Wednesday, August 28, 2013

ரேணுகா தேவி துணை


எம் குலதெய்வம் - படைவீடு ரேணுகாம்பிகை

 


தட்சன் தான் செய்யும் யாகத்திற்கு தனது மருமகனான சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல் அவமதித்தான்.  சிவபெருமானின் சொல் கேளாமல் சென்ற சதி தேவி தன் தந்தையான தட்சனால் அவமதிக்கப்பட்டாள்.  அதனால் கோபமுற்ற தாட்சயனி யோக நிலையில் தன் உயிரை விட்டாள்.  இதனால் பித்து பிடித்த சிவபெருமான் தேவியின் உடலை தோளில் சுமந்தவாறே அலைந்து திரிந்தார்.

சிவன் தேவியின் உடலை தூக்கிக்கொண்டு தாண்டவமாட தேவியின் உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றாக சிதறி விழுந்தன.  அவ்வாறு சிதறி விழுந்த இடங்களிலெல்லாம் சக்தி பீடங்கள் தோன்றின.  ரத்த துளிகள் விழுந்த இடங்கள் அம்மனின் சிறு சிறு கோவில்களாக தோன்றின.

அவ்வாறு தோன்றிய சக்தி பீடமே மகாராஷ்டிர மாநிலம், நான்தேட் மாவட்டம், மாஹுர்கட் என்ற இடத்தில் உள்ள ரேணுகா தேவி ஆலயம் ஆகும்.  மந்திர நூல்களில் வர்ணிக்கப்படும் ரேணுகா தேவி, சக்தியின் அம்சம்.  அந்த சக்தியின் அம்சமான ரேணுகா தேவி, துர்க்கை ஆகியோர் தன் படைகளுடன் வந்து தங்கிய இடமே திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம், சந்தவாசல் அருகே அமைந்திருக்கும் படைவீடு என்றழைக்கப்படும் அம்மன் கோவில் படைவீடு ஆகும்.  இதற்கு பெரிய கோட்டை என்று பெயர்.  கோட்டை அம்மன் என்பது இத்தலத்து தேவியின் வேறு பெயர் ஆகும்.

காலப்போக்கில் வரலாறு திரிக்கப்பட்டு ரேணுகா தேவி, ஜமதக்கினி முனிவரின் மனைவியாகவும், பரசுராமரின் அன்னையாகவும், கந்தர்வனின் அழகில் மயங்கியதாகவும், அதன் பின்னர் தலை வெட்டுண்டு மறுபடியும் உயிர்தெழுந்ததாகவும் கதைகள் உண்டு.

மந்திர நூல்களில் வர்ணிக்கப்படும் ரேணுகா தேவி முழு உடலை உடையவள்.  சக்தியின் அம்சம்.  கிரீடத்தில் சிவ லிங்கத்தை உடையவள்.  தலையை மட்டும் வழிபாடு செய்யும் வழக்கம் இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. 

இப்பதிவில் காணும் ரேணுகா தேவியின் (அம்மன் கோவில் படைவீடு) படத்தில் தலைக்கு மட்டுமே வழிபாடு நடத்தப்படுகிறது.  உண்மையில் அது தலை அல்ல.  அது சுயம்பு லிங்கம்.  அந்த லிங்கத்தின் பெயர் சக்தி லிங்கம்.  

மேலும் அதனருகே மூன்று லிங்ககங்கள் உண்டு.  அவையே பிரம்ம லிங்கம், விஷ்ணு லிங்கம், சிவ லிங்கம்.  இம்மூன்றும் சுயம்பு லிங்கங்களே என்பதும் முக்கியமானது.

சக்தி லிங்கத்திற்கு வலப்புறம் இருப்பது சிவ லிங்கம்.  இடப்புறம் இருப்பவை பிரம்ம லிங்கம் மற்றும் விஷ்ணு லிங்கம்.  அதற்கும் இடப்புறம் இருப்பது சிரசு.

சிமெண்டினாலான சுதை வடிவமும், சிரசு வழிபாடும் பிற்காலத்தில் ஏற்பட்டவை.  சிரசு தனியாக இருப்பதை கவனிக்கவும்.  இக்கோவிலின் முன்பாக சிம்ம வாகனத்திற்கு பதிலாக நந்தி இருப்பதும் முக்கியமான ஒன்றாகும்.

ஆடி மாதம் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு.  ஆடி மாதம் தொடங்கி ஏழு வெள்ளிக்கிழமைகளும் கூட்டம் அலை மோதும்.  தற்போது இக்கோவில இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

முருகன், ராமன், ராவணன் மற்றும் ஆதி சங்கரர் வணங்கி வழிபட்ட பெருமையுடையது இத்தலம்.  இத்தலத்திற்கு பக்கத்தில் சிவன் கோவில் உள்ளது.  இக்கோவிலைச் சுற்றி நிறைய கோவில்கள் அமைந்துள்ளன.

மிக்க சக்தி வாய்ந்த தெய்வம் இத்தலத்து ரேணுகா தேவி.  பிள்ளைவரம் கேட்டவர்களுக்கெல்லாம் ஆண் மக்கட்பேறு தந்தருளும் அம்பிகை இத்தலத்து இறைவி.  இத்தகைய சிறப்புடைய ரேணுகா தேவியை வணங்கி சக்தியின் அருள் பெருவோம்.

வேலூர் - திருவண்ணாமலை சாலை தடத்தில் இறங்க வேண்டிய நிறுத்தம்: சந்தவாசல்.  அங்கிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.  நேரடி பேருந்துகள் குறைவு.

ஓம் கோட்டை நாயகியே போற்றி

ஓம் ஹ்ரீம் ரேணுகா தேவியை நமஹ

ஓம் சிவ சக்தி ஓம்

No comments:

Post a Comment