற குருவரளும், திருவருளும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சக்தி ஓம்

 

 

No comments:

Post a Comment