திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது. இறைவனின் அருளை வெகுவிரைவாக நமக்கு அளிப்பது நாம் ஏற்றும் தீபங்களே…! தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி கோரிய பலன்களை தருகின்றன. கர்ம வினைகள் நீங்காமல் நற்பலன்கள் கிடைக்காது. தீபங்களே கர்ம வினைகளை நீக்கக்கூடியவை. தெய்வங்களை அமைதி படுத்தக்கூடியவை. ஆனால் தீபங்களை ஏற்றுவதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவற்றை பின்பற்றி ஏற்றப்படும் தீபங்கள் நாம் நினைத்த பலனை தரக்கூடியவை.
விளக்கினை செய்யும் பொருட்களும் அதன் பலன்களும்:
மண் அகல் விளக்கு | பீடைகள் விலகும். |
வெள்ளி விளக்கு | திருமகள் அருள் உண்டாகும். |
பஞ்ச உலோக விளக்கு | தேவதை வசியம் உண்டாகும். |
வெங்கல விளக்கு | ஆரோக்கியம் உண்டாகும். |
இரும்பு விளக்கு | சனி தோஷம் விலக்கும். |
விளக்கின் வகைகள்:
1. | குத்து விளக்கு | உலோகத்தினால் செய்யப்பட்டது. |
2. | அகல் விளக்கு | மண்ணால் செய்யப்பட்டது. |
3. | காமாட்சி விளக்கு | உலோகத்தினால் செய்யப்பட்டது. |
4. | கிலியஞ்சட்டி விளக்கு | மண்ணால் செய்யப்பட்ட அகண்ட விளக்கு. |
5. | செடி விளக்கு | உலோகத்தால் செய்யப்பட்ட செடி போன்ற அமைப்பை உடையது. |
6. | சர விளக்கு | உலோகத்தினால் அடுக்கடுக்காக செய்யப்பட்டது. |
திருவிளக்கின் சிறப்பு: (குத்து விளக்கு)
தீப ஒளியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கும். இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் திருமாலும், நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர்.
எனவே விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். வாயால் ஊதி அணைக்கக்கூடாது. அவ்வாறு அணைத்தால் சிவபெருமானையும், முப்பெரும் சக்திகளையும் அவமதிக்கும் செயலாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
குத்து விளக்கின் மூன்று பாகங்களும் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும். தற்போது கடைகளில் கிடைக்கும் குத்து விளக்கினை மேற்கண்ட மூன்று பாகங்களை தனித்தனியாக கழற்ற முடியும். ஒரு சிலர் அடிப்பாகத்தில் அழுக்கினை சேர விடுகின்றனர். இது பிரம்மாவை அவமதிக்கும் செயலாகும்.
உயரம் அதிகமாக உள்ளதாக நினைத்து தண்டினை கழற்றி வைத்து விட்டு மேல் மட்டும் அடிப்பாகம் இவற்றை மட்டும் பயன்படுத்துகின்றனர். இதுவும் தவறாகும். இது திருமாலை அவமதிப்பதாகும். பிரம்மா மற்றும் திருமால் இருவரும் மிகப்பெரிய சிவபக்தர்கள் ஆவர். அவர்களை அவமதிப்பது சிவபெருமானையே அவமதிப்பதாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தீபங்கள் ஏற்றும் இடங்கள்:
வீட்டின் பூசையறை, நடு முற்றம், சமயலறை, துளசி மாடம், பாம்பு புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
தீபங்கள் 16 வகைப்படும். அவை…
- தூபம்
- தீபம்
- அலங்கார தீபம்
- நாகதீபம்
- விருஷ தீபம்
- புருஷா மிருக தீபம்
- சூலதீபம்
- கமடதி (ஆமை) தீபம்
- கஜ (யானை) தீபம்
- வியக்ர (புலி) தீபம்
- சிம்ஹ தீபம்
- துவஜ (பொடி) தீபம்
- மயூர (மயில்)தீபம்
- பூரண கும்ப (5 தட்டு) தீபம்
- நட்சத்திர தீபம்
- மேரு தீபம்
விளக்கேற்றும் காலம்:
வேளை | நேரம் |
காலை | 4.30 மணி முதல் 6.00 மணி வரை (பிரம்ம முகூர்த்தம்) |
மாலை | 4.30 மணி முதல் 6.00 மணி வரை (தினப்பிரதோஷம்) |
மேற்கண்ட காலங்களில் விளக்கேற்றுவது மிகுந்த புண்ணியத்தை தரும். நமது கர்ம வினைகள் நீங்கும். தெய்வத்தின் அருள் எளிதில் கிட்டும். நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும். தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு ஒப்பாகும். தீபத்தில் உள்ள எண்ணெய் தெய்வத்திற்கு அவிர் பாகமாக போய் சேரும். ஒருவரது இல்லத்தில் கண்டிப்பாக மேற்கண்ட இரண்டு வேளையும் விளக்கேற்ற வேண்டும். குளித்த பின்பே நாம் விளக்கேற்ற வேண்டும். குளிக்காமல் ஏற்றப்படும் விளக்கிற்கு பலன் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
விளக்கின் முகங்களும் அவற்றின் பலன்களும்: (குத்து விளக்கு)
ஒரு முகம் | நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும். துன்பங்கள் நீங்கும். நன்மதிப்பு உண்டாகும். |
இரண்டு முகம் | கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும். |
மூன்று முகம் | புத்திர தோஷம் நீங்கி மக்கட் பேறு உண்டாகும். |
நான்கு முகம் | அனைத்து பீடைகளும் நீங்கும். அனைத்து செல்வங்களும் கிட்டும். |
ஐந்து முகம் | எல்லா நன்மைகளும் கிட்டும். அட்ட ஐச்வரியங்களும் உண்டாகும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். திருமணத்தடை நீங்கும். புண்ணியம் பெருகும். |
விளக்கின் தீபம் நோக்கும் திசையும் அதன் பலனும்: (திசைக்காட்டியை கருத்தில் கொண்டது)
கிழக்கு | இந்திரனைப் போல் வாழ்வு உண்டாகும். அனைத்து துன்பங்களும் நீங்கும். குடும்பம் செழிப்புறும். பீடைகள் நீங்கும். |
மேற்கு | கடன் தொல்லை நீங்கும். சனி தோஷம், கிரக தோஷம் முதலான அனைத்து வகை தோஷங்களும் நீங்கும். சகோதரர்களிடையே ஒற்றுமை உண்டாகும். பங்காளிப்பகை நீங்கும். |
வடக்கு | திருமணத்தடை நீங்கும். சர்வ மங்கலமும் உண்டாகும். பெரும் செல்வம் வந்து சேரும். கல்வித்தடை நீங்கும். சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும். |
தெற்கு | மரணபயம் உண்டாகும். துன்பங்கள் வந்து சேரும். பாவம் வந்து சேரும். கடன் உண்டாகும். |
1. | நெய் | கடன் தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். கிரகதோஷம் நீக்கும். செல்வம், சுகம் தரும். |
2. | நல்லெண்ணெய் | நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நவகிரகங்களின் அருள் உண்டாகும். தாம்பத்ய உறவு சிறக்கும். அனைத்து பீடைகளும் விலகும். |
3. | தேங்காய் எண்ணெய் | அனைவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும். துணிவு உண்டாகும். மனத்தெளிவு உண்டாகும். |
4. | விளக்கெண்ணெய் | புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும். தேவதை வசியம் உண்டாக்கும். அனைத்து செல்வங்களும் உண்டாகும். |
5. | வேப்ப எண்ணெய் | கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களின் உதவி கிடைக்கும். இல்லற இன்பம் அதிகரிக்கும். |
6. | இலுப்பை எண்ணெய் | காரிய சித்தி உண்டாகும். |
7. | வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் | சகல ஐச்வர்யங்களும் உண்டாகும். |
8. | நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் | செல்வம் சேரும். குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றது. |
9. | விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய் | பராசக்தி அருள் உண்டாக்கும். மந்திர சித்தி தரும். கிரகதோஷம் நீக்கும். |
குறிப்பு: கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை.
தெய்வங்களும் அவற்றிற்குரிய எண்ணெய்களும்:
விநாயகர் | தேங்காய் எண்ணெய் |
திருமகள், முருகன் | நெய் |
குலதெய்வம் | வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய் |
பைரவர் | நல்லெண்ணெய் |
சக்தியின் வடிவங்கள் | விளக்கெண்ணெய் + வேம்பெண்ணெய் + தேங்காய் எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + பசுநெய் |
ருத்ர தெய்வங்கள் | இலுப்பை எண்ணெய் |
எல்லா தெய்வங்கள் | நல்லெண்ணெய் |
நாராயணன் | நல்லெண்ணெய் |
விளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்:
இலவம் பஞ்சுத்திரி | சுகம் தரும். |
தாமரைத்தண்டு திரி | முன்வினை நீக்கும். செல்வம் சேரும். திருமகள் அருள் உண்டாகும். |
வாழைத்தண்டு திரி | மக்கட்பேறு உண்டாகும். மன அமைதி உண்டாகும். குடும்ப அமைதி உண்டாகும். தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும். குழந்தைப்பேறு உண்டாகும். |
வெள்ளெருக்கு திரி | செய்வினை நீங்கும். ஆயுள் நீடிக்கும். குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும். |
பருத்தி பஞ்சுத்திரி | தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும். வம்சம் விருத்தியாகும். |
வெள்ளைத்துணி திரி | அனைத்து நலங்களும் உண்டாகும். |
சிவப்பு துணி திரி | திருமணத்தடை நீக்கும். மக்கட் பேறு உண்டாகும். |
மஞ்சள் துணி திரி | எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். அம்பிகையின் அருள் உண்டாகும். வியாதிகள் நீங்கும். செய்வினை நீங்கும். எதிரிகள் பயம் நீங்கும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும். மங்களம் உண்டாகும். |
பட்டுத்துணி திரி | எல்லா சுபங்களும் உண்டாகும். |
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்:
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.
செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
முன்பிறவி பாவம் நீக்கும் தீபம்:
வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர்.
பொதுவான விதிமுறைகள்:
- விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
- பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
- விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
- இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். இது கணவன் – மனைவி ஒற்றுமை உண்டாக்கும்.
- ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
- தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!
பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’
விளக்கேற்றிய பின்பு பின்வரும் தேவாரப்பாடலை பாடவும்.
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
இப்பதிவினை எழுத தூண்டிய அருட்பெரும்சோதி கண்ட வள்ளல் ராமலிங்க அடிகளின் பாதம் பணிந்து அவருக்கு இப்பதிவு சமர்ப்பிக்கப் படுகிறது.
அகர தீபமோ குகநாதம்
உகர தீபமோ கணநாதம்
மகர தீபமோ பூதநாதம்
மகா தீபமோ சிவநாதம்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
excellent
ReplyDeleteமிக்க நன்றி...!
DeleteVery comprehensive detailed information. Thanks for sharing.
ReplyDeleteநன்றிகள் அனைத்தும் இறைவனையே சாரும்...! தங்களின் கருத்துரைக்கு நன்றி...!
Deleteமேல் நோக்கிய தீபம் அதாவது விளக்கின் நடுவில் திரியிட்டு தீபம் ஏற்றலாமா.?
ReplyDeleteதாராளமாக ஏற்றலாம்.
Delete