Thursday, October 24, 2013

அகத்தியரின் அருள் மழை

 agathiyarசித்தர்களின் தலைவர் அகத்தியர்

agathiஅன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான்

 

அகத்தியர்” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம்.  கும்பமுனி, குருமுனி, தமிழ்முனி என்றெல்லாம் சிறப்பித்து அழைக்கப்படுபவர் நம் அகத்தியர் பெருமான்.  சித்தர்களுக்கெல்லாம் தலைவர் இவரே.  முக்காலமும் அறிந்தவர்.  கடவுளர் அனைவரின் அருளை ஒருங்கே பெற்றவர் நம் அகத்தியர் பெருமான்.

 

அகத்தியர் வாழும் மலை பொதிகை மலை ஆகும்.  சிவபெருமானின் திருமணத்தின் போது ஏற்பட்ட பூமி சமமற்ற நிலையை நீக்க இறைவனால் தென்னாடு அனுப்பப்பட்டவர்.  தென்னாட்டில் சிவசக்தி திருமணத்தை இறைவன் அருளால் கண்டவர்.  சித்த மருத்துவத்தின் தந்தை இவரே.  இவருக்கு தெரியாத மருத்துவ முறைகளே இல்லை.  அகத்தியர் மருத்துவம் மட்டுமல்லாமல் மணி, மந்திரம், சோதிடம், வானவியல், தமிழ், சமஸ்கிருதம், ரசவாதம் இவற்றிலெல்லாம் சிறந்து விளங்கியவர். 

 

சிவபெருமானின் மகனான குமரக்கடவுளிடம் தமிழ் கற்றவர்.  தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.  கருணையில் தாயைவிட மேலானவர்.  வீணை வாசிப்பதில் சிறந்த சிவபக்தனும் இலங்கை வேந்தனுமாகிய இராவணனை வென்றவர்.  காவிரியை அடக்கி கமண்டலத்தில் நிறுத்தியவர்.  அறுமுகக்கடவுளின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமானவர்.  ஏழுகடல் நீரை குடித்து இந்திரனுக்கு போரில் உதவியவர்.  விந்தியமலையை அடக்கியவர்.  வாதாபி, வல்லபன் ஆகிய அரக்கர்களை அழித்தவர்.

 

ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் மற்றும் சிவகீதை இவற்றை உபதேசித்தவர்.  கும்பத்திலிருந்து தோன்றியவர்.  தமிழை வளர்த்த சித்தர் அகத்தியர்.  முருகனின் ஆணைக்கிணங்க அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை இயற்றியவர்.  சித்தர்களுக்கெல்லாம் சித்தர்.  இவர் இயற்றிய அகத்தியர் ஜீவநாடி நூல் மிகவும் புகழ் பெற்றது.  அகத்தியர் எழுதிய நூல்கள் பல.  அவற்றுள் சில மட்டுமே கிடைத்துள்ளன.  மின்சாரத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் அகத்தியரே.  இதற்கு அகத்தியர் சமஸ்கிருத மொழியில் இயற்றிய அகத்திய சம்ஹிதை என்ற நூலே சாட்சி.

 

அகத்தியருக்கு சிவபெருமான் எப்போது காட்சியளித்தாலும் திருமணக்கோலத்திலேயே காட்சி தந்துள்ளார்.  அகத்தியரின் காலம் 9000 ஆண்டுகளுக்கு முன்பானது.  இன்றும் அகத்தியர் ஜீவநாடியில் நம்மில் பலருக்கு வழிகாட்டியுள்ளார்.  இவரின் கருணை அளவிடற்கரியது.  எல்லா உயிர்களின் துயரை துடைத்து அருள்புரிந்து கொண்டிருக்கிறார்.  நவகிரகங்களில் புதனை பிரதிபலிப்பவர்.  அறிவின் சிகரம்.  சித்த வைத்தியத்தின் பிதாமகர் இவரே.

 

அகத்தியரின் வேறு பெயர்கள்:

    1. தமிழ் முனி
    2. மாதவ முனி
    3. மாமுனி 
    4. குறுமுனி
    5. குருமுனி
    6. திருமுனி
    7. முதல் சித்தர்
    8. பொதிகை முனி
    9. அமர முனி
    10. குடமுனி

 

வழிபடும் முறை:

முக்கரணங்களின் சுத்தியோடு மஞ்சள் பூசிய சிறுபீடத்தில் அகத்தியரின் சிலையையோ அல்லது அவரது படத்தையோ வைத்து அதற்கு முன்பாக இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும்.  சுத்தமான செம்பில் நீரை வைக்க வேண்டும். பின்பு அவரது தியான செய்யுளை மனதார 3 முறை செபிக்க வேண்டும்.

 

தியானச் செய்யுள்:
ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்

பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

 
பதினாறு போற்றிகள்:
  1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
  2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
  3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
  4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
  5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
  6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
  7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
  8. இசைஞான ஜோதியே போற்றி!
  9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
  10. காவேரி தந்த கருணையே போற்றி!
  11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
  12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
  13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
  14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
  15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
  16. இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
 
படையல்:

இளம் பச்சை நிற துணியை அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை வழிபாட்டை ஆரம்பிக்கவும்.  நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” அல்லது “ஓம் அகத்தீசாய நமஹ” என்று 108 முறை செபிக்க வேண்டும்.

 
அகத்திய சித்தரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்:
  1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
  2. கல்வித்தடை நீங்கும்.
  3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
  4. முன்வினை பாவங்கள் அகலும்.
  5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
  6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
  7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
  8. சகலவிதமான நோய்களும் தீரும்.
  9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

 

அகத்தியர் பெருமானை வழிபட வழிபட நமது நெடுநாளைய பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக தீர ஆரம்பிக்கும்.  நாளடைவில் அவரது கருணைக்கு நாம் பாத்திரமாவோம்.  நமது வாழ்க்கையை மாற்றி அமைப்பார் அகத்தியர்.  தவறு செய்பவர்களையும் மன்னித்து திருத்துவார்.  பிறவி என்னும் கடலை கடக்க உதவுவார்.  நமது கர்மவினைகளை அடியோடு போக்குவார்.

 

கும்ப லக்கினம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு எளிதில் காட்சி தருவார் என்பது கூடுதல் செய்தி.

 

இந்த பதிவினை எழுத தூண்டிய கொல்லிமலையில் வாசம் செய்யும் அகத்தியரின் சீடர் போகர் சித்தரின் பாதம் பணிந்து இந்த பதிவினை போகர் பெருமானுக்கு சமர்ப்பிக்கிறேன்.

 

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி

ஓம் போக சித்தாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

3 comments:

  1. nan kedarnath 60 km munnadi irukara "agastyamuni" enkira oru chinna town la iruken... inga avarukuoru temple um iruku... history poi kidaiyathu... i belive it.... neenga muduincha inga vanthu visit pannunga... uttrakhand, rudraparayag dist, agastyamuni town..

    ReplyDelete
    Replies
    1. திரு. K. கோபால கிருஷ்ணன் அவர்களே...!

      தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி...! Google Earth - ல் தேடிப் பார்த்தேன். தாங்கள் குறிப்பிட்ட இடம் கேதார்நாத் செல்லும் வழியில் இருக்கிறது. அகத்தியர் பெருமான் உலகில் செல்லாத இடமே இல்லை. அகத்தியர் பெருமான் கண்டிப்பாக அங்கு வந்து தவம் இயற்றியிருப்பார். தாங்கள் குறிப்பிடுவது அகத்தியர் தென்னாடு வருவதற்கு முன்பாக தவமியற்றிய இடமாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் தான் அவருக்கு ஆலயம் அமைத்திருக்கிறார்கள். தாங்கள் குறிப்பிட்ட வரலாறு பொய் இல்லை. அகத்தியர் பெருமானின் அருள் இருந்தால் தான் என்னால் அங்கு வர இயலும். அவ்வாறு நான் வரும் போது அகத்தியர் பெருமானின் கோவிலை எமக்கு காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      ஓம் அகத்தீசாய நமஹ...!

      Delete