நாம் மேலே பார்க்கும் தெய்வம் சப்த மாதாக்களில் ஒருவளும், வராக மூர்த்தியின் தங்கையும், 64 யோகினிகளில் ஒருவளும், உன்மத்த பைரவரின் துணைவியுமான வலிமை மிக்க வாராகி ஆவாள்.
பன்றி முகத்துடன் காட்சி தரும் அன்னை வாராகி, பராசக்தியின் படைத்தலைவி ஆவாள். பராசக்தியின் முக்கிய அமைச்சரும் இவளே. வாராஹம் எனப்படும் பன்றியின் முகத்தை கொண்டதனால் வாராகி என்றழைக்கப்படுகிறாள். இவள் திருமால், அம்பிகை மற்றும் சிவன் ஆகிய மூன்று கடவுளரின் அம்சம் ஆவாள். எருமையை வாகனமாக கொண்டவள்.
பெண் தெய்வம் ஆதலால் அம்பிகையின் அம்சம், வாராஹ முகம் கொண்டதனால் திருமாலின் அம்சம், மூன்று கண்களை கொண்டதனால் சிவபெருமானின் அம்சம் ஆவாள். எதையும் அடக்கும் வல்லமை உடையவள். சப்தமாதர்களில் மிகவும் வேறுபட்டவள். பலத்தில் மிருக பலம் கொண்டவள். குணத்தில் தேவகுணத்தை கொண்டவள். தன்னை அண்டிவயர்களின் துயரை போக்குபவள். ஊழிக்காலத்தில் உலகை பாதுகாத்த பெருமை இவளையே சாரும்.
திருமாலின் வராக அவதாரத்தில் திருமாலுக்கு பெரிதும் துணை புரிந்த பெருமை இவளுக்குண்டு. இவளின் துணையில்லாமல் வராகமூர்த்தி உலகை தன் கோரைப்பற்களால் தாங்கியிருக்க முடியாது. தேவர்கள், அசூரர்கள் மற்றும் மனிதர்கள் இவர்களால் போற்றப்படுவள் இவளே. மிகவும் துடிப்பானவள். மிகவும் வேகமானவள். சப்தமாதர்களில் ஐந்தாவதாக தோன்றியவள்.
கோபத்தில் உச்சம் இவளே. அன்பு காட்டுவதிலும், ஆதரவு காட்டுவதிலும் இவளுக்கு நிகர் இவளே. பராசக்தி வாராகியின் துணை கொண்டே 14 உலகங்களையும் வெற்றி கொண்டாள். பண்டாசூரனை பராசக்தி வதம் செய்ய துணை புரிந்தவள் இவளே.
எதிரிகளை அழிப்பவள். செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள். பயத்தினை போக்குபவள். வெற்றியைத் தருபவள். எல்லா நலன்களையும் தருபவள். ராசராச சோழனின் வெற்றி தெய்வம் இவளே. இவளை வழிபட்டே ராசராசன் எல்லா நாடுகளையும் வெற்றி கொண்டான். ராசராசனுக்கு தோல்வியில்லா நிலையை தந்தவளும் இவளே.
நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப வி்வசாதயத்தின் தெய்வம் இவளே. கலப்பை இவளது ஆயுதம். பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருவானைக்கா தலத்தின் நாயகி அகிலாண்டேஸ்வரி வாராகியின் வடிவமே. ராசராச சோழன் இவளை வழிபட்டே எக்காரியத்தை தொடங்குவான் என்று வரலாறு தெரிவிக்கிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பிருந்தே வாராகி வழிபாடு செய்திருக்கிறான் ராசராச சோழன்.
இன்றும் தஞ்சை பெரிய கோவிலில் ஒரு வழக்கம் உண்டு. பொதுவாக எல்லா கோவில்களிலும் முதலில் விநாயகருக்குத் தான் வழிபாடுகள் நடக்கும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் முதலில் வாராகிக்குத் தான் பூசைகள் நடக்கும். சோழர்களின் குலதெய்வம் துர்க்கை. துர்க்கையின் தளபதி வாராகி ஆவாள்.
சோழர்களின் காலத்தில் வாராகி வழிபாடு சிறந்து விளங்கியது. வாராகியின் கலப்பை ஆயுதம் விவசாயத்தினை பெருக்கும் தன்மையுடையது. இவளின் அருள் பெற்றவர் விவசாயத்தில் சிறந்து விளங்குவர் என்பது எமது அனுபவ உண்மை. காலப்போக்கில் இவளின் வழிபாடு குறைந்து விட்டது. அதனால் தான் விவசாயம் மோசமான நிலையை எய்தியுள்ளது.
வாராகியை வழிபட்ட சோழர்கள் விவசாயத்தில் சிறந்து விளங்கினர். அதனால் தான் சோழநாடு சோறுடைத்து என்றழைக்கப்பட்டது. சோழர்கள் வாராகியின் அருள் கொண்டே போர்களில் வெற்றி வாகை சூடினர். சோழ நாட்டில் மக்கள் எதிரிகளின் தொல்லையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்தனர்.
இப்போதைக்கு தேவை நாம் ஒவ்வொருவரும் வாராகி வழிபாடு செய்வது தான். வாராகி வழிபாடு செய்வதன் மூலம் நம் பாரத நாட்டினை எதிரிகளிடமிருந்து காக்க முடியும். நம் நாட்டினை விவசாயத்தில் முதலிடம் பிடிக்க செய்து உலகிற்கே உணவளிக்க முடியும். வாராகியை வழிபடுவது மிகவும் எளிது. பக்தர்கள் அழைத்தால் ஓடோடி வருவாள்.
வாராகியின் 12 திருப்பெயர்களை அனுதினமும் துதித்தால் எவ்வித துன்பமும் நேராது என்பது உண்மை. எல்லா செயல்களும் வெற்றியுடனே தான் முடியும். வாராகியின் 12 திருப்பெயர்கள்:-
- பஞ்சமி
- தண்டநாதா
- சங்கேதா
- சமேச்வரி
- சமய சங்கேதா
- வாராகி
- போத்ரிணி
- சிவா
- வார்த்தாளி
- மகா சேனா
- ஆக்ஞா சக்ரேஸ்வரி
- அரிக்நி
பஞ்சமி நம் பஞ்சத்தை போக்குவாள். தண்டநாதா தவறு செய்வோரை தண்டிப்பாள். மகா சேனா எதிரிகளை அழிப்பாள். ஆக்ஞா சக்ரேஸ்வரி நம் ஞானக்கண்ணை திறப்பாள்.
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
மந்திரம்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
வாராகிக்கு பல வடிவங்கள் உண்டு. இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.
வாராகி மாலை என்றொரு 32 பாடல்கள் கொண்ட சிறப்பான நூல் இவளின் பெருமைகளை கூறுகிறது. வாராகி மாலை தனிப்பதிவாக வெளி வரும்.
ஓம் வாம் வாராஹி நமஹ
ஓம் சிவ சக்தி ஓம்
No comments:
Post a Comment