Saturday, August 31, 2013

வேலூரின் நாயகன் - அருள்மிகு ஜலகண்டீஸ்வரர்

 
 

இன்று (31-8-2013) திருவாதிரை திருநாள்.  இன்று எல்லாம் வல்ல எம் இறைவன் - குருபரன் - சிவபெருமானின் பிறந்த விண்மீன் - திருவாதிரை.  இத்தகைய சிறப்புடைய இந்நன்னாளில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வரரின் பெருமைகளை உங்களுக்கு வழங்குவதில் ஆன்மீகச்சுடர் பெருமை கொள்கிறது.

வேலை மாநகர் என்று சிறப்பித்து கூறப்படும் வேலூரின் புராண பெயர் வேலங்காடு.  வேல மரங்கள் அதிகம் காணப்பட்ட காடு.  இதில் தான் அத்திரி முதலான ஏழு முனிவர்கள் வேலூருக்கு கிழக்கே உள்ள பகவதி மலையில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.  இதில் அத்திரி மகரிஷியைத் தவிர மற்றவர் வேறிடம் சென்றுவிட்டனர்.  அத்திர் முனிவர் மட்டும் சில காலம் வழிபாடு நடத்தி வந்தார்.  பின்னர் அவரும் சென்றுவிட்டார்.  நாளடைவில் அவர் வழிபட்ட சிவலிங்கம் கவனிப்பாரற்று கிடந்தது.  அதை சுற்றி புற்று வளர்ந்து மூடிவிட்டது.

பொம்மி ரெட்டி நாயக்கர் மற்றும் திம்மி ரெட்டி நாயக்கர் என்பவர்கள் வேலூர் மக்களை கொள்ளைக்கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றியதால் அரசர் அவர்கள் இருவருக்கும் சிறு படையையும், பரிசாக நிலங்களையும் வழங்கினார்.  அவர்கள் அதில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப முனைந்தனர்.  சிவபெருமான் ஐந்து தலை நாகமாக வந்து ஐந்து காம்புகள் கொண்ட பசுவின் மடியில் பால் குடிக்க, அதைக்கண்ட பொம்மி ரெட்டி அங்கேயே உறங்கினார்.  கனவில் சிவபெருமான் தான் தான் அந்த நாகம் என்பதை எடுத்துரைத்தார்.

இறைவனிடம் பொம்மி ரெட்டி ஆலயம் எழுப்பும் எண்ணத்தை எடுத்துரைக்க, இறைவன் வேலூரை அடுத்த பள்ளிகொண்டராயன் மலையில் ஒரு புதையலை காண்பித்தார்.  மக்களின் துணையோடு அந்த புதையல் மூலம் கோவிலை கட்ட ஆரம்பிக்கும் போது அங்கிருந்த வேலமரக்காட்டினை அழிக்க நேரிட்டது.  அப்போது ஒரு புதரிலிருந்து முயல்கள் வெளிப்பட்டன.  அவற்றை ஒரு நாய் துரத்தியது.  அவை சிறுவட்டப்பாதையில் சுற்றின.  சற்று நேரத்தில் முயல்களில் ஒன்று நாயை திரும்பி நின்று பெரிய வட்டப்பாதையில் துரத்த ஆரம்பித்தது.  பின்பு அவை ஒரு புற்றினுள் சென்று மறைந்தன.

அப்போது வானில் தெய்வ வாக்கு “சிறு வட்டப்பாதையை எல்லையாக வைத்து கோவில் எழுப்புக” என்று கட்டளையிட்டது.  அப்புற்றினுள் அத்திரி முனிவர் வழிபட்ட லிங்கம் இருந்தது.  அதை சுற்று கோவில் அமைக்கப்பட்டது.  ஆலயம் எழுப்பிய நாள் சரியில்லாததால் வழிபாடு தடைபடும் என்று இறைவன் கனவில் உரைத்தார்.  அதற்கு பரிகாரமாக முயல் நாயை துரத்திய பெரிய வட்டப்பாதையில் ஒரு கோட்டையையும், அதைச் சுற்றி அகழியையும் அமைக்க சிற்பி கூறினார்.

அவ்வாறே கோவிலும், கோட்டையும், அதனைச் சுற்றி அகழியும் அமைக்கப்பட்டு வழிபாடு நிகழ்ந்து வந்தது.  கி.பி 1612 ம் ஆண்டில் முகலாயர் படையெடுப்பில் ஜலகண்டீஸ்வரர் கோவில் லிங்கத்தின் அடியில் உயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாக கேள்விபட்டான்  முகலாய அரசன் மகமதுகானுக்குப் பின் வந்த அரசன் அப்துல்லா.  அவன் லிங்கத்தை அகற்றி அகழியில் எறிந்தான்.  அதனால் அவனுடைய ஆட்சி வெகு நாள் நீடிக்கவில்லை.  அந்த அரசர்களின் பெயர்களில் இன்றும் மகமதுபுரம் மற்றும் அப்துல்லாபுரம் ஆகிய ஊர்கள் அமைந்திருக்கின்றன.

அதன் பின்னர் மராட்டிய மன்னர் துக்கோஜிராவ் கோட்டையை முற்றுகையிட்டு வென்றார்.  அகழியில் இருந்த சிவலிங்கத்தை மீண்டும் நிறுவினார்.  இரண்டாண்டுகள் கழித்து சுல்தான்கள் மீண்டும் கோட்டையை பிடித்தனர்.  21 ஆண்டுகளாக ஆலயத்தில் வழிபாடு நடக்கவில்லை.  பின்னர் மராட்டிய மன்னர் சீனிவாசராவ் வேலூர் கோட்டையை வென்றார்.  அவருக்குப்பின் 30 ஆண்டுகள் வழிபாடு இனிதே நடந்து வந்தது.

18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மீண்டும் முகலாயர் படையெடுப்பில் லிங்கத்தினை சேதப்படுத்தி விடுவர் என்று பயந்த இந்து வீரர்கள் லிங்கத்தினை வேலூரை அடுத்த சத்துவாச்சாரி என்னும் இடத்தில் ஜலகண்டீஸ்வரர் கோவில் லிங்கம் என்ற பெயரில் இருந்து வந்தது.  அதன் பின்பு 1928 ல் புருஷோத்தமன் என்கிற பேருந்து நடத்துநர் மறுபடியும் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய நினைத்தார்.  அந்த முயற்சி 16-03-1981 அன்று நிறைவுற்றது.

இக்கோவிலின் மறுவழிபாட்டிற்கு அரும்பாடுபட்டவர்களின் விபரம் தனிப்பதிவாக வெளிவரும்.


இக்கோவில் மூலவரின் பெயர் ஜ்வரகண்டீஸ்வரர் ஆவார்.  நாளடைவில் அப்பெயர் ஜலகண்டீஸ்வரர் என்று வழங்கலாயிற்று.  லிங்க பீடத்தின் அடியில் தண்ணீர் இருப்பதாக ஐதீகம்.  எனவே தான் ஜலகண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.  அம்மையின் பெயர் அகிலாண்டீஸ்வரி.  இத்தலத்தில் கார்த்திகை மாதம் தீபத்திருநாளன்று மும்மூர்த்திகளும் வீதியுலா செல்வர்.  மேலும் முப்பெரும்தேவியரும் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

இத்தலம் காசிக்கு நிகரானது.  இங்குள்ள பைரவரின் எதிரே கங்கா - பாலாறு ஈஸ்வரரும், கிணறு வடிவில் கங்கை நதியும் அமைந்துள்ளது சிறப்பு.  காசியைப் போலவே கால பைரவர், சிவ லிங்கம் (கங்கா - பாலாறு ஈஸ்வரர் - கிணறு வடிவில் தோன்றிய கங்கை நதியில் கிடைத்த லிங்கம்), கங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது.  இத்தலத்து கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

இத்தலத்து கால பைரவர் பெருமானைப் பற்றி தனிப்பதிவு விரைவில் வெளிவரும்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடக்கும்.  அம்பிகையின் எதிரே அணையா நவசக்தி தீபம் ஒளிவிடுகிறது.  இத்தலத்து இறைவன் தொழில் மேன்மையைத் தருவார்.  இனிய வாழ்க்கை துணையைத் தந்தருளுவார்.  அவரின் கருணையை சொல்ல ஒரு நாக்கு போதாது.  வழிபட்டு பலன் அடைந்தவர்களின் அனுபவமே இதற்கு சாட்சி.

இந்த ஆலயம் வேலூர் மாநகரின் மையப்பகுதியான பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கோட்டையினுள் அமைந்துள்ளது.  கோட்டையை சுற்றியுள்ள இடத்தில் வணிக தலங்கள் நிரம்பியுள்ளன என்பது இத்தலத்து இறைவனின் கருணைக்கு ஓர் சான்று.  இத்தலத்தை சுற்றியுள்ள வணிகர்கள் அனைவரும் இறைவனை வழிபட்டே தொழிலில் மேன்மை பெற்றுள்ளார்கள் என்பது வேலூர் மக்கள் அறிந்ததே.

தங்கபல்லி மற்றும் வெள்ளி பல்லிகள் மற்றும் சூரிய, சந்திரர்களை விழுங்கும் ராகு, கேது சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  பல்லி தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இச்சிற்பங்களை தொட்டு வணங்கி தோஷ நீக்கம் பெறுகின்றனர்.  இத்தலத்தில் வயதான தம்பதிகள் தங்கள் 60ம் மற்றும் 70ம் திருமண நிறைவு விழாக்கள் நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், அன்னைக்கு சாகம்பரி அலங்காரமும் மிக்க விசேடமானது.  இத்தலத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள குளத்திற்கும்  வேலூருக்கு அருகிலுள்ள விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில் சிம்ம குளத்திற்கும் இடையே சுரங்கப்பாதை உள்ளதாக செவிவழி செய்தியும் உண்டு.  பாலாற்றின் கரையில் அமைந்த சிவத்தலம் என்பது தனிச்சிறப்பு.  பாலாற்றங்கரையி்ன் தென்கரைத்தலம் ஆகும்.

தொடர்வண்டி வழி: காட்பாடி சந்திப்பில் இறங்கி நகர பேருந்து தடம் 1 அல்லது 2 ல் ஏறி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினால் இக்கோவிலை அடையலாம்.  பேருந்து வழி:  புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து தடம் 1 அல்லது 2 ஏறி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கினால் இக்கோவிலை அடையலாம்.

வேலை மாநகர் வருக...!  கோட்டை நாயகன் அருள் பெருக...!

ஓம் ஹ்ரீம் ஜ்வரகண்டீஸ்வராய நமஹ

ஓம் ஹ்ரீம் ஜலகண்டீஸ்வராய நமஹ

ஓம் கோட்டை நாயகனே போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி...!  
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!! 
ஓம் சிவ சிவ ஓம்

No comments:

Post a Comment