Friday, August 30, 2013

செல்லியம்மன் துணை



     வேலூர் மாநகரின் எல்லை தெய்வம் - செல்லியம்மன்

 தொண்டை மண்டலத்தின் சிறப்புமிகு ஊர் வேலூர் ஆகும்.  சான்றோர்கள் தோன்றிய ஊர் ஆகும்.  கோட்டை நாயகன் அருள்மிகு  ஜலகண்டீஸ்வரரும், அம்மை அகிலாண்டேஸ்வரியும் அருள்புரியும் தலம்.  கல்வி மாநகர் என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

 வேல மரங்கள் அதிகமாக வளர்ந்திருந்த காடு பின்பு வேலூர் என்று அழைக்கப்பட்டது.  பழைய பெயர் வேலை மாநகர்.  ராய வேலூர் என்பது இதன் வரலாற்று பெயர்.  அத்திரி முனிவர் தவமியற்றிய தலம் வேலூர்.  ராய மன்னர்களின் தலைநகர் வேலூர்.

 ஆங்கிலேயர்களின் தலைமையிடமாக விளங்கிய நகரம் வேலூர் ஆகும்.  வீரம் விளைந்த மண் வேலூர் ஆகும்.  இங்கு தோன்றிய சிப்பாய் புரட்சி இந்திய திருநாட்டின் விடுதலைக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 இத்தகைய சிறப்பு மிகு வேலூரின் எல்லைத் தெய்வம் செல்லியம்மன் ஆவாள்.  அன்னை செல்லியம்மன், ஷீரமாநதி என்று சிறப்பித்து கூறப்படும் பாலாற்றின் தென்கரையில் வீற்றிருந்து வேலூரின் எல்லை தெய்வமாக, காவல் தெய்வமாக வேலூரை காத்து வருகிறாள்.

 செல்லியம்மனின் ஆலயம் பாலாற்றின் தென்கரையில், புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகே அமைந்துள்ளது.  தனியார் பேருந்து உரிமையாளர்களால் உருவாக்கப்பட்ட இத்தலம் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

 வெள்ளிக்கிழமை மற்றும் விசேட நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.  தொழில் சிறக்க வேண்டுவோர் தொடர்ந்து செல்லியம்மனை வழிபடின் தொழிலில் மேன்மை பெறுவர் என்பது திண்ணம்.  சிறு கோவிலாக இருந்த இத்தலம் தற்போது பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.


 வேலூர் வருபவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் செல்லியம்மன் கோவில் ஆகும்.  வெளியூர் அன்பர்கள் பேருந்தில் வந்தால் எல்லோரும் எளிதில் தரிசிக்கலாம்.  தொடர்வண்டி மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலைய நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடந்து மறுமுனைக்கு சென்றால் செல்லியம்மனை தரிசிக்கலாம்.

 வெளியூர்களிலிருந்து பேருந்தில் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கவும்.  பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தான் கடைசியாக சென்று நிற்கும்.  அருகில் உள்ள தொடர்வண்டி சந்திப்பு காட்பாடி.  காட்பாடி சந்திப்பிலிருந்து ஏற வேண்டிய பேருந்து எண்கள்: 1,2.  இறங்க வேண்டிய நிறுத்தம் புதிய பேருந்து நிலையம்.

 வேலூர் வரும் போது செல்லியம்மனை தரிசியுங்கள்.  அம்மையின் அருள் பெற்று வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்.

ஓம் செல்லியம்மையே போற்றி

No comments:

Post a Comment